மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று தமிழ்நாட்டில் பரபர விவாதங்கள் நடைபெறும் வேளையில், ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ஆந்திராவில் வெளிவரும் ‘சாக்‌ஷி’ (விட்னஸ்) பத்திரிகையில், '16 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெயலலிதா தன் சொத்துக்களை இரத்த உறவுகளின் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டார்' என செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2000 ஜூலை 14ம் திகதி அன்று டாக்குமென்டரி புத்தகத்தில் 3132ம் எண்ணில் ஹைதராபாத், பஷிராபாத் ஜெ.ஜெ. கார்டன் முகவரியில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு சசிகலா, தினகரன், பாஸ்கரன், புவனேஸ்வரி என நான்கு நபர்களை நிர்வாகிகளாக நியமித்தார். அதன் பின்பு சந்தேகம் தோன்றவே 'சாரிடபிள் செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் நிர்வாகிகள் என்னைக் கலந்து ஆலோசித்த பிறகே செயல்பட வேண்டும்' என்று ஜெயலலிதா அறிவித்தார்.

தொடர்ந்து 2001இல் டிரஸ்ட் செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது திடீரென ஹைதராபாத் திராட்சை தோட்டத்துக்கு விஜயம் செய்தவர், அந்த டிரஸ்டை கலைத்தார். நிர்வாகிகளையும் நீக்கினார். ஹைதராபாத்தில் உள்ள ரிஜிஸ்ட்ரேஷன் அலுவலரை தனது ஜெ.ஜெ.கார்டன் இல்லத்துக்கு வரவழைத்தார். முன்பு உருவாக்கிய, ‘நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்'  அறக்கட்டளை அமைப்புக்குப் பதில் பிரைவேட் கமிட்டியை உருவாக்கி அதை தனது இரத்த உறவினர்களின் பெயரில் அமைத்தார்.

தமிழ்நாட்டில் அந்த நடவடிக்கையை மேற்கொண்டால், அது எப்படியேனும் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காக எச்சரிக்கை உணர்வோடு ஆந்திரா சென்று அங்குள்ள முகவரியில் தனது உயில் விவரங்களை எழுதிவைத்திருக்கிறார்' என்று அந்த பத்திரிகையில் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து அந்த பதிவு அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அந்த உறவினர்களின் பெயர்களை குறிப்பிட முடியாது என்று’ மறுத்துவிட்டனர்.

சம்மந்தப்பட்ட எவரேனும் ஊர்ஜிதப்படுத்தாத வரை, இப்படியான குபீர் தகவல்கள் வெளியான வண்ணமே இருக்கும்! சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் இரகசியங்கள் அடங்கிய கருவி ஒன்று இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.