(எம்.சி.நஜிமுதீன்)

அம்பாந்தோட்டை துறைமுக விற்பனை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஹொங்கொங்கில் நடைபெற்றுள்ளது. அதன்போது துறைமுக விற்பனையினை அடிப்படையாகக்கொண்டு மோசடியாக 100 மில்லியன்  அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. எனவே குறித்த நிதி மோசடி தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெறுமதிவாய்ந்த துறைமுகம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் 80 வீதமான பங்கு 1.1 பில்லியன்  அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் துறைமுகத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு தெரியாமலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆகவே குறித்த உடன்படிக்கை சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஹொங்கொங்கில் பேச்சுவார்ததை நடத்தப்பட்டுள்ளது.  அதன்போது துறைமுக விற்பனையினை அடிப்படையாகக்கொண்டு மோசடியாக 100 மில்லியன்  அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது. 

எனவே குறித்த 100 மில்லியன் அமெரிக்க டொலர்  நிதி மோசடி தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.