நாட்டில் கடந்த ஐனவரி 8 ஆம் திகதி இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொதுமக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என வலியுறுத்தி எதிர்வரும் ஐனவரி 2 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை கறுப்புக்கொடிகளை ஏந்தி எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக துய்மையான ஹெல உறுமைய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மனபில தெரிவித்தார்.

பிடகோட்டே தூய்மையான ஹெல உறுமைய கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக கூறியும் அவற்றை நிவர்த்தி செய்து நாட்டின் பொது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக தெரிவித்துமே கடந்த மஹிந்த ராஐபக்ஷ அரசாங்கம் வீழ்த்தப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் ஆட்சி அமைத்த அரசாங்கத்தினாலும் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் ஒன்றுமில்லை. அதனால் ஒன்றிணைந்த எதிர்கட்சியாக தொடர்ந்தும் நாம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம்.

எமது நாட்டின் மிக மோசமான சம்பவம் ஒன்று இடம் பெற்ற நாள் என்று கடந்த ஐனவரி 8 ஆம் திகதியை குறிப்பிட வேண்டும். அந்த தினத்தில் தான் எமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் இந்த தேசிய அரசாங்கம் தமது கொள்கையில் மாற்றம் இல்லாமலேயே பயணிக்கின்றது. அதனால் நாமும் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளளோம். அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஐனவரி 2 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை கறுப்புக்கொடி ஏந்தவுள்ளோம்.

அதேபோல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பில் மட்டுமன்றி பொருளாதாரம், கல்வி, சமூக நலன் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி என அனைத்து விடயங்களும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

அமைச்ர்கள் இந்த ஆட்சியில் சுகபோகமாக உள்ளமையினால் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிப்பர் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் எதிர்வரும் 2 ஆம் திகதி அரசின் பொருளாதார கொள்கையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கட்டாயமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்த வேண்டும்.

எவ்வாறாயினும் நல்லாட்சியில் மக்கள் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே எமது நிலைப்பாடு. அதனை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவே நாம் கறுப்புக்கொடி ஏந்தவுள்ளோம்.

அவ்வாறு கறுப்புக் கொடியேந்துவது அச்சுறுத்தல் என அஞ்சுபவர்கள் தமது முகப்புத்தகத்தின் அடையாள புகைப்படத்தை கருப்பு நிறமானதாக மாற்றியமைக்க வேண்டும். இந்த விடயத்தில் கட்சி பேதங்களும் தேவையில்லை.

அதேவேளை இந்த நாட்டை இரண்டாக பிளவு படுத்தியவர்களின் யுகத்தை ஐனவரி 2 ஆம் திகதி தொடக்கம் நாம் முடிவுக்கு கொண்டுவருவோம். அரசாங்கத்தை நம்பிச் சென்றவர்களே அதிகம் ஏமாற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் பயணம் நீண்டகாலம் தொடராது.

புதிய நாடொன்றை உருவாக்க எம்முடன் கைகோர்த்து மீணடும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்றார்.