தேரவாத பௌத்த தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்வதற்கு அரசாங்கம் உயர்ந்தபட்சம் அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று கொப்பேகடுவ, நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட வழிபாட்டு கூடத்தை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளாந்தம் வழிபாடுகளில் ஈடுபட்டாலும், மதபோதனைகளுக்கமைய வாழ்வதனூடாக மட்டுமே நல்ல மனிதர்கள் உருவாகுவார்களென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனிதர்கள் மதபோதனைகளை வாழ்க்கையில் பின்பற்றாமை காரணமாகவே சமூகம் சீரழிந்து போவதாகவும் குறிப்பிட்டார். 

மனக்கலக்கமுடைய மனிதர்கள் பௌத்த தர்மத்தினூடாக நிம்மதியடையலாம் எனவும் தற்போது மேற்குலகமும் பௌத்த தத்துவம் தொடர்பில் கூடுதலாக அக்கறை காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நெல்லிகல ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மதகுருமார்களைத் தரிசித்து நலன் விசாரித்ததுடன், அஸ்கிரிய மகாநாயக்க தேரர் அதி சங்கைக்குரிய வறகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த  ஞானரதனாபிதான தேரருக்கு காணிக்கைகளை வழங்கி, ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். 

நிகழ்வின் ஞாபகார்த்தமாக விகாரை வளாகத்தில் நெல்லி மரமொன்று ஜனாதிபதினால் நடுகை செய்யப்பட்டது.

அதன்பின்னர் வழிபாட்டு கூடத்தை திறந்து வைத்து, வழிபட்ட ஜனாதிபதி நெல்லிகல நுழைவுப் பாதை மற்றும் புத்த பிரானின் திருவுருவத்தையும் திறந்து வைத்தார்.

நெல்லிகல பௌத்த நிலையத்தின் நிறுவுனர் சங்கைக்குரிய வதுறகும்புறே தம்மரதன தேரரால் உலோகத்திலான புத்தபிரானின் திருவுருவமும் பௌத்த சாசனத்துக்கு ஜனாதிபதி ஆற்றும் பணியைப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவினால் நினைவுப் பரிசும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. 

விகாரை நிர்மாண பணிகளில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்காக பரிசில்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.