வடக்கில் பௌத்த விஹாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் வெளியிட்ட  கருத்துக்களால்  சபையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி.யுடன் வாதப் பிரதிவாதம் நடைபெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடைய உரையின்போது நான் கடந்த சில  தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது பௌத்த விகாரை அமைக்கப்படுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அதன் பின்னர் அவர்கள் கூறும் இடத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கு எந்த விகாரையும் அமைக்கப்படவில்லை. இராணுவத்தின் முகாம் ஒன்றினுள் புத்தர்சிலை ஒன்று மட்டுமே இருந்தது.   அதற்கு பக்கத்தில் இந்து ஆலயம் அதற்கிடையில் மதில் எழுப்பப்பட்டமையே எதிர்ப்புக்குக் காரணம். இல்லாத ஒரு பிரச்சினையை அங்குள்ள அரசியல்வாதிகள் ஏற்படுத்தினர். வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க முடியாது என்றார். அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வடக்கு மாகாண சபைக்கோ அதிகாரம இல்லை.

இச் சமயத்தில் எழுந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நான் ஜே.வி.பி. யின் கொள்கைகளுக்கும் உறுப்பினர்களுக்கும் மதிப்பளிப்பவன். அவ்வாறிருக்கையில் உங்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் என்னோடு வடக்கிற்கு வாருங்கள். எங்கெங்கு புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. என்பதை  நேரில் காட்டுகிறேன். அது மட்டுமன்றி தனியார் காணிகளில் உருவாக்கப்பட்டுள்ள எத்தனை முன்பள்ளிகளை  இராணுவம் நடத்துகின்றது. அந்த முன்பள்ளி சிறார்கள் இராணுவத்தின் சீருடையுடன் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நேரில் காட்டுகின்றேன். ஆகவே தயவு செய்து நீங்கள் தவறான கருத்தொன்றை இச் சபையில் முன்வைக்காதீர்கள் என்றார்.

சரி உறுப்பினரே அவ்வாறானால் அந்த பௌத்த விகாரைகள் எங்கே அமைந்துள்ளன. எப்போது அமைந்தன என்று கூறுங்கள். அண்மைய நாட்களிலே அமைக்கப்பட்டதா என்று விஜித ஹேரத் எம்.பி. கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சிறிதரன் எம்.பி. கிளிநொச்சியை பொறுத்தவரையில் ஒரேயொரு பௌத்த விகாரையே காணப்படுகின்றது. அது யுத்த காலத்தில் கூட பாதுகாக்கப்பட விகாரையாகும். அந்த பௌத்த விகாரையில் தமிழர் கூட வழிபட்டு வந்தனர். ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கனகாம்பிகை ஆலயத்திற்கு அருகிலும் பூனகரி கோட்டைக்கு அருகிலும் இரணைமடு அணைக்கட்டுக்கு அருகிலும் புத்தர் சிலைகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.

இச் சமயத்தில் குறுக்கீடு செய்த விஜித ஹேரத் எம்.பி. இவை எப்போது கட்டப்பட்டன? அண்மையில் கட்டப்பட்டவையா? என்று கேள்வி எழுப்பினார்.

இச் சமயத்தில் பதிலளித்த சிறிதரன் எம்.பி. நீங்கள் அண்மைய நாட்களில் நடைபெற்ற விடயங்களை கோருகின்றீர்கள். இவை அனைத்தும் 2009 இற்கு  பின்னர் தான் ஏற்பட்டன என்றார். அதன்போது விஜித ஹேரத்  அண்மைய  நாட்களில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவ்வாறிருக்கையில் விக்னேஸ்வரன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படக்கூடாது என தீர்மானம் எடுக்க முடியும். கூற முடியும். விக்னேஸ்வரன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படக் கூடாது என்று கூறியதுபோல் மேல் மாகாண முதலமைச்சர் இந்துக் கோயில்கள் கட்டக்கூடாது என முடிவெடுத்தால் எவ்வாறு நிலைமை செல்லும் என்றார்.

அக்கூட்டத்தில் நீங்கள் என்னுடன் வடக்கிற்கு வாருங்கள் நான் உங்களுக்கு விபரமாக காட்டுகின்றேன் என்றார் சிறிதரன் எம்.பி. எனினும் விஜித ஹேரத் அதற்கு மேலும் தனது தர்க்கத்தை நீடிக்காது தனது உரையைத் தொடர்ந்து சென்றார்.