கடமையை கைவிடாதீர்!

Published By: Ponmalar

03 Dec, 2022 | 10:38 AM
image

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை என்பது நிச்சயம் இருக்கும். அது ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு விடயத்தைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். கடமை என்பது நிச்சயமாக செய்து முடிக்க வேண்டிய ஒன்றாகக் காணப்படுகிறது. 

ஆனால், இதில் எத்தனை பேர் தத்தமது கடமைகளை சரியாகச் செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

கடமை என்ற விடயத்துக்குள், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான விடயங்களை செய்து கொடுத்தல், பெற்றோரை இறுதி காலம் வரை பராமரித்தல் போன்ற விடயங்களை பிரதானமாகக் கூறலாம். 

பிள்ளைகளுக்கு சரியாக கல்வி வழங்குதல் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதை பெரும்பான்மையான பெற்றோர் சரியாக செய்கிறார்கள் எனினும் சிலர் குடும்ப வறுமை காரணமாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத ஒரு சூழ்நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். எது எவ்வாறெனினும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டியது மிகவும் கட்டாயமானது. அதை பெற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 

அடுத்ததாக, பிள்ளைகளுக்கு இருக்கும் பாரிய பொறுப்பும் கடமையும் என்னவென்றால் வயோதிபத்தை நெருங்கியிருக்கும் தன் பெற்றோரை கவனித்துக் கொள்வது. 

அதை எத்தனை பிள்ளைகள் செவ்வனே செய்கிறார்கள் என்று கேட்டால், மிக மிகக் குறைவானவர்களே செய்கிறார்கள். மீதி பேர் வயோதிப இல்லத்தில் பெற்றோரை கொண்டு சேர்த்துவிட்டு அவர்களுக்கு மாதா மாதம் பணத்தை மாத்திரம் அனுப்பிவிடுகிறார்கள். அவர்களை பார்க்கச் செல்வதும் மிகவும் குறைவே. 

பிறந்ததிலிருந்து தனது கண்ணின் மணியைப் போல பிள்ளைகளை பார்த்துக்கொண்ட பெற்றோருக்கு பிள்ளைகளின் பரிசே முதியோர் இல்லம். 

அப்போது தெரிவதில்லை அவர்கள் தங்களின் பாரிய, தலையாய கடமையிலிருந்து விலகி நிற்கிறார்கள் என்று. 

இந்த இயந்திரமயமான உலகத்தில் எமக்கு நேரம் இல்லையென்றாலும் அதிகமான பணிச்சுமை காணப்பட்டாலும் எமது கடமைகளை ஒருபோதும் தவறவிடக்கூடாது.

ஒரு தந்தைக்கு பணிக்குச் சென்று வந்துவிட்டு குடும்பத்துக்கான செலவுகளை பார்த்துக்கொள்வது மாத்திரம் கடமையல்ல. மாறாக பிள்ளைகளின் பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். அவர்களின் பரீட்சை மதிப்பெண்களைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவும் கடமையே. 

எனவே ஒருபோதும் நாம் எமது கடமைகளை விட்டு விலகவே கூடாது. 

-து.சிந்துஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்