அவனால் குழப்பம் வருமோ!

Published By: Ponmalar

02 Dec, 2022 | 04:19 PM
image

கேள்வி:
நான் ஒரு பெண். வயது 20. என் வயதையொத்த ஒருவனை காதலித்தேன். என்னை விட அவன் குறைந்த சாதியைச் சேர்ந்தவன். எங்கள் வீட்டினர் சாதி வெறியர்கள். நானும் அவனும் தனிமையில் சந்தித்துக்கொண்டதுண்டு. எமது காதல் விவகாரம் தெரியவந்து எங்களை பிரித்துவிட்டார்கள். நானும் அவனும் கதைத்து ஆறு மாதங்களுக்கு மேலாகின்றது. என்னை வேறொரு ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள். அங்கு ஒரு நல்ல நிறுவனத்தில் ஐடி துறையில் பணியாற்றுகிறேன். எனது பணியை நான் மனம் விரும்பிச் செய்கிறேன். ஆனால், அவனை மறக்க முடியவில்லை. ஒரு துறவி போல் வாழ்கிறேன். அவனை தொடர்புகொண்டால், அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அவனுடன் பேசுவதில்லை. எனக்கு எதிர்காலத்தில் திருமணம் நிச்சயித்தால் அவனால் குழப்பம் வருமோ என்றும் பயமாக இருக்கிறது.

பதில்: 
ஆரம்பத்தில் அவர் மீதிருந்த அதேயளவு காதல் இன்னமும் உங்களிடம் இருக்கிறதா என்று உங்கள் மனதை கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக இருக்காது. அப்படி இருந்திருந்தால், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உங்களது திருமணத்துக்கு அவரால் தொல்லை ஏற்படுமா என்று சிந்தித்திருக்க மாட்டீர்கள்.

அதென்ன விசித்திரமோ தெரியவில்லை, இப்போதெல்லாம் வெவ்வேறு சாதி, மொழி, மதம், பொருளாதார அந்தஸ்து உடையவர்களிடமே காதல் பெரிதும் மலர்கிறது. காதலுக்கு கண்ணில்லைதான். சாதி, மதம், மொழி வேறுபாடுகள் களையப்படத்தான் வேண்டும் என்றாலும், காதலுக்குப் பின்னான வாழ்க்கை என்ற, மிக அவசியமாக சிந்தித்துப் பார்க்கவேண்டிய நடைமுறைப் பண்பை மறுதலித்துவிட்டு, காதலில் வீழ்வதால் இதுபோன்ற சிக்கல்கள் எழத்தான் செய்யும்.

உங்கள் பிரச்சினையை பொறுத்தவரையில், ஒரு பெரிய அனுபவத்தைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இந்த அனுபவம் தந்த பாடங்களை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தொழிலை நீங்கள் விரும்பிச் செய்வதால் அதுவே உங்களது காயங்களுக்கு மருந்தாகட்டும்.

வாழ்க்கை உங்களுக்குப் பிடித்த பாதையில் வெகுவிரைவில் பயணிக்கத் தொடங்கும். அப்போது உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்களுடன் கடைசி வரை பயணிக்கப்போகும் பிரயாணியை நீங்கள் சந்தித்தே தீர்வீர்கள். அதுவரை, பழையனவற்றை மறக்கப் பழகுங்கள். உங்களது ‘முன்னாள்’ காதலரால் உங்கள் திருமண வாழ்க்கைக்கு எந்தவித பங்கமும் நேராது என நம்புவோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்