முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். 

இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.

அப்பலோ வைத்தியசாலையில் இருந்து ஜெயலலிதா பூதவுடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பிறகு அவருக்கு அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.  

அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் பூதவுடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது. 

ஆயுதம்  தாங்கிய பொலிஸ் வாகனங்களுடன் ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது.  ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு,  காலை 6.10 மணியளவில் அவரது பூதவுடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கிற்கு வருகை தந்துள்ளதாகவும்,மேலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.