இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார்.

“ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிமட்டத்தில் இருந்து வீரர்களை உருவாக்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். ஹசன் திலகரட்ண, உப்புல் சந்தன  ஆகியோரின் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே துடுப்பாட்டத்திற்கு ஹசனையும் களத்தடுப்புக்கு சந்தனவையும் நியமித்துள்ளோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக துடுப்பாட்ட பயிற்சியை இலங்கை  ஏ அணி மற்றும் மாகாண அணிகளுக்கு வழங்க திட்மிட்டுள்ளோம்.

அந்தவகையில் உப்புல் சந்தன களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது களத்தடுப்பு அனுபவம் மற்றும் திறன்களை வீரர்களுக்கு பகிர்ந்து கொள்வார்.

இதுவொரு நீண்டகால திட்டம் என்பதுடன் வீரர்கள் இன்னும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவு போன்றன தேவைப்படுகின்றது.

தனஞ்சய, குஷல் மென்டிஸ் போன்ற வீரர்கள் அவுஸ்திரேலியா போன்ற அணிகளுக்கெதிராக நன்றாக விளையாடக் கூடியவர்கள். இவ்வாறான வீரர்களை உருவாக்கதுடன்  வீரர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கே இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஓட்டங்களை குவிப்பதால் தேசிய அணியில் வீரர்களை தெரிவுசெய்ய முடியாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தமது மூளையை பாவித்து தன்னம்பிக்கையுடன் விளையாடுபவர்களே எதிர்காலத்தில் தேசிய அணியில் இடம்பிடிப்பர் என அவர் மேலும் தெரிவித்தார்.