வரலாற்றில் பிடல் காஸ்ரோவின் இடம்

Published By: Priyatharshan

05 Dec, 2016 | 03:31 PM
image

காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோவின் மரபு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சோச­லிசம்  அல்­லது மரணம் என்­பதே பிடல் காஸ்ட்­ரோவின் பிர­சித்தி பெற்ற அறை­கூவல்.  சோச­லி­சத்தைக்  கைவிட மறுத்த அவரை 90 வயதில் மரணம் தழுவிக் கொண்­டது.

பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் சுக­வீனம் கார­ண­மாக பத­வியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட கியூ­பாவின் முன்னாள் ஜனா­தி­பதி 2016 நவம்பர் 25 கால­மா­ன­தை­ய­டுத்து வர­லாற்றில் அவ­ருக்­கு­ரிய இடம் குறித்து பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை உலக ஊட­கங்­களில்  காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.  இரு­பதாம் நூற்­றாண்டின் தனிச்­சி­றப்­புக்­கு­ரிய புரட்சித் தலை­வர்­களில் ஒருவர், நீண்­ட­காலம் ஆட்சி­ய­தி­கா­ரத்தில் இருந்த தலைவர்,  லத்தீன் அமெ­ரிக்­காவின் இறுதிப் புரட்­சி­வாதி, உறுதி குலை­யாத ஏகா­தி­பத்­திய  எதிர்ப்பு வழி­காட்டி, இறுதி மூச்சு வரை சோச­லிச நம்­பிக்­கை­களைக் கைவி­டாத உயர்ந்த தலைவர் என்ற புக­ழஞ்­ச­லிகள் தொடக்கம் இட­து­சாரி ஏதேச்­சா­தி­காரி, கொடிய சர்­வா­தி­காரி, மாற்றுக் கருத்துக் கொண்­ட­வர்­க­ளையும்  அரசியல் எதிரிகளையும் மூர்க்­கத்­த­ன­மாக ஒடுக்­கிய கொடுங்­கோன்­மை­யாளர் என்ற வசை­பா­டல்கள் வரை அந்த விமர்­ச­னங்கள் அவற்றைச் செய்­ப­வர்­களின் அர­சியல் சிந்­த­னை­களின் போக்கில் பல்­வேறு வண்­ணங்­களில் அமைந்­தி­ருக்­கின்­றன. ஹவானா பல்­க­லைக்­க­ழ­கத்தில் படிப்பை  முடித்­துக்­கொண்ட பிறகு 1950 களின் முற்­ப­கு­தியில் இளம் கிளர்ச்­சி­வா­தி­யாக தோழர்­க­ளுடன் சேர்ந்து நடத்­திய இரா­ணுவ முகா­மொன்றில் மீதான தாக்­குதல் தோல்­வியில் முடிந்­த­தை­ய­டுத்து சிறை­யி­ல­டைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­போது காஸ்ட்ரோ, வர­லாறு தன்னை விடு­தலை செய்யும் என்று கூறி­யி­ருந்தார். அவ்­வாறு அவர் நம்­பிக்கை கொண்­டி­ருந்த வர­லாற்றில் அவரை எவ்­வாறு சூழ­மைவு படுத்­து­வது என்­பதே இன்று எழுந்­தி­ருக்­கின்ற பெரு­வா­ரி­யான விமர்­ச­னங்­களின் மையப் பொரு­ளாக விளங்­கு­கி­றது.

 கியூபாவின் புரட்­சி­யுடன் மாத்­திரம் நின்­று­வி­டாமல் ஆபி­ரிக்­கா­விலும் லத்தீன் அமெ­ரிக்­கா­விலும் கால­னித்­துவ ஆட்­சிக்கு எதி­ரான சுதந்­திரப் போராட்ட இயக்­கங்­க­ளி­னதும் இட­து­சா­ரிக்­கி­ளர்ச்­சி­க­ளி­னதும் உந்­து­சக்­தி­யாக விளங்­கி­யவர் என்று கூறப்­ப­டு­கின்ற காஸ்ட்ரோ, உலகில் நடந்­தி­ருக்­கக்­கூ­டிய சகல விடு­தலைப் போராட்­டங்கள் தொடர்­பிலும் ஒரே மாதி­ரி­யான அணு­கு­மு­றையைக் கடைப்­பி­டித்­தாரா என்ற கேள்­வி­யுடன் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் விமர்­ச­னங்கள் இன்­றைய தரு­ணத்தில் முக்­கி­ய­மாக நோக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாகும்.

கடந்­த­வாரம் காஸ்ட்­ரோவின் மறை­விற்கு பிறகு பல  தமி­ழர்­க­ளினால் சமூக ஊட­கங்­களில் பதிவு செய்­யப்­பட்ட கருத்­துக்கள் காஸ்ட்­ரோவின் கியூபா இலங்கைத் தமிழர் உரி­மைப்­போ­ராட்­டத்தைப் பொறுத்­த­வரை ஒடுக்­கப்­பட்ட மக்­களின் பக்கம் நிற்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டை மையமாகக் கொண்டி­ருந்­ததை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. குறிப்­பாக,  இலங்­கையில் உள்­நாட்டுப் போரின் இறு­திக்­கட்­டங்­களில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­ட­மீ­றல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக சுயா­தீ­ன­மான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்தி அமெ­ரிக்­காவும் மேற்­கு­லக நாடு­களும் ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் கொண்­டு­வந்த தீர்­மா­னங்­க­ளுக்கு கியூபா எதி­ராக வாக்­க­ளித்து இலங்கை அர­சாங்­கத்­துக்கு சார்­பாக நடந்­துக்­கொண்­டது என்­பதே  அந்தத் தமி­ழர்­களின் மனக்­குறை. உலகம் பூரா­கவும் ஒடுக்­கப்­ப­டு­கின்ற மக்­க­ளுக்கு ஒரு­மைப்­பாட்டை வெளி­காட்­ட­வேண்­டிய கட­மையைக் கொண்ட "சோச­லிச கியூபா" இலங்­கையில் ஒடுக்­கு­மு­றை­யா­ளர்­களின் பக்­கத்­தி­லேயே நின்­றி­ருக்­கி­றது என்றே அந்த சமூக ஊட­கப்­ப­தி­வுகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன. 

இலங்கைப் போரின் இறுதிக் கட்­டத்தின் போதோ அல்­லது அந்த இறுதிக் கட்­டங்­களில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற உரிமை மீறல்கள் தொடர்­பாக ஜெனீ­வாவில் தீர்­மா­னங்கள் கொண்டு வரப்­பட்ட போதோ பிடல் காஸ்ட்ரோ  கியூ­பாவில்  ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்­க­வில்லை. அவ்­வாறு அவர் பத­வியில் இருந்­தி­ருந்­தாலும் கூட கியூபா ஜெனீ­வாவில் வித்­தி­யா­ச­மான முறையில் நடந்து கொண்­டி­ருக்கும் என்று உறு­தி­யாகச் சொல்­வ­தற்­கில்லை. 

புரட்­சி­களைச் செய்தும் விடு­தலைப் போராட்­டங்­களை நடத்­தியும் ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வந்த அர­சியல் இயக்­கங்­களும் சரி, தலை­வர்­களும் சரி புவிசார் அர­சியல் யதார்த்த நிலை­வ­ரங்­களை (Geo Political Realities ) அடிப்­ப­டை­யாகக் கொண்டே சர்­வ­தேச மற்றும் பிராந்­திய விவ­கா­ரங்­களில் அணு­கு­மு­றை­களைக் கடைப்­பி­டித்து வந்­தி­ருக்­கி­றார்கள். இந்த அணு­கு­மு­றை­களில் இருக்­கக்­கூ­டிய தார்­மீக நெறிப்­பி­றழ்­வினால் உலகின் பல பாகங்­களில் நியாய பூர்­வ­மான உரிமைப் போராட்­டங்கள் பாதிக்­கப்­பட்ட பல உதா­ர­ணங்­களை எடுத்­துக்­கூற முடியும். அந்தப் பிறழ்வை எது­வி­தத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யா­தெ­னினும், துர­திஷ்­ட­வ­ச­மாக அதுவே நிய­தி­யாகிப் போய்­விட்­டது. 

 அன்­றைய புவிசார் அர­சியல் யதார்த்த நிலை­வ­ரங்­க­ளுக்குப் பொருத்­த­மான முறையில்  காஸ்ட்ரோ செயற்­பட்­டி­ருக்­கா­விட்டால், கியூ­பாவை சோச­லிசக் கொள்­கை­களைப் பின்­பற்­று­கின்ற ஒரு நாடாகக் காப்­பாற்ற முடி­யாமல் போயி­ருக்­கலாம். உலக விவ­கா­ரங்­களில் இத்­த­கைய அணு­கு­மு­றை­களை காஸ்ட்ரோ மாத்­தி­ர­மல்ல, சீனாவின் மாஒ­சேதும் கூட கடைப்­பி­டித்­தி­ருந்தார். இந்தக் கருத்­தி­யலின் அடிப்­ப­டை­யி­லேயே இலங்கைப்  பிரச்­சி­னையில் கியூபா எடுத்­து­வந்­தி­ருக்கக் கூடிய நிலைப்­பா­டு­களை நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இப்­படிக் கூறும் போது அதை நியா­யப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக அர்த்­தப்­ப­டுத்திக் கொள்­ளத்­தே­வை­யில்லை. இந்த புவிசார் அர­சியல் நிய­தி­யினால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட உலகப் போராட்­டங்­களில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்­டமும் ஒன்று. 

ஒடுக்­கப்­ப­டு­கின்ற சிறு­பான்மைத் தேசிய இனங்கள் அவற்றின் போராட்­டங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக அமை­யக்­கூ­டி­ய­தா­கவே அய­லு­லக அர­சியல் நிலை­வ­ரங்கள் அமை­ய­வேண்டும் என்று எதிர்­பார்ப்­பதும் நம்­பு­வதும் இயல்­பா­னதே. அதில் தவறு இல்லை. இதற்கு நெல்சன் மண்­டேலா சம்­பந்­தப்­பட்ட இரு உதா­ர­ணங்­களை இங்கு கூற­மு­டியும்.

ஆபி­ரிக்­காவில் இன ஒதுக்­க­லுக்கு எதி­ரான கறுப்­பின மக்­களின் விடு­தலைப் போராட்­டத்தின் உறு­தி­யான ஆத­ர­வா­ள­ராக காஸ்ட்ரோ விளங்­கினார். தென்­னா­பி­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக மண்­டேலா வந்த பிறகு அவர் கியூ­பா­வுடன் நெருக்­க­மான உற­வு­களைப் பேணினார். அது தொடர்பில் அமெ­ரிக்­காவில் கடும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அது குறித்து கருத்துத் தெரி­வித்த மண்­டேலா "கியூ­பா­வு­ட­னான எமது உற­வுகள் எவ்­வாறு அமைந்­தி­ருக்க வேண்டும் என்­பது தொடர்­பி­லான அறி­வுரை கடந்த 40 வரு­டங்­க­ளாக இன­ஒ­துக்கல் ஆட்­சியை ஆத­ரித்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து வரு­கி­றது. எமது மிகவும் நெருக்­க­டி­யான நேரங்­களில் எம்­மைப்­பற்றி ஒரு­போ­துமே கவலைப் படா­த­வர்­க­ளி­ட­மி­ருந்து வரு­கின்ற அறி­வு­ரை­களை எந்­த­வொரு கௌர­வ­மான மனி­த­ரி­னாலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது" என்று உறைப்­பாகக் கூறினார். மண்­டேலா ஒரு தடவை வாஷிங்­ட­னுக்கு மேற்­கொண்ட விஜ­யத்தின் போது தொலைக்­காட்சி கலந்­து­ரை­யா­ட­லொன்றில் அவ­ரிடம் "கேணல் மும்மர் கடாபி  மோச­மான ஆட்­சி­யா­ள­ராக இருந்த போதிலும் நீங்கள் அவரை ஏன் ஆத­ரிக்­கி­றீர்கள்?" என்று கேட்­கப்­பட்­டது. அதற்கு அவர் "இன ஒதுக்கல் கொள்­கையைக் கடைப்­பி­டித்த வெள்­ளையர் ஆட்­சிக்கு எதி­ரான எமது விடு­தலைப் போராட்­டத்தை கடாபி உறு­தி­யாக ஆத­ரித்து நின்றார். அதனால் மாத்­தி­ரமே அவரை நாம் ஆத­ரிக்­கின்றோம்" என்று பதி­ல­ளித்­தி­ருந்தார். அவரின் மேற்­கூ­றப்­பட்ட இரு பதில்­களும் உணர்த்­து­கின்ற செய்­தியை புரிந்­து­கொள்­வதில் எவ­ருக்கும் சிர­ம­மில்லை. 

அதே­வேளை எல்லாக் காலத்­துக்­குமே பொருத்­த­மான தலைவர் என்றோ அர­சியல் இயக்­க­மென்றோ எதுவும் நிரந்­த­ர­மாக இருந்­து­வி­டவும் முடி­யாது. ஒரு அர­சியல் தலை­வரின் பங்­க­ளிப்பை அவர் வாழ்ந்த கால­கட்­டத்தின் சூழ்­நி­லை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே மதிப்­பிட வேண்டும்.

காஸ்ட்­ரோவை இரு­பதாம் நூற்­றாண்டின் லத்தீன் அமெ­ரிக்­காவின் கால­னித்­துவ எதிர்ப்பு பேராட்­டங்­களின் அர­சியல் மற்றும் அறி­வு­ஜீ­வித்­துவ  பின்­பு­லத்தில் வைத்து நோக்க வேண்­டுமே தவிர, இரு­பத்­தோராம் நூற்­றாண்டின் கண்­களின் ஊடாகப் பார்க்­க­லா­காது. காஸ்ட்­ரோவின் மர­ணத்தை கடந்த நூற்­றாண்டின் கெடு­பிடி (cold war) யுத்த கால கோட்­பாட்டுப் பகை­மையின் உச்ச நிலையை உரு­வ­கித்து நின்ற ஒரு புரட்­சி­கரக் கொரில்லாத் தலை­வரின் விடை­பெ­று­த­லா­கவே நோக்­க­வேண்டும். காஸ்ட்ரோ ஒரு கிளர்ச்சித் தலை­வ­ராக உரு­வா­கு­வதைச் சாத்­தி­ய­மாக்­கிய சூழ்­நி­லை­க­ளையும் உலகின் மேற்கு அரைக்­கோ­ளத்தில் கம்­யூ­னிஸக் கொள்­கை­களைப் பின்­பற்­றிய முதன்­மு­த­லான ஒரு நாட்­டுக்கு தலை­வ­ராக அவர் வரக்­கூ­டி­ய­தாக இருந்த சூழ்­நி­லை­க­ளையும் அடிப்­ப­டை­யாக வைத்தே அவரை மதிப்­பிட வேண்டும். கரி­பியன் பிராந்­தி­யத்­துக்கோ அல்­லது இன்று நாம் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் உலகம் என்று அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்ற பிராந்­தி­யங்­க­ளுக்கோ ஜன­நா­யகம் சென்­ற­டைந்­தி­ராத ஒரு கால­கட்­டத்தில் கியூ­பாவில் அமெ­ரிக்­கா­வுக்கு ஆத­ர­வா­ன­கொ­டுங்­கோன்மை அர­சாங்கம் ஒன்­றுக்கு எதி­ரான புரட்­சியை காஸ்ட்ரோ வழி­ந­டத்தி வெற்­றிக்கு இட்டுச் சென்றார். சுக­வீனம் கார­ண­மாக பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் காஸ்ட்ரோ பத­வியில் இருந்து வில­கி­ய­தை­ய­டுத்து சகோ­தரர் ராவுல் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று ஆட்சி நடத்தி வரு­கின்ற போதிலும், இன்­றைய நவீன கியூபா என்­பது காஸ்ட்­ரோ­வினால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­ட­தே­யாகும். சோவியத் யூனி­ய­னு­ட­னான அவரின் கூட்டு உலகை அணு­வா­யுதப் போரின் விளிம்பில் கொண்­டுபோய் நிறுத்­தி­யது.

கியூ­பா­வுக்கு எதி­ராக பொரு­ளா­தாரத் தடையை விதித்த அமெ­ரிக்கா 1961 ஜன­வ­ரியில் இராஜ தந்­திர உற­வு­க­ளையும் துண்­டித்­துக்­கொண்­டது. அமெ­ரிக்க மத்­திய புல­னாய்வு நிறு­வ­னத்தின் (சி.ஐ.ஏ) ஆத­ர­வுடன் சுமார் 1400 கியூப அஞ்­ஞா­த­வா­சிகள்  காஸ்­ரோவின் ஆட்­சியை தூக்­கி­யெ­றியும் நோக்­குடன் பட­கு­களில் சென்று கியூ­பாவின் தென்­க­ரை­யோ­ரத்தில் உள்ள பிக்ஸ் குடாவில் அந்த வருடம் ஏப்­ரலில் ஆக்­கி­ர­மிப்பு முயற்­சி­யொன்றை மேற்­கொண்­டனர். ஆனால் அது தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தது. அந்தத் தோல்வி, கியூ­பாவை ஆக்­கி­ர­மிக்கும் யோச­னை­களை கைவி­டு­வ­தற்கு அமெ­ரிக்­காவை நிர்ப்­பந்­தித்­தது. எனினும், காஸ்ட்­ரோ­வுக்கு எதி­ராக சதி முயற்­சி­களை வாஷிங்டன்  கைவி­ட­வில்லை. கியூ­பாவில் அவர் ஆட்­சியில் இருந்த கால­கட்­டத்தில் அமெ­ரிக்­காவில் பத்து ஜனா­தி­ப­திகள் பத­வியில் இருந்­தி­ருக்­கி­றார்கள்.  அவ­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டதைப் போன்று உலகில் வேறு எந்­த­வொரு நாட்டுத் தலை­வ­ருக்கும் எதி­ராக கொலை முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தில்லை. அமெ­ரிக்­காவில் வாழும் கியூப அஞ்­ஞா­த­வா­சி­க­ளினால் அல்­லது அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் 630 க்கும் அதி­க­மான கொலைச் சதி முயற்­சிகள் அவ­ருக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஒரு கணக்கு உண்டு.

கியூ­பாவில் சோவியத் அணு­வா­யுத ஏவு­க­ணைகள் நிலை வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக 1962 அக்­டோபர் 22 அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி அறி­வித்­த­தை­ய­டுத்து மாஸ்­கோ­வுக்கும் வாஷிங்­ட­னுக்கும் இடை­யே­யான கெடு­பிடி யுத்­தத்தின் மிகப்­பெ­ரிய நெருக்­க­டி­வெ­டித்­தது. கியூ­பாவைச் சுற்றி கடற்­படை முற்­று­கையை அமெ­ரிக்கா மேற்­கொண்­ட­தை­ய­டுத்து அணு­வா­யுதப் போர் அபாயம் ஏற்­பட்­டது. ஆனால், ஒரு­வார கால­மாக முன்­னெ­டுக்­க­பட்­பட்ட தீவிர இரா­ஜ­தந்­திர முயற்­சி­க­ளை­ய­டுத்து அன்­றைய சோவியத் தலைவர் நிகிட்டா குருஷேவ் கியூ­பாவில் இருந்து அணு­வா­யுத ஏவு­க­ணை­களை விலக்கிக் கொண்டார்.  கியூ­பாவில் காஸ்ட்ரோ ஆட்­சியை வீழ்த்­து­வ­தற்கு அதற்குப் பிறகு முயற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற அமெ­ரிக்க உறு­தி­மொ­ழி­யை­ய­டுத்தே சோவித் யூனியன் அவ்­வாறு அணுவாயுத ஏவு­க­ணை­களை விலக்கிக் கொள்ள இணங்­கி­ய­தா­கவும் கூட கூறப்­பட்­டது.

மனித உரி­மை­களை மீறு­பவர் என்றும் அர­சியல் எதி­ரி­களைக் கொலை செய்­தவர் என்றும் மாற்றுக் கருத்­து­க­ளுக்கு இட­ம­ளிக்­காமல் கருத்­து­வெ­ளிப்­பாட்­டுக்குச் சுதந்­தி­ரத்தை மறுத்­தவர் என்றும் காஸ்ட்­ரோ­வுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. அவரின் மர­ணத்­துக்குப் பின்­னரும் கூட, கடந்த ஒரு வார­மாக அத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் கூடிய விமர்­ச­னங்கள் பெரு­வா­ரி­யாக வந்த வண்­ண­மி­ருக்­கின்­றன. ஆனால் அவரோ தனது அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை 'புரட்சி நீதி என்­பது சட்ட வாச­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தல்ல, தார்­மீக நம்­பிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்­டதே' என்று கூறி நியா­யப்­ப­டுத்­து­வ­தற்குத் தயங்­க­வில்லை. கம்­யூனிஸ்ட் புரட்­சி­களைச் செய்த சகல தலை­வர்­க­ளுக்கும் எதி­ராக இதே குற்­றச்­சாட்­டுக்கள்  முன் வைக்கப்பட்டு வந்­தி­ருக்­கின்­றன. இன்றும் அவை பலத்த விவா­தத்­துக்­கு­ரிய சர்ச்­சை­க­ளா­கவே விளங்­கு­கின்­றன.

காஸ்ட்ரோ தனது நாட்டில் கட்­டி­யெ­ழுப்­பிய சோச­லிசம் குறித்து பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்கள் உண்டு. ஆனால், அரை நூற்­றாண்டு காலம் ஆட்சி செய்த அவரின் கொள்­கை­களின் விளை­வாக உலகின் பெரும்­பா­லான நாடு­களில் உள்­ள­தையும் விட கியூபா சமூகம் ஒப்­பீட்­ட­ளவில் கூடு­த­லான அள­வுக்கு சமத்­து­வ­மா­ன­தாக அல்­லது ஏற்­றத்­தாழ்வு குறைந்­த­தாக விளங்­கு­கின்­றது என்­பதை மறு­த­லிக்க இய­லாது. கியூ­பாவின் மிகச்­சி­றப்­பான சுகா­தாரப் பரா­ம­ரிப்பு முறையும்  கல்வி முறை­யுமே அவ­ரது மர­பு­களில் மிகவும் குறிப்­பி­டத்­தக்­க­வை­யாகும். உலகின் தனவந்த நாடு­க­ளுக்கு நிக­ரா­ன­தாக கியூபா மக்­களின் ஆயுட்­கா­லமும் படிப்­ப­றிவு வீதமும் காணப்­ப­டு­கி­றது. மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வளங்­க­ளு­டனும் கூட முன்­னு­தா­ர­ண­மான சுகா­தாரப் பரா­ம­ரிப்பு முறை சாத்­தி­ய­மா­னதே என்று அவரின் தலை­மையின் கீழான கியூபா உல­கிற்கு காட்­டி­யது. ஆபிரிக்காவின் பல நாடுகளை கொடிய நோய்கள் படுமோசமாகக் பாதித்த வேளைகளில் எல்லாம் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உதவிக்குச் செல்லத் தயங்கிக் கொண்டிருந்த நிலைமைகளுக்கு மத்தியில் காஸ்ட்ரோவின் கியூபா தனது மருத்துவர்களையும் பணியாளர்களையும் தாராளமாக அனுப்பி அந்த மக்களை காப்பாற்றியிருக்கிறது.

மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மாத்திரமல்ல உலகம்பூராகவுமே இடதுசாரி விடுதலை இயக்கங்களுக்கும் எதிர்காலப் புரட்சிகளுக்கும் உத்வேகம் தருகின்ற ஒரு புரட்சித் தலைவராக காஸ்ட்ரோ விளங்கினார். உலகில் சோசலிசப் பரீட்சார்த்தம் தோல்வி கண்டுவிட்டது என்று கூறப்படுகின்ற போதிலும் கூட, சோசலிசக் கொள்கைகளில் இறுதிவரை நம்பிக்கை கொண்டிருந்தவர்  காஸ்ட்ரோ. அவரைப் பொறுத்தவரை புரட்சி என்பது எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் இடையிலான சாகும் வரையிலான ஒரு போராட்டம்

1953 ஆம் ஆண்டு கியூபாவின் கிழக்கு நகரான சன்டியாகோவில் தான் தனது தோழர்களுடன் காஸ்ட்ரோ புரட்சியைத் தொடங்கினார். இறுதியில் 1959 ஆம்ஆண்டு புரட்சி வெற்றி பெற்றதையடுத்து சாண்டியாகோவின் நகர மண்டபத்தில் இருந்தே வெற்றிப் பிரகடனத்தை செய்தார். பிறகு தனது  போராளிகளுடன்  தலைநகர் ஹவானாவுக்கு அவர் வாகன பவனியாக வந்த பாதையின் ஊடாக அவரின் அஸ்தி அதே  நகருக்கு இப்போது எடுத்துவரப்பட்டுள்ளது. இடைவழியில் மத்திய கியூபாவில் உள்ள சான்ர கிளாரா நகரில் காஸ்ட்ரோவின்  தோழர் ேசகுவேராவின் நினைவாலயத்தில்  அஸ்தி கடந்தவாரம் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. 

கியூபாவின் சுதந்திர தலைவர் ஜோஸ் மார்ட்டி அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் காஸ் ட்ரோவின் அஸ்தி இன்று கல்லறையில் வைக்கப்படுகின்றது. காலத்தின் சோதனைக்கு காஸ்ட்ரோ மரபு தாக்கிப்பிடிக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஆனால், அவர் வரலாற்றின் சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறார் என்பது மாத்திரம் உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22