இறந்த நாயொன்றிலிருந்து செயற்கை முறையில் கலப்பிறப்பாக்கம் (குளோனிங்) மூலம் பிறந்த நாய்க் குட்டி என்ற பெயரை சான்ஸ் என்ற நாய்க் குட்டி பெறுகிறது.

கடந்த சனிக்கிழமை பிறந்த இந்த நாய்க் குட்டி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த லோரா ஜக்குயஸ் (29 வயது) மற்றும் றிச்சர்ட் றிமெட் ஆகியோரால் வளர்க்கப்பட்ட டிலான் என்ற நாய் கடந்த ஜூன் மாதம் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

இதனால் தமது அன்புக்குரிய நாயை இழந்து வேதனையடைந்த லோராவும் றிச்சர்ட்டும் அந்த நாயை ஒத்த நாயொன்றைப் பெறும் முயற்சியில் இறங்கினர்.

இந்நிலையில் இறந்த நாயின் மரபணுவை கலப்பிறப்பாக்கம் செய்து அதையொத்த நாய்க்குட்டியொன்றை உருவாக்கும் புரட்சிகர முயற்சியை முன்னெடுக்க அவர்கள் தென் கொரியாவிலுள்ள ஆராய்ச்சி நிலையத்துக்கு 67,000 ஸ்ரேலிங் பவுணை கட்டணமாகச் செலுத்தினர்.

இந்நிலையில் மேற்படி சூயம் பயோடெக் ஆராய்ச்சி மன்றம் என்றழைக்கப்படும் ஆராய்ச்சி நிலையமானது டிலானின் மரபணுவை பயன்படுத்தி பிறிதொரு நாயில் கலப்பிறப்பாக்கத்தை மேற்கொண்டது.

இந்தப் புரட்சிகர கலப்பிறப்பாக்க செயன்முறை மூலம் அச்சு அசலாக டிலான் குட்டியாக இருந்த போது அது கொண்டிருந்த உருவத் தோற்றத்தை ஒத்த நாய்க் குட்டியை பிரசவிக்கச் செய்துள்ளது.