மறைந்த கியூப புரட்சித் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவின் மரணச்சடங்கு புரட்சியின் பிறப்பிடமான சான்தியகோ நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 

பிடெல் காஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் மரணமானார்.

அவரது மரணச்சடங்கையொட்டி முதல் நாள் சனிக்கிழமை சான்தியகோ புரட்சி சதுக்கத்தில் பிடெல் காஸ்ட்ரோவின் சகோதரரும் ஜனாதிபதியுமான ராவுல் காஸ்ட்ரோவின் தலைமையில் பாரிய கூட்டம் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

“பிடெல் காஸ்ட்ரோவின் பூதவுடல் முன்னிலையில் நாம் எமது தந்தை நாட்டையும் சமூகவுடைமையையும் பாதுகாக்க பிரமாணம் செய்வோம்' எனத் தெரிவித்த ராவுல் காஸ்ட்ரோ, “ அவர் ( பிடெல் காஸ்ட்ரோ) அதனைச் செய்து காட்டினார். ஆம். எமக்கும் முடியும். எந்தவொரு தடையையும் அச்சுறுத்தலையும் நாம் முறியடிப்போம்" என்று கூறினார். 

அவரது மரணச்சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என அவர் இதன் போது தெரிவித்தார். 

மறைந்த தலைவர் பிடெல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளின் பிரகாரம் அவரது பெயரால் எந்தவொரு ஞாபகச்சின்னத்தை எழுப்புவதற்கும் அவரது பெயரை வீதிகளுக்கு சூட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கியூப ஜனாதிபதி மேற்படி கூட்டத்தில் அறிவிப்புச் செய்தார்.

“ பிடெல் காஸ்ட்ரோவுக்காக எந்தவொரு உருவச்சிலையும் எழுப்பப்படமாட்டாது" என அவர் வலியுறுத்தினார். 

இதன் போது அங்கு கூடியிருந்த மக்கள், 'பிடெல் நீடூழி வாழ்க!, பிடெல் நீடூழி வாழ்க!' என கோஷம் எழுப்பியை குறிப்பிடத்தக்கது.