(ஆர்.வி.கே)

யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் குறித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உரும்பிராய் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட , கோப்பாய் மத்தி , திருநெல்வேலி , மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த குழுவில் கைது செய்யப்பட்டவர்கள் 16, தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் , இவர்களே அண்மையில் கோண்டாவில் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து வாள் வெட்டினை மேற்கொண்டவர்கள் எனவும்  அவர்களிடம் இருந்து இரு வாள்கள் , ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி ஒன்றினை மீட்டுள்ளதாகவும் , கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

அத்துடன் கைது செய்யபட்டவர்களில் ஒருவர் மாணவன் எனவும் , அவருடைய கைத்தொலைபேசியில் வாள்களுடன் நிற்கும் படங்கள் உள்ளதாகவும் , குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , அதனை தொடர்ந்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.