வரவேற்பு நாடான கத்தார் உலகக் கிண்ண தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறுகிறது

Published By: Sethu

26 Nov, 2022 | 01:07 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட முதல் சுற்றில் 2ஆவது தோல்வியை எதிர்கொண்ட வரவேற்பு நாடான கத்தார் முதலாவது நாடாக உலக கிண்ணப் போட்டியிலிருந்து நொக் அவுட் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஈக்வடோர், செனகல் (ஏ குழு), ஈரான், ஐக்கிய அமெரிக்கா (பி குழு) ஆகிய நாடுகள் 2ஆம் சுற்றுக்கு செல்வது அந்த நாடுகளின் கடைசி லீக் போட்டிகளின் முடிவுகளில் தங்கியிருக்கிறது.

எவ்வாறாயினும் நெதர்லாந்தும் (ஏ குழு), இங்கிலாந்தும் (பி குழு) 2ஆம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது.

ஏ மற்றும் பி குழுக்களுக்களில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற    போட்டி முடிவுகளை அடுத்தே இந் நிலை தோன்றியுள்ளது.

ஏ குழுவில் கத்தாருக்கு எதிரான போட்டியில் செனகல் 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதுடன் நெதர்லாந்துக்கும் ஈக்வடோருக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் பங்குபற்றிய கத்தார், உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சுற்றுடன் வெளியேறும் இரண்டாவது வரவேற்பு நாடானது.

2010 இல் தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தது. அத்துடன் லீக் சுற்றில் 2 போட்டிகள் மாத்திரம் நிறைவடைந்த நிலையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் முதலாவது நாடு கத்தார் ஆகும்.

கத்தார் சார்பாக இதுவரை ஒரே ஒரு கோலை மொஹமத் முன்டாரி போட்டுள்ளார்.

இக் குழுவுக்கான மற்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே கோடி கெக்போ (6ஆவது நிமிடம்) போட்ட கோலின் உதவியுடன் நெதர்லாந்து முன்னிலைய அடைந்தது.

ஆனால், இடைவேளையின் பின்னர் 49ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணித் தலைவர் என்னர் வெலென்சியா கோல் நிலையை சமப்படுத்தினார்.

இந்த கோலுடன் என்னர் வெலென்சியா 3 கொல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளை அடுத்து ஏ குழுவில் நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்தல் இருப்பதுடன் அதன் இரண்டாம் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகக் காணப்படடுகிறது.

ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டிகளில் நெதர்லாந்து கத்தாரை எதிர்கொள்ளவுள்ளதுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள ஈக்வடோரை 3 புள்ளிகளைப் பெற்றுள்ள செனகல் எதிர்த்தாடவுள்ளது.

பி குழுவில் வேல்ஸுக்கு எதிரான போட்டியில் ஈரான் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

வெய்ன் ஹெனெசே 86ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டைக்கு இலக்கானதை அடுத்து  வெல்ஸ் அணி   பத்து வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதனை சாதகமாக்கிக் கொண்ட ஈரான், உபாதையீடு நேரத்தின் 8ஆவது நிமிடத்தல் ரூஸ்பே செஷ்மி, 11ஆவது நிமிடத்தில் ரமின் ரீஸாயீயான் ஆகியோர் மூலம் 2 கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.

உலகக் கிண்ண வரலாற்றில் நான்காவது அத்தியாயத்தில் விளையாடும் ஈரான் பெற்ற ஒட்டுமொத்த 3ஆவது வெற்றி இதுவாகும்.

இது இவ்வாறிருக்க அல் பெய்த் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான பி குழு லீக் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. அப் போட்டியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட அப் போட்டியில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகள் வீண் போயின.

இந்தப் போட்டி முடிவுகளை அடுத்து பி குழுவில் இங்கிலாந்து, ஈரான், ஐக்கிய அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய நான்கு அணிகளும் 2ஆம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.

4 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து தனது கடைசிப் போட்டியில் ஒரு புள்ளியுடன் இருக்கும் வேல்ஸை எதிர்த்தாடவுள்ளது. மற்றைய போட்டியில் 3 புள்ளிகளுடன் இருக்கும் ஈரானும் 2 புள்ளிகளுடன் இருக்கும் ஐக்கிய அமெரிக்காவும் மோதவுள்ளன.

ஏ மற்றும் பி குழுக்களுக்கான அணிகள் நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31