(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற  இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளி ஒன்றுக்கு சமய வழிபாட்டிற்காக (ஜமாத்) இராஜகிரிய – அத்துருகிரிய பகுதியிலிருந்து நேற்று  14 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது.

இவர்களில் சிலர் இன்று டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர்வழங்கும் டெவோன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

 அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

 ராஜகிரிய – அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 20 வயதான மொஹமட் சுகைல் என்பவரே உயிரிழந்தவராவார.

ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் இவரது சடலம் பத்தனை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டது.

 பிரேத பரிசோதனைக்காக சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.