'கைதிகளும் மனிதர்களே' என்பது வெறும் வாசகம் மாத்திரமே...!

Published By: Nanthini

24 Nov, 2022 | 05:30 PM
image

(கேஷாயினி எட்மண்ட்)

“நான் திருமணம் முடித்து 07 மாதங்களாகியிருந்த போது என்னுடைய கணவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 1994இல் கைதுசெய்யப்பட்டார். 

அப்போது நான் மூன்று மாத கர்ப்பிணி. இப்போது எங்களுடைய மகனுக்கு 27 வயதாகிறது. 

என் கணவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர். ஆனால், இறுதிக்கடன்கள் செய்வதற்கு கூட என் கணவர் எங்களுடன் இல்லை. 

மகன் பிறந்து இந்த 27 வருட காலத்தில் அவனுடைய முக்கியமான நிகழ்வுகள் எதிலும் அவன் தந்தையால் பங்கேற்க முடியவில்லை. 

குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தனியொரு பெண்ணாக போராடி வருகிறேன். இன்று வரை கணவர் மீதான விசாரணை முடியவில்லை. ஆனாலும், எமது சமூகம் எம்மை குற்றவாளியாகத்தான் பார்க்கிறது" என்கிறார், குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் மனைவி.

இலங்கையின் உள்நாட்டு போர்க்காலத்திலும், அதன் பின்னரான காலகட்டங்களிலும் பேசுபொருளாக உள்ள விடயங்களில் 'அரசியல் கைதிகள்' குறித்த விடயமும் ஒன்று.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் 'அரசியல் கைதிகள்' என அடையாளப்படுத்தப்படுகின்ற போதும், அந்த பெயர் கொண்டு அவர்களை அழைப்பதை அரசாங்கம் தவிர்க்கின்றது.

கடந்த சில வருடங்களில் பல அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ள போதும், இன்றும் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக 'பெண் அரசியல் கைதிகள்' எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பற்றியும் நாம் ஆராய வேண்டியுள்ளது.

"சிறு வயதில் என்னுடைய பிள்ளையை பலரும் கேலி செய்துள்ளார்கள். மறுமணம் செய்துகொள்ளும்படி தெரிந்தவர்களும் உறவினர்களும் என்னை வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால், 'என் கணவர் வெளியே வருவார்' என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகின்றேன்.

என் மரணச்சடங்கின் கடமைகளை மட்டுமாவது 'கணவர்' என்ற வகையில் செய்வதற்கு அவர் விடுதலையாகி வருவாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்று மேலும் கூறுகிறார், அந்த பெண்.

இப்படி நெஞ்சை உருகச்செய்யும் துயரம் தோய்ந்த பல கதைகள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவற்றை செவிமடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் கணவரும் மனைவியும் சித்திரவதை 

மற்றொரு அரசியல் கைதியின் கதை இப்படியாக உள்ளது...

“நாங்கள் யுத்தத்தினால் இடம்பெயர நேரிட்டது. எமக்கு மூன்று பிள்ளைகள். 

நான் கைதுசெய்யப்படும்போது எனது கடைசி மகன் பாலர் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார். 

திடீரென எங்களது வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினர் எங்களையும் எங்களது வீட்டினையும் சோதனை செய்தனர். 

என்னை தாறுமாறாக அடித்ததுடன், சில பொருட்களை காட்டி, 'இவை உங்களுடையதா' என விசாரித்தனர். 

நாங்கள் 'இல்லை' என்று மறுத்தபோது எங்களை அடித்தனர். 

கடைசி மகன் 'அடிக்க வேண்டாம்' என கெஞ்சியபோது அவரையும் பலவாறு அடித்து, உதைத்து, சித்திரவதை செய்தனர். 

ஏற்கெனவே எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களினால் என் மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். 

அதன் பின்னர் எமக்கு விலங்கிட்டு, காரணம் கூறாமல் அழைத்துச் சென்று விசாரணை எனும் பெயரில் சித்திரவதை செய்தனர். 

என் மனைவியை விசாரித்து அனுப்பிவிட்டதாக மூன்று நாட்களின் பின்னர் தான் எனக்கு அறியக் கிடைத்தது. 

முகத்தில் மிளகாய்த்தூள் பூசுவது, பெற்றோல் பையால் அடிப்பது, ஆணுறுப்பில் அடிப்பது என என்னை பலவாறு சித்திரவதை செய்தனர். 

குண்டுவெடிப்பு சம்பவமொன்றில் தொடர்புபட்டதன் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். 

சில நாட்களின் பின்னர் மனைவி, பிள்ளைகளையும் கைதுசெய்துள்ளதாக அறிந்தேன். 

பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மனைவியும் நானும் சிறையில் அடைக்கப்பட்டோம்.

பிள்ளைகளை மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டனர். மனைவியை நிர்வாணப்படுத்தி விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்தனர். 

பல வருடங்களின் பின்னரே நாங்கள் விடுவிக்கப்பட்டோம்” என கூறி முடித்தார். 

***

தமிழ் அரசியல் கைதிகளது விடயம் குறித்து மனித உரிமைகளுக்காக குறிப்பாக குரலற்றவர்களுக்காக குரலெழுப்புகிற செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

“இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டுக்கு பின்னரான அனைத்து அரசாங்கங்களும் தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளன. இதற்கான இன அழிப்பினை 1948இலேயே ஆரம்பித்துவிட்டன. 

முன்னர் சாத்வீகமான முறையில் போராடிய போதும் எவ்விதமான தீர்வும் கிட்டவில்லை. இதனால், தமது அபிலாஷைகளை முன்வைக்க இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தபோது இவர்களை ஒடுக்குவதற்காக 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்த சட்டத்துக்கமைய கைதுசெய்யப்பட்டவர்களை அல்லது கைதுசெய்யப்படுகிறவர்களை அரசியல் கைதிகள் என்கிறோம். 

ஆரம்பத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பிரதேசங்களிலும் கைதுசெய்யப்பட்டனர். 

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களது தகவல்களை யாரும் வெளியிட முன்வரவில்லை. இதை பற்றி பேசுகிறபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிராபத்துகள்  ஏற்படுமோ என்கிற அச்சமும் இருந்தது. 

பின்னர், குறிப்பிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால், பூரணமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவில்லை. 

2017 தகவலறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னரே தகவல்களை பெற முடிந்தது. ஆயினும், நாம் இவர்களை 'அரசியல் கைதிகள்' என குறிப்பிட்டாலும் அரசாங்கம் அவர்களை அப்படி குறிப்பிடவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே கைதானவர்கள் என்கிற அடிப்படையிலேயே இப்பெயர்ப் பட்டியலை பெற முடிந்தது. அதில் 200 பேரளவில் காணப்பட்டார்கள். அவர்கள் நீதிமன்ற முறைமை ஊடாகவே கடந்த காலங்களில் வெளிவந்துள்ளார்கள். 

அவர்கள் குறித்து விரைவில் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை பல ஆண்டுகளாக முன்வைக்கின்றோம். இதை எந்த அரசாங்கமும் ஏற்கவில்லை.

2015இல் ஒருவர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். அதேபோன்று கோட்டாபய அரசின் கீழ் 16 பேர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். 

தற்போது எம்மிடமுள்ள தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 33 கைதிகள் உள்ளார்கள். 

அவர்களில் இருவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டதில் இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, தற்போது எஞ்சியிருப்போரின் எண்ணிக்கை 31 என குறிப்பிடலாம். அவர்களில் மூன்று பெண்கள் உள்ளனர். 

இவ்வரசியல் கைதிகளுள் சுமார் 27 வருடங்களாகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் இருக்கின்றனர். 

அவர்கள் நீண்ட காலமாக குடும்ப மற்றும் சமூக தொடர்பின்றி இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் அவர்கள் இதுவரை உள்ளே கழித்துள்ள வருடங்களை தண்டனைக்காலமாக கொண்டேனும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது தற்போதைய கோரிக்கையாக உள்ளது” என்றார். 

கைதிகளும் மனிதர்களே

சிறைச்சாலை சட்டத்திலே 'கைதிகளும் மனிதர்களே' என்று குறிப்பிடப்படுகிறது. ஆயினும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை.

குறிப்பாக, அரசியல் கைதிகளை எடுத்துக்கொண்டால், இனவாத நோக்கிலேயே தாக்கப்பட்டார்கள். 

1983ஆம் ஆண்டு இதன் அடிப்படையில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஏறத்தாழ 55 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வாறே போகம்பரவில் இடம்பெற்றது. 

வவுனியாவிலிருந்து அநுராதபுரத்துக்கு கொண்டுவரப்பட்ட போது பலர் தாக்கப்பட்டனர்.

இன்றும் இவ்வாறு பலவிதமாக விடயங்கள், பாலியல் சுரண்டல்கள் என்பன இடம்பெறுகின்றன. ஆயினும், இவை வெளிவருவதில்லை. இதற்கு ஓர் உதாரணம், கடந்த வருடம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம். 

இச்சம்பவத்தை தொடர்ந்து இது குறித்த பல விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

முன்னர் அரசியல்கைதிகளாக இருப்பவர்களை தனியே சந்திக்க வாய்ப்பளிப்பதுண்டு. இதன்போது நாம் அவர்களுடன் ஓரளவு சுதந்திரமாக உரையாட முடியும். ஆனால், தற்போது எல்லா கைதிகளையும் ஒரே நேரத்தில் மட்டுமே பார்வையிட முடியும்” என தெரிவித்தார். 

பெண்கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளது பிரச்சினை பாரதூரமானது. அவர்களுக்கான சுகாதார மற்றும் உளவியல் சார் பிரச்சினைகள் இன்னும் ஆராயப்படாமலேயே உள்ளன.

இது குறித்து சட்டத்தரணி சி.ரணித்தா ஞானராஜா கூறுகையில்,

“அரசியல் கைதிகள் எனும்போது ஆண்கைதிகள் பற்றித்தான் பேசப்படுகிறது. 2009ஆம் ஆண்டளவில் அதிகளவானவர்கள் இருந்தனர். பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகளவான பெண்கைதிகள் உள்ளனர். 

இவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமமான நிலை காணப்படுகின்றது.

இந்த சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு அதிகளவான பெண்கைதிகளை கொண்டுள்ளது. இங்கு அடிப்படை சுகாதார வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. இட வசதியின்மையும் காணப்படுகின்றது. இதனால் பெண் அரசியல் கைதிகள் மிகவும் சவால்களை எதிர்கொள்கின்றனர். 

தங்களுக்கு தேவையான சவர்க்காரம், பற்பசை போன்றவற்றை பெறுவதிலும், அவர்களது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த தேவையான துவாய்களை பெற்றுக்கொள்வதிலும் கூட மிகவும் சிரமமான நிலை காணப்படுகின்றது.

போஷாக்கான உணவு, தனியே உறங்குவதற்கான இடவசதி போன்ற விடயங்களும் இவர்களுக்கு சவாலானவையாகவே உள்ளன. 

அத்துடன், வெலிக்கடை போன்ற இடங்களில் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் எதிர்கொள்கிற பாரியதொரு பிரச்சினை மொழிப் பிரச்சினையாகும்.

பெரும்பாலான பெண் அரசியல்கைதிகள் வடக்கு, கிழக்கினை சார்ந்தவர்கள். இங்கு சிறைகளில் நூற்றுக்கு நூறு வீதம் சிங்களம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.  

இதனால் தங்களுடைய பிரச்சினைகளை சொல்வதற்கோ, தேவைகளை கேட்டுப் பெறுவதற்கோ, தொடர்பாடலை மேற்கொள்வதற்கோ மிகவும் சிரமப்படுகின்றனர். 

தமக்கான மருத்துவ தேவைகளின் போதும், அதனை விளக்கிக் கூறி உரிய சேவைகளை பெறக்கூடிய வசதி இவர்களுக்கு இல்லை. 

அத்துடன், தமது சொந்த இடங்களை விட்டு இவர்கள் கொழும்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியாத நிலைமையும் உள்ளது. 

அரசியல் கைதிகள் எனும்போது இனவாத அடிப்படையில் இவர்கள் நடத்தப்படும் சம்வங்களும் உள்ளன. 

இவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருப்பதற்கான வாய்ப்புகளுமுண்டு. 

ஆலோசனை வழங்கச் செல்லும்போது வழக்குகள் தொடர்பாக கலந்துரையாட முடியுமே தவிர இதனை பற்றி பேசுவதற்கு வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை.

பெண்கைதிகளை அவர்களின் பிரதேசங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றினால், தங்களது உறவினர்களை சந்திக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுவதுடன், அவர்கள் மூலமாக சுகாதார தேவைகளையும், உணவுகளையும் பெண்கைதிகளால் பெற முடியும். 

மேலும், அவர்கள் மூலம் உயரதிகாரிகளிடம் கலந்துரையாடி தமக்கு தேவையான உடல், உள, மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். மொழி ரீதியான பிரச்சினைகளும் குறையும். 

அத்துடன் பாலியல் ரீதியான தொந்தரவுகள், இனத்துவ ரீதியான பாகுபாடுகள் அவர்களது பிரதேசம் சார் சிறைகளில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. 

ஆகவே, சிறைச்சாலை நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்தவேண்டிய கட்டாய தேவையுண்டு” என குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், இன்று பலரும் தம்முடைய உறவுகளின் விடுதலையை கோரி வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆயினும், இவர்களுக்கு எதிரான விசாரணைகள் மற்றும் விடுதலை குறித்து அரசின் நகர்வுகள் மந்தகதியில் தான் உள்ளன. 

இது ஒருபுறமிருக்க சிறையில் குறைந்த பட்ச தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்ற இவர்கள் விரைவில் சிறையிலிருந்து வெளியேறி சுதந்திரக்காற்றினை சுவாசிக்க வழியமைத்துக் கொடுக்கிற கடமை அரசினைச் சேரும். 

சிறையில் இருப்பவர்களும் மனிதர்கள் தான் என்பதை சுவர்களில் எழுதி வைத்துவிட்டால் மாத்திரம் போதாது. இதை அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பானவர்களும் உணர்வது எப்போது?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48