அரச இயந்திரங்களால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்க வேண்டும் – ரிஷாத்

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 03:17 PM
image

விவசாய உற்பத்திகளை பெருக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்திற்கு நேர்மாறாக, விவசாயக் காணிகள் அரச இயந்திரங்களால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளமை கவலை தருகின்றது எனவும் அந்தக் காணிகளை  உடனடியாக விடுவித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர், ஆசியக் கண்டத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக இரண்டாவது அந்தஸ்தை பெற்றிருந்த நாடாகும்.

ஆனால், இன்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் ஆட்சிக் கதிரையில் அமர வேண்டும் என்பதற்காக, மக்களை மடையர்களாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை நாசமடையச் செய்திருக்கின்றார்கள்.

அவர்கள் எடுத்த பிழையான முடிவுகளும், பிழையான செயற்பாடுகளுமே இதற்குக் காரணம். தங்களுடைய இருப்பை மாத்திரம் கருத்திற்கொண்ட அவர்கள், நாட்டைப் பற்றியும் நாட்டினது பொருளாதாரத்தை பற்றியும் சிந்திக்காத காரணத்தினால், நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு, இன்று உலகிலே கரும்புள்ளியிட்டுப் பார்க்கப்படுகின்ற ஒரு நாடாக காணப்படுகின்றது. இவ்வாறானதொரு இக்கட்டான சூழலிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், இந்த நாட்டின் ஜனாதிபதி மக்களால் விரட்டப்பட்ட வரலாறு காணப்படுகிறது. ஏன் இவ்வாறு நடந்தது? அதிகபட்ச மக்களுடைய ஆணையைப் பெற்ற ஜனாதிபதி ஒருவர், தனக்குரிய பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல், நாட்டை மிகவும் மோசமான நிலைக்கு ஆளாக்கிவிட்டு, நாட்டை விட்டு ஓடுகின்ற அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன.

அவரது முறையான திட்டமிடல் இல்லாத செயற்பாடுகளினால், வரியை இரவோடு இரவாக குறைத்ததன் மூலம் 2020ஆம் ஆண்டு 600, 700 பில்லியன் ரூபா வருமானம் குறைக்கப்பட்டது. அதேபோன்று, 40 வீதமான மக்கள் விவசாயத்தில் தங்கியிருக்கின்ற ஒரு விவசாய நாட்டிலே, இரவோடு இரவாக உர இறக்குமதி தடை செய்யப்பட்டு, சேதனப் பசளைகள் பயன்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மற்றும் நிபுணர்களுடைய ஆலோசனைகளைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகளினால், விவசாயிகள் மிகவும் மோசமான ஒரு பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

அத்துடன், கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து, தங்களுக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதை விட, தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக, இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து, நாட்டை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்திருந்தனர்.

இன்று நாட்டின் நிலைமையைப் பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக உள்ளது. புத்திஜீவிகள், வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். வைத்தியசாலைகளிலே மருந்துகள் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றார்கள். 

மருந்துகளை வெளியில் வாங்குவதற்குக் கூட  கையில்  பணம் இல்லை. வைத்தியசாலைகளிலே முறையான சிகிச்சைகள் இன்றி, மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வது என்பது மிகப்பெரும் ஆபத்துகளை தோற்றுவிக்கும்.

அதேபோன்று, பாடசாலை கல்வி இலவச கல்வியாக இருந்தபோதிலும்,  மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வாங்குவதில் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

இன்று காலை முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், “பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்வது இயலாத காரியமாக இருக்கின்றது” என்று என்னிடம் சொன்னார். முன்னர் ஒரு பிள்ளைக்கு 5000 ரூபா தேவை என்றால், இன்று 20௦௦0 ரூபா தேவைப்படுகின்றது. அப்பியாசக் கொப்பி போன்றவற்றின் விலை 300 மடங்காக அதிகரித்திருக்கின்றது. சாதாரண குடும்பத்தில் உள்ள மாணவர்களால், ஏழை மாணவர்களால் கல்வியை தொடர முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், பொருட்களின் விலையேற்றம் என்பது இன்று கேள்விக்குறியாக உள்ளது. கேட்பார் பார்ப்பார் அற்ற ஒரு நாடாக மாறியுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக நாங்கள் இருந்த காலத்தில் அதிகாரிகளை பயன்படுத்தி, மாவட்ட, கிராமிய மற்றும் பிரதேச ரீதியாக விலைகளை மதிப்பீடு செய்து, மிகக் கவனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றோம். முறைகேடான வர்த்தகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தோம். அப்போது  விலைகளை தீர்மானிப்பது அரசாங்கமாக இருந்தது. ஆனால், இன்று எல்லாப் பொருட்களுடைய விலைகளையும் வியாபாரிகளே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில், ஓமான் நாட்டிலே தொழிலுக்காக சென்றவர்கள் படும் துயரங்களை நாம் அவதானிக்கு கூடியதாக இருந்தது. இந்த விடயம் தொடர்பில், அடிக்கடி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முறையிடுகின்றார்கள். 

வேலை வாய்ப்புக்களுக்காக ஒமான் சென்ற பெண்கள்   விபச்சார நடவடிக்கைகளுக்காக  பயன்படுத்தப்படுகிறார்கள். நாட்டுக்கு மீண்டும் வர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இது குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. 

நாட்டுக்கு அதிகளவிலான அந்நியச்செலாவணியை பெற்றுத்தருகின்ற அந்தத் தொழிலாளர்களின் விடயத்தில், குறித்த நாட்டிலே இருக்கின்ற தூதரகம் அக்கறை செலுத்த வேண்டும். அரசாங்கம் பாராமுகமாக இருக்காமல், அதற்கான பொறுப்பையேற்று, அவர்களை மீட்டு நாட்டுக்குக் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இதற்குப் பின்னால் இருக்கின்ற சக்திகளையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு தண்டனை வழங்குவதன் ஊடாக, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும்.

அதேபோன்று, அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதியிடம், அரசுடைமையாக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தொடர்பில் எடுத்துரைத்தோம். கடந்த இரண்டு வருடங்களாக இந்த உயர் சபையிலும் பல முறை இது குறித்து பேசி வருகின்றோம்.

 அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று, வட்டமடு உள்ளிட்ட இன்னோரன்ன பல பிரதேசங்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதால், அவற்றை விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

யுத்த காலத்தில், அவர்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத காரணத்தினால்,  இன்று இவர்களுடைய சொந்தக் காணிகள் எல்லாம் அரச  இயந்திரங்களுக்கு கீழ் கெசட் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தமது தொழிலை செய்ய முடியாமல், மிகவும் மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

இது குறித்து, நாங்கள் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமும் பாராளுமன்ற ஆலோசனை சபை கூட்டத்திலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் பலமுறை சுட்டிக்காட்டியும் அதற்கான தீர்வுகள் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 

"விவசாய உற்பத்திகளை பெருக்க வேண்டும்" என்ற அரசின் திட்டத்திற்கு நேர்மாறாக, விவசாயக் காணிகள் அரச இயந்திரங்களால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளமை கவலை தருகின்றது. அந்தக் காணிகளை  உடனடியாக விடுவித்து, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும், கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, தனியார் துறையில் வேலை செய்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ள போதும், அவர்களுடைய சம்பளங்களில் எந்தவொரு மாற்றத்தையும் காண முடியவில்லை. அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுயதொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் சுயதொழிலை மேற்கொள்கின்றவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

இவ்வாறான ஒரு மோசமான  நிலையிலேயே நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம். எனவே, எதிர்காலத்தில் வருகின்ற ஆட்சியாளர்கள் இனவாத, மதவாதங்களுக்கு அப்பால், நாட்டின் நலனுக்கான திட்டங்களை பொருளாதார நிபுணர்களின் மூலம், கொள்கை ரீதியாக வகுத்துச் செயற்பட வேண்டும். ஆட்சிக்கதிரைகள் மாறுகின்ற பொழுதும் கொள்கைகளில் மாற்றம் செய்யாத ஒரு நல்ல நிலை ஏற்படவேண்டுமென பிரார்த்திக்கின்றேன்" என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59