(ம .குமணன்) 

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 32ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று  படுகொலை  நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட  நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும்  தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். 

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா  மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன்  உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், து. ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர்  ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டு  படுகொலை செய்திருந்தனர்.

இந்த  படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.