படைக்குறைப்பு பாசாங்கு

Published By: Digital Desk 2

20 Nov, 2022 | 02:34 PM
image

(சுபத்ரா)

“சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கான ஒரு பாசாங்கு அறிவிப்பா- அல்லது உண்மையிலேயே படைக்குறைப்புச் செய்வதற்கான ஒரு ஆழம் பார்க்கும் முயற்சியா என்ற கேள்வி உள்ளது”

வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு விடயத்தை அறிவித்திருக்கிறார், ஆனால் அந்த விவகாரம் ஊடகங்களில் பெரியளவில் கவனிப்பை பெறவில்லை. ஆயுதப்படையில் உள்ளவர்கள், 18 ஆண்டுகளில் சுயவிருப்பின் அடிப்படையில்- முன்கூட்டியே ஓய்வுபெற முடியும் என்பதே அந்த திட்டம்.

விசேட பிரிவினர் தவிர, ஏனையவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும் என்றும், ஆனால் இது கட்டாயமல்ல, விரும்பியவர்கள் ஓய்வு பெறலாம் என்றும் அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி.

இவ்வாறு முன்கூட்டியே ஓய்வுபெறும் ஆயுதப்படையினருக்கு வாழ்வாதார பயிற்சிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு ஆழம் பார்த்துக் காலை விடுகின்ற ஒரு முயற்சியாக சிலர் கருதுகின்றனர். தற்போது ஆயுதப் படைகளில் பணியாற்றுபவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓய்வுபெற முடியும்.

அது நான்கு ஆண்டுகளால், வெட்டப்பட்டு, 18 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ள போதும், இந்த திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திட்டத்தை முன்வைத்திருப்பதற்கு முக்கிய காரணம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கமைய, பற்றாக்குறையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தனது வரவு,செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன என்ற விபரத்தை அவரது அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்து நடத்திய பேச்சுக்களின் நிறைவில், பணியாளர் மட்ட உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிய போது, எழுத்து மூல உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை. அது வெறும் இணக்கப்பாடு தான் என்று இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அண்மையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடன்பாட்டை, வெளிப்படுத்தக் கூடாது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றும், அது இறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்கள் அனுமதித்தாலேயே, அதனை வெளியிடலாம் என்றும் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை, வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும், அரசாங்க செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும், அரச சேவையில் ஆட்குறைப்பை செய்ய வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்ற வசதியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதேபோன்று தான், ஆயுதப்படைகளில் உள்ளவர்களும் ஓய்வுபெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கான ஒரு பாசாங்கு அறிவிப்பா- அல்லது உண்மையிலேயே படைக்குறைப்புச் செய்வதற்கான ஒரு ஆழம் பார்க்கும் முயற்சியா என்ற கேள்வி உள்ளது.

ஏனென்றால், சர்வதேச நாணய நிதியம் மாத்திரம், படைக் குறைப்பை வலியுறுத்தவில்லை. இராணுவ மறுசீரமைப்பு மற்றும் படைக்குறைப்பு என்பன நீண்டகாலமாக சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மற்றும் மீறல்கள் தொடர்பாக ஆயுதப்படைகளின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனை அரசாங்கம் நிராகரித்து வருகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகமும், மனித உரிமை அமைப்புகளும், இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கின்றன.

இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 31/1 ஜெனிவா தீர்மானத்திலும் கூட, இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியது. ஆனால் பின்னர் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொண்டது.

எவ்வாறாயினும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தினால் முன்வைக்கப்பட்ட இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தில், ஒரே ஒரு விடயத்தை மட்டும் அரையும் குறையுமாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியிருந்தது.

ஐ.நா அமைதிகாப்புப் படையில் பணியாற்றச் செல்லும் படையினரின் மனித உரிமை பதிவுகளை ஆய்வு செய்யும் செயல்முறைக்கு மட்டும் அரசாங்கம் வேண்டா வெறுப்பாக இணங்கியது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புகளால் மூன்று கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆனாலும், இந்த திட்டத்திலும் குழறுபடிகள் காணப்படுகின்றன. மனித உரிமை பதிவுகளில் சர்ச்சைக்குரிய ஒரு இராணுவ அதிகாரி, ஐ.நா. அமைதிகாப்பு படைப்பிரிவுக்கு பொறுப்பாக அனுப்பப்ட்டு, பின்னர் அவரை மீளப்பெறும் நிலையும் ஏற்பட்டது.

ஐ.நா.வின் அழுத்தங்களால், வெளிநாட்டு நாணய வருவாயைத் தேடித் தரும் முக்கிய மூலம் என்பதால், இந்த மனித உரிமைப் பதிவு ஆய்வுக்கு அரசாங்கம் இணங்கியது. மற்றையபடி, இராணுவ மறுசீரமைப்பு திட்டங்கள் எதையுமே அரசாங்கம் முன்னெடுத்திருக்கவில்லை.

போர் முடிந்த பின்னர் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது வழக்கம். உலகளவில் அந்த வழக்கம் இருந்தாலும், இலங்கை இராணுவம் இதுவரை அவ்வாறான படைக்குறைப்பை முன்னெடுத்திருக்கவில்லை. இதனால், போர் முடிந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னரும், இராணுவத்துக்கு அதிகளவு நிதியை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில்,தரைவழி எல்லைகளையோ , எதிரிகளையோ, போர் அச்சுறுத்தல்களையோ கொண்டிருக்காத போதும், 3 இலட்சத்து 31 ஆயிரம் படையினரைக் கொண்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி படைக் குறைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தவிர்த்து வந்தது. இப்போது தான் முதல் முறையாக படைக்குறைப்புக்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வெளியே காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது கட்டாய படைக்குறைப்பு அல்ல.

விரும்பினால் விலகலாம் என்பது தான் இந்த திட்டம். போரின் இறுதிக்கட்டத்தில் அதாவது, 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், இராணுவத்தின் ஆளணிப்பலம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டது. எனவே, தற்போதுள்ள படையினரின் பெரும்பாலானவர்கள், 18 ஆண்டுகளுக்குள் சேவையாற்றியவர்களாகத் தான் இருப்பார்கள்.

2018ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான வெளியிட்ட தகவல்களின்படி, இராணுவத்தில் அப்போதிருந்த ஆளணியில் 40 சதவீதமானோர், 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்களாவர். இதன்படி பார்த்தால், 18 ஆண்டு சேவையை நிறைவு செய்யக் கூடிய நிலையில் அதிகளவான படையினர் இருக்கமாட்டார்கள்.

அதிலும் முன்கூட்டியே ஓய்வுபெறும் படையினருக்கும், 22 வருடங்களில் ஓய்வுபெறும் படையினருக்கும் கிடைக்கின்ற வசதிகளில் உள்ள வேறுபாடுகள், இந்த திட்டத்தில் தாக்கம் செலுத்தும்.

இதனை ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துக்கு கணக்கு காட்டுவதற்கான ஒரு அறிவிப்பாகத தான் வெளியிட்டிருக்கிறாரே தவிர, உண்மையான படைக்குறைப்பு நோக்கம் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வாறான படைக்குறைப்பு இலக்கை அவர் கொண்டிருந்தால், இராணுவத்தின் பருமனைக் குறைத்து பாதுகாப்புச் செலவினத்தை மட்டுப்படுத்த முனைந்திருப்பார். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13