(கே .குமணன்)

வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. 

முல்லைத்தீவு பகுதியில் கடும் காற்று வீசிவருவதனால்  மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடும் காற்று வீசிவருவதோடு புயல் தாக்கம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடலில் காற்று பலமாக வீசுவதோடு, பாரிய அலைகள் கடலில் எழுவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதானாலும் தொடர்ச்சியாக மழைபெய்துவருவதாலும் மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்ட  முல்லைத்தீவை சேர்ந்த கடற் தொழிலாளர்கள் எவரும் கடலுக்கு செல்லமுடியாத நிலையிலுள்ளனர்.இந்நிலையில் தொழிலை மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்கள், தொழிலுக்கு பயன்படுத்தும் வள்ளங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கடலில் இருந்து தரைக்கு அப்புறப்படுத்தியுள்ளதை  காணமுடிகின்றது.