ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொள்ளத் தேவையான சட்டபூர்வ தன்மை ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களால் நீண்டகாலமாக கோரிக்கையான, ஆனால் இதுவரை கிடைக்காத உரிமைகள்  மற்றும் தொழில்சார் சிறப்புரிமைகளை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வழங்குவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை எடுப்பதாக நேற்று கொழும்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் 6 வது பிரதிநிதிகள் மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தல், ஊடகவியலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊட்டமளித்தல் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையென்றும் கடந்த அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் கடந்த 22 மாத தற்போதைய அரசாங்க காலத்தில் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக தான் செயற்பட்ட வேளைகளில் எப்போதும் ஊடகவியலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியதாக தெரிவித்த ஜனாதிபதி, மிகச் சிறந்த ஊடக பயன்பாட்டுக்காக அத்துறையைச் சேர்ந்த அனைவரதும் தொழில் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி என்ற வகையில் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டைவிட்டுச் சென்ற ஊடகவியலாளர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதற்கும் கொலை செய்யப்பட்ட மற்றும் சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அக்கொலைகள் மிக உயர்ந்த விஞ்ஞான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதனால் அந்த விசாரணைகள் தாமதமடைவதனை தவிர்க்க முடியாதிருப்பதாகவும் ஜனாதிபதி; தெரிவித்தார். 

ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடக தொழிற்சங்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஊடகத்துறை அமைச்சு, தொழில் அமைச்சு, ஊடக அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்படுமென்றும் ஊடகவியலாளர்களுக்கு நிரந்தர சம்பளத்தை தீர்மானிப்பது தொடர்பிலும் அக்குழு கவனம் செலுத்துமென்றும் இரண்டு மாதங்களுக்கொரு தடவை அவற்றின் முன்னேற்றத்தை தனக்கு அறிவிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இரகசியம் தேவையில்லை, பொய் தேவையில்லை, தகவல் அறியும் உரிமையை யதார்த்தமாக்குவோம், மக்கள் சேவை ஊடக கலாச்சாரத்தை பலப்படுத்துவோம் போன்ற தொனிப்பொருட்களில் மாநாடு நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து பிரதேச ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். 

அரசாங்க தகவல் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளன தலைவர் கருணாரத்ன கமகே, செயலாளர் தர்மசிறி லங்காபேலி, தேசிய அமைப்பாளர் குமார ஆரியதாஸ ஆகியோர் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.