தமிழ்ப்படகு மக்கள் 

15 Nov, 2022 | 01:31 PM
image

படகு மக்கள் என்று சொன்னால் ஒரு காலத்தில் வியட்நாமியர்களே நினைவுக்கு வருவர்.வியட்நாம் போரில் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் (பெரும்பாலானவர்கள் சீன வம்சாவளியினர்) தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பலவீனமான படகுகளில் பயணம் செய்த அவர்கள் ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் தொடர்பான விபரங்கள் நடுக்கம் தருபவை. ஆபிரிக்காவில் இருந்தும்  மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு  மத்திய தரைக்கடலின் ஊடாக  படகுகளில் சென்ற படகு மக்களின் அவலங்கள் தனியான வரலாறு.

உலகின் படகு மக்களின் வரலாற்றுக்கு  இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்தத்தில் அத்தியாயங்களை சேர்த்துவந்திருக்கிறார்கள்.1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கையில் இருந்து தீவிரமடையத்தொடங்கிய தமிழர்களின் வெளியேற்றம் இன்னும் முடிவுக்கு வருவதாக இல்லை.

பாக்கு நீரிணையைக் கடந்து படகுகளில் தமிழகத்துக்கு அகதிகளாக செல்லத்தொடங்கிய தமிழர்கள் நடுக்கடலில் அனுபவித்த அவலங்களை விபரிப்பின் அது பெருகிக்கொண்டே போகும்.சொந்த மண்ணில் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் புகலிடம் தேடிச் செல்கையில் கடலில் மாண்டுபோன தமிழர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் எவருக்கும் தெரியாது.

பழைய றோமானியர்களினால் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டதன் பின்னர் உலகம் பூராவும் அலைந்து திரிந்த புராதன யூதர்கள் போன்று இன்று இலங்கைத் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் தேடி இலட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.அதிகப் பெரும்பான்மையான தமிழர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமே வாழ்கிறார்கள். உலகில் புலம்பெயர் தமிழர்களைக் கூடுதல் எண்ணிக்கையில் கொண்ட நாடாக இன்று கனடா விளங்குகிறது.நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால புலம்பெயர்வை அடுத்து தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்துக்கும் அதிகமானதாகும் என்பதில் சந்தேகமில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட தமிழர்களின் அகதி வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை.படகுகளில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த பல தமிழர்கள்  இந்தோனேசியாவினதும் அவுஸ்திரேலியாவினதும் கடற்படைகளினால் இடைமறிக்கப்பட்டு தீவுகளில் அடைத்துவைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் தமிழ்ப்படகு மக்கள் பற்றிய செய்திகள் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் இருந்து கனடா நோக்கி பலவீனமான கப்பலில் பயணம் செய்தவேளையில் வியட்நாமுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஆழ்கடலில் தத்தளித்த குழந்தைகள்,சிறுவர்கள், பெண்கள் உட்பட 300க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கடந்தவாரம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிய கப்பல்களினால் காப்பாற்றப்பட்டு வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வியட்நாமில் மூன்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் (International Organisation for Migration) தொடர்பில் இருப்பதாகவும் தங்களை இலங்கைக்கு திருப்பயனுப்பவேண்டாம் என்றும் மூன்றாவது நாடொன்றில் அகதிகளாக தங்கவைக்குமாறும் அவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தங்களது விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் தலையீட்டையே இந்த அகதிகள் நாடி நிற்கிறார்கள் என்று தெரிகிறது.

வியட்நாமிய அதிகாரிகளுடனும் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்துடனும்  ஒருங்கிணைந்து அகதிகளை சோதனை செய்யும் நடவடிக்கைகளை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் உள்ள எமது  தூதரகங்களுடன் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ந்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வியட்நாம் அகதிகளை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாடு அல்ல. மியன்மார் கரையில் தங்களை கப்பலில் ஏற்றியவர்கள் கனடாவுக்கு கூட்டிச்செல்வதாக றுதியளித்தார்கள் என்று அகதிகள் கூறியதற்காக கனடா அவர்களைப் பற்றி கவனத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.கனடிய கரையோரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைர்களுக்கு அப்பால் நடந்திருக்கின்ற சம்பவம் இது. புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகின்றன என்பதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அகதிகள் இலங்கைக்கு திரும்புவதற்கு மறுத்தால் அவர்கள் விசாரணைகளின் முடிவில் பலவந்தமாக நாடுதிருப்பியனுப்பப்படக்கூடிய சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.மூன்றாவது நாடொன்றில் தங்களை அகதிகளாக தங்கவைக்குமாறு அகதிகள் கேட்கிறார்கள் என்பதற்காக எந்தவொரு  நாடும் தானாக முன்வந்து அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது சந்தேகமே.அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்ற இலங்கையர்கள் இடைமறிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதைப் போன்ற கதியே வியட்நாமில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படுமோ?

வியட்நாம் கடலில் கடந்த வாரம் இடம்பெற்ற  சம்பவம் எமக்கு 1980 களின் நடுப்பகுதியில் கனடாவின் நியூபவுண்ட்லாந்து கரையோரமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 155 இலங்கைத் தமிழர்கள் இரு படகுகளில் நெருங்கியடித்துக்கொண்டு சென்ற சம்பவத்தை நினைவூட்டுகிறது.

அன்றைய மேற்கு ஜேர்மனியில் இருந்து கனடாநோக்கிய பயணத்தில் அகதிகள் ஐந்து நாட்கள் கடலில் தத்தளித்தனர்.அந்த படகு மக்களின் விவகாரம் உலகம் பூராவும் பெரும் பரபரப்புச் செய்தியாகியது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடையத் தொடங்கிய காலகட்டம் அது.இலங்கையின் நிலைவரங்கள் வெளியுலகிற்கு அம்பலமாகிவிடக்கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்த சிங்கள இனவாத சக்திகள் அந்த படகு மக்களுக்கு கனடிய அரசாங்கம் தஞ்சம் வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன.அன்பு , கருணை பற்றி உபதேசம் செய்யும் பௌத்த பிக்குமார் கூட அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

கனடாவிலும் படகுமக்கள் விவகாரம் ஒரு அரசியல் சர்ச்சையாக மாறியது.ஆனால்,கனடாவின் அன்றைய பிரதமர் பிறையன் மல்றோனி மிகவும் நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்தார்.

" கனடா குடியேற்றவாசிகளினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாடு. படகுகளில் வந்துசேர்ந்த மக்களுக்கு நாம் தவறிழைப்போமேயானால், நாம் கருணை தரப்பிலும் தவறிழைத்தவர்களாவோம் " என்று கூறிய அவர் அந்த படகு மக்களுக்கு தனது நாட்டில் தஞ்சம் வழங்கினார்.இன்று அப்படி ஒரு மல்றோனி எந்த நாட்டிலாவது  இருக்கிறாரா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14
news-image

"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...

2024-03-17 12:21:53
news-image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...

2024-03-17 06:39:41
news-image

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

2024-03-10 14:17:23
news-image

வலுப்பெறும் அரசியல் பிளவுகள் 

2024-03-10 12:32:34
news-image

தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...

2024-03-08 16:39:57
news-image

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...

2024-03-05 22:00:38
news-image

மீண்டும் "Political Cabinet" 

2024-03-03 12:29:24
news-image

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள் 

2024-02-28 13:29:58