திருமணம் ஆகியும் கன்னி

Published By: Ponmalar

15 Nov, 2022 | 02:38 PM
image

கேள்வி: 
நான் 29 வயதுப் பெண். திருமணமாகி ஒரு வருடமாகிறது. இன்னும் நான் கன்னியாகவே இருக்கிறேன். என் கணவர் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும் ஒருபோதும் என்னை நெருங்குவதே இல்லை. வலுக்கட்டாயமாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது தான் அவருக்கு ஆண்மை இல்லை என்று தெரிந்தது. நான் அதிர்ச்சியடைந்தாலும், அவருடனேயே வாழ்வது என்று முடிவு செய்துகொண்டேன். இதற்காக இல்லற சுகங்களை முற்றிலும் துறந்துவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். இதற்கு மாத்திரைகள், ஊசி மருந்துகள் ஏதேனும் இருக்கின்றனவா? இருந்தால் தயவு செய்து அவை பற்றி அறியத் தர வேண்டும்.

பதில்: 
வாழ்க்கை முறை மாற்றங்களே போதும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற!

முதலில், இவ்வாறானதொரு முடிவை நீங்கள் எடுத்தமைக்கு மரியாதை செலுத்தவே வேண்டும். எந்தப் பெண்ணும் இதுபோன்றதொரு பிரச்சினையின்போது இவ்வாறானதொரு முடிவெடுக்க எண்ணவும் மாட்டார்கள். ஆனால், நீங்கள் விதிவிலக்கு!

உணர்ச்சிகளை குறைத்துக்கொண்டால், உங்களுக்கு இது ஒரு பிரச்சினையாக தெரியாது என்று நம்புகிறீர்கள். அப்படித்தானே?

ஊசி மருந்துகள் மூலம் ஹோர்மோன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். என்றாலும், அதன் பக்க விளைவுகள் ஆபத்தானவை!

பொதுவாக, சாதுக்கள் உணவில் உப்போ வெங்காயமோ சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் ருசி அறியாமலேயே உணவு உண்பார்கள். அப்படி உண்ணும்போது இல்லற ஆசைகள் எழாது. அதை நீங்களும் பின்பற்றலாம்.

தொலைக்காட்சியை தவிர்க்கலாம். ஆன்மிகப் புத்தகங்களை மட்டுமே வாசிக்கலாம். இவை மூலம் இல்லறம் குறித்த எண்ணங்கள் எழாமல் இருக்கலாம்.

நீங்கள் இருவரும் இந்த முடிவில் இருந்தாலும், உங்கள் இரு தரப்புப் பெற்றோரும் அக்கம் பக்கத்தோரும் நிச்சயமாக இது குறித்து குடைச்சல் கொடுக்கவே செய்வார்கள்.

தாம்பத்திய ஆசையை தவிர்க்க நீங்கள் விரும்பினாலும், உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பிடிமானமும் வேண்டும். அதற்காக, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முயற்சியுங்களேன். இதன் மூலம் நீங்கள் இருவரும் உங்கள் கவலைகளை மறக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், எப்போதேனும் உங்கள் முடிவு குறித்து ஒரு கலக்கம் உங்களுக்கு ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்கும் இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அத்துடன், உங்கள் முடிவால், ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கையும் கிடைக்கும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள். இந்த முடிவு நீங்களாக எடுத்தது. 

எனவே, எப்போதும் அதை உறுதியாக பின்பற்றுங்கள். இடைநடுவில், ஏதேனும் பிரச்சினையின்போது, தவறியும் நீங்கள் உங்கள் விட்டுக்கொடுப்பை உங்கள் கணவரிடம் சுட்டிக்காட்டிவிட்டீர்கள் என்றால், அவரது மனம் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, எந்த முடிவாக இருந்தாலும், அதன் சாதக, பாதகத் தன்மைகளை நன்கு யோசித்து நடைமுறைப்படுத்துவது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்