மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது. மாவீரர் தினத்தை தடுக்க வேண்டுமா அல்லது நடத்த அனுமதிக்க வேண்டுமா என்பதை பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும். வடக்கில் இராணுவ பாதுகாப்பை  அதிகரிக்கக்கோரி எந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. அங்கு சிவில் மற்றும் பொலிஸ் நிர்வாக நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றமையால் இராணுவ பாதுகாப்புகளை பலப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது மாவீரர் தின அனுஷ்டிப்புகள் மற்றும் வடக்கின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.