அடுத்த குடிசன மதிப்பீட்டில் ‘மலைய மக்கள்’ என்ற பதம் உள்ளீர்க்கப்படுமா ? 

Published By: Digital Desk 2

13 Nov, 2022 | 01:21 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

இந்திய வம்சாவளி மலையக மக்களின் இருநூறாண்டு காலப் பூர்த்தி நிகழ்வுகளில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் விடயம் அவர்களின் அடையாளம் குறித்த கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்டு வரும்வாதப் பிரதிவாதங்களாகும். தனித்தனியே பல அமைப்பினர் இந்த விவாதங்களை நேரடியாகவும் நிகழ்நிலை ஊடாகவும் முன்னெடுத்து வந்தாலும், இந்த மக்களின் இன அடையாளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பல்துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் அதேவேளை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் திட்டங்களை கட்டமைத்து வருகின்றது ‘மலையக தமிழர் இன அடையாளத்திற்கான மக்கள் செயலணி’  என்ற அமைப்பு. 

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி இந்த அமைப்பானது அட்டன் நகரில் முதலாவதாக மலையக மக்களின் இன அடையாளம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

இதில் பேராசிரியர்களான ஏ.எஸ்.சந்திரபோஸ், எஸ்.விஜேசந்திரன் மற்றும் சமூக ஆய்வாளர் சிவம் பிரபாகரன் ஆகியோர் உட்பட பலரும்  கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். அதற்கு அடுத்த கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இந்த அமைப்பு உள்ளூர் மற்றும் புலம்பெயர் மலையக சமூகத்தினரை இணைத்து கொண்டு நிகழ்நிலை வழியாக இது குறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது. 

கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் பலரும், இந்த மக்களின் இன அடையாளம் மலையகத் தமிழர் என்று தான் இருக்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு தாம் வருகை தந்த காலத்தில் இங்குள்ளோர் எவரும் தம்மை இந்திய வம்சாவளிகள் என்று அழைக்கவில்லையென்றும் இலங்கை தமிழர்கள் என்றே அழைத்ததாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

குடிசன மதிப்பீடு

எனினும்  இந்நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் கூறிய சில விடயங்கள் சிந்திக்கத்தக்கதாக இருந்த அதேவேளை அடுத்த கட்ட நகர்வுக்கும் முக்கிய ஆலோசனையாக இருந்தது. இந்த மக்களின் இன அடையாளம் எப்படியாக இருக்க வேண்டுமென நாம் கலந்துரையாடிக்கொண்டிருந்தாலும் அரசாங்கத்தின் பார்வைக்கு இதை கொண்டு செல்வதற்கு சில ஏற்பாடுகள் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

‘பத்து வருடங்களுக்கு ஒரு தடவை செய்யப்படும்  குடிசன மதிப்பீடுகள்  இறுதியாக 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.  இம்முறை கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அது செய்யப்படவில்லை. எனினும் அது குறித்து எச்சந்தர்ப்பத்திலும் அறிவிக்கப்படலாம். குடித்தொகை கணக்கெடுப்பின் போது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன அடையாளங்களாக இந்தியத் தமிழர் மற்றும் இலங்கைத் தமிழர் என்ற பெயர்கள் உள்ளன. இப்போது இங்கு கருதுக்களை பகிர்ந்த பலரும் இந்த மக்களை மலையக மக்கள் அல்லது மலையக தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டும் என்கின்றனர். ஆனால் நாம் குறிப்பிடும் மலையகப்பிரதேசங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். அவர்கள் தம்மை அவ்வாறு பதிய விரும்புவார்களா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. 

இந்திய தொடர்பு உள்ள முஸ்லிம்கள் தம்மை இந்தியாவோடு தொடர்புபடுத்தியே பார்க்க விரும்புவர். எனினும் ‘மலையகத் தமிழர்’ என நாம் மட்டும் இங்கு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.  ஆனால் சட்டரீதியாக நாம் எம்மை எவ்வாறு அடையாளப்படுத்துவது, எமது அடுத்த தலைமுறையினரின் பிறப்புச் சான்றிதழில் எவ்வாறு அதை பதிவது போன்ற விடயங்களை நாம் ஆராய வேண்டும். 

இது குறித்து நான் தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை சந்தித்து தகவல்களை திரட்டினேன்.  ஒரு நாட்டிலுள்ள சமூகத்தை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற விடயம் குறித்து அதற்கான காரணங்களையும் சிபாரிசுகளையும் உரிய விதத்தில் ஒரு கோரிக்கை கடிதமாக எமக்குத் தந்தால் நாம் அதை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியே சிபாரிசுகளை பெற முடியும்” என்று தெரிவித்தார். 

அதாவது இந்த விடயத்தில் முடிவுகளை எடுக்க ஜனாதிபதியிடம் மாத்திரமே அதிகாரம் உள்ளது. ஆகவே இவ்விடயத்தை ஒரு சட்ட ஆவணமாக  தயாரித்து பொருத்தமான சிபாரிசுகளுடன்  எமக்குத் தந்தால் அது குறித்து பரிசீலிக்க முடியும் என்றார். 

ஆகவே எமது சமூகத்தை அடையாளப்படுத்துவதில் முதலில் எம்மத்தியில் உள்ள வேறுபாடுகள் களையப்படல் வேண்டும் என்று பேராசிரியர் சந்திரபோஸ் அன்றைய கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். 

அரசியல்வாதிகளின் மத்தியில் கருத்தொருமைப்பாடு உள்ளதா?

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சில அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். மற்றுமொரு சாராரோ நாம் இணைந்தே உள்ளோம். இல்லாவிட்டால் எவ்வாறு எமக்கு அமைச்சுப் பதவிகளோ வேறு உரிமைகளை கிடைத்தது என கேள்வி எழுப்புகின்றனர்.  கடந்த மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்துகள் பல விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

மலையக தமிழர்களை எவ்வாறு இலங்கை சமூகத்தினருடன் இணைப்பது என்பதை ஆராய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இது மலையக நகரங்களிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் கல்வி புலத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அப்படியானால் இந்த சமூகத்தினர் இது வரை இலங்கை மக்கள் என்ற வரையறைக்குள் வரவில்லையா அல்லது அவர்களை அவ்வாறு நோக்க இலங்கையின் ஏனைய சமூகத்தினர் விரும்பவில்லையா என்ற கேள்விகளை அவர்கள் சமூக ஊடகங்களில் எழுப்பியிருந்தனர். 

கடந்த காலங்களில் இந்திய தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வந்த பலரும், சனத்தொகை கணக்கெடுப்பின் போது தம்மை இலங்கை தமிழர் என்றே பதிந்துள்ளனர். நாம் இலங்கை மக்களே என்ற உணர்வாலும் உரிமையாளும் உந்தப் பட்டதன் விளைவே அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டியது என்பது பெரும்பாலானோரின் கருத்துகளாகும்.

 அதேவேளை, இந்த மக்களின் இன அடையாளங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற தர்க்க ரீதியான காரணங்களை முன்வைத்து அது குறித்து ஒரு பகிரங்க கலந்துரையாடலுக்கு  மலையக பிரதிநிதிகள் இது வரை முன்வரவில்லை. இவ்வாறான கலந்துரையாடல்களை சிவில் சமூகத்தினரே முன்னெடுத்து வருகின்றனர்.   அதில் மலையக கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள்  கலந்து கொள்ளாமலில்லை. 

எனினும், அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இந்த இன அடையாள விவகாரத்தை தேசிய மட்டம் வரை எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. யாப்பு சீர்திருத்த யோசனைகளின் போது மலையக மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்கும் வண்ணம் அவர்களின் முன்மொழிவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதானது அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே உள்ளது என்று  இந்த செயலணியில் தொடர்ச்சியாக பங்கு பற்றி வரும் ஆய்வாளரும் சட்டதரணியுமான கெளதமன் குறிப்பிடுகிறார். 

அதிகாரப்பரவலாக்கம் குறித்து அதிகமாகப் பேசப்படுகின்ற இக்காலத்தில் எமது மக்களுக்கான தனித்துவமான ஒரு அடையாளத்தை நாம் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதன் மூலமே சீர்திருத்த செயலாக்கங்கள் அல்ல நேரொதுக்க நடவடிக்கைகள்  மூலம் எமது சமூகத்துக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்கிறார் அவர். 

எல்லா விடயங்களுக்கும் அரசியல்வாதிகளையே நம்பி அவர்கள் கூறினால் சரியாக இருக்கும் என்ற மாயையிலிருந்து தற்போது மலையக சமூகம் வெளியே வந்துள்ளது.  அதே வேளை இந்த விவாதங்கள் குறித்து பிரதிநிதிகள் மெளனமாக இருப்பதற்குக் காரணமும் அவர்களை மீறி நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தான். 

இனியாவது மக்களின் விருப்பு வெறுப்புகளை மக்களே தீர்மானிக்கட்டும். முடிவுகளை ஏற்பதும் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதுவும் அரசியல்வாதிகளின் பிரச்சினை என்று தான் கூற வேண்டியுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04