இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட்

07 Nov, 2022 | 10:01 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார்.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை இலங்கை வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டதோ அவற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளை முதல் சுற்றிலும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை சுப்பர் 12 சுற்றிலும் இலங்கை வெற்றிகொண்டது.

மிகப் பெரிய அல்லது பிரபல்ய அணிகளான அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்தது.

முதல் சுற்றில் நமிபியாவிடம் இலங்கை அடைந்த தோல்வி கிறிஸ் சில்வர்வூடை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். அதேவேளை அந்தப் போட்டியில் அடைந்த தோல்வி இலங்கை அணிக்கு மாத்திரம் அல்ல முழு இலங்கைக்கும் பெரும் ஏமாற்றதைக் கொடுத்துள்ளது.

இங்கிலாந்துடனான கடைசிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தால் குழு 1க்கான அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கும். ஆனால், இங்கிலாந்திடம் கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்த இலங்கையினால் அணிகள் நிலையில் 4ஆம் இடத்தையே பெற முடிந்தது.

எவ்வாறாயினும் இங்கிலாந்தை கடைசி ஓவர்வரை  இலங்கை போராட வைத்தது சில்வர்வூடுக்கு திருப்தியைக் கொடுத்துள்ளது.

'இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றதைக் கொடுக்கிறது. ஆனால். எனது வீரர்கள் பெருமளவு திறமையை வெளிப்படுத்தினர். இங்கிலாந்துடன் எவ்வாறு விளையாடவேண்டும் என்பது குறித்து விரிவாக திட்டமிட்டோம். அதன் பலனாக இங்கிலாந்தை கடைசிவரை போராட வைத்தோம்' என இங்கிலாந்தின் முன்னாள் பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவித்தார்.

அப் போட்டியில் இலங்கையின் சுழல்பந்துவீச்சில்  இங்கிலாந்தின் மத்தியவரிசை ஆட்டங்கண்டது. ஆனால், பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 42 ஓட்டங்களின் உதவியுடன் 2 பந்துகள் மீதமிருக்க வெற்றியீட்டிய இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அவுஸ்திரேலியாவில் பெயர் பெற்ற அணிகளை இலங்கை வெற்றிகொள்ளாதபோதிலும் தான் பயிற்றநராக பொறுப்பேற்றதிலிருந்து அணியில் முன்னேற்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என கிறிஸ் சில்வர்வூட் கூறினார்.

'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு செல்வதற்கு முன்னர் வெள்ளைப் பந்து (மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் வகை) கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் ஆரம்பித்த சில முறைமைகளில் முன்னேற்றத்தை காணலாம். எப்போது தாக்க வேண்டும், எப்போது தாக்கக்கூடாது, எப்போது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பதை உறுதிசெய்யும்வகையில் நாங்கள் எமது கூட்டுமுயற்சியை கட்டியெழுப்பிவருகிறோம். அதுதான் எனக்கு தேவை. அவர்கள் அவர்களாகவே இருக்கவேண்டும். ஆடுகளத்தினுள் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றத்தை தொடரவேண்டும்' என்றார் சில்வர்வூட்.

இங்கிலாந்துடனான போட்டியில் களத்தடுப்பு சற்று சிறப்பாக இருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவில் பொதுவாக இலங்கையின் களத்தடுப்பு சிறப்பாக அமையவில்லை என்பதை சில்வர்வூட் ஒப்புக்கொண்டார்.

'களத்தடுப்பு விடயத்தில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தி கடுமையாக பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதிலிருந்து நாங்கள் ஒதுங்க மாட்டோம். இது நாங்கள் செய்யவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதில் நாங்கள் முன்னேறவேண்டும்' என அவர் கூறினார்.

இதேவேளை, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகியோர் குறித்து சில்வர்வூட் தனது திருப்தியை வெளியிட்டார்.

'சில மாதங்களுக்கு முன்னர் குசல் மெண்டிஸை விக்கெட்காப்பாளராகவும் ஆரம்ப வீரராகவும் நாங்கள் அறிவித்தபோது அவர் அதனை சிறப்பாக நிறைவேற்றிக்காட்டினார். அவரை குறித்தும் முன்வரிசை (முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள்) துடுப்பாட்டம் குறித்தும் நான் திருப்தி அடைகிறேன். அவர்கள் சிறந்த ஆரம்பங்களை இட்டுக்கொடுத்தனர்.

'வனிந்து ஹசரங்க ஒரு வெற்றிவீரர் அல்லவா? அவர் ஒரு சிறந்த வீரர். அதேபோன்று பெத்தும் நிஸ்ஸன்க கடந்த 12 மாதங்களில் படிப்படியாக முன்னேறியுள்ளார். அவரது திறமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவருக்கு எப்போதும், எதுவும் இலகுவாக அமையவில்லை. அதற்காக அவர் கடுமையாக பயிற்சியில் ஈடுபடுவார். வலைப்பயிற்சியில் சிறப்பாக ஈடுபாடுவார். அவர் துடுப்பெடுத்தாடிவரும் விதம் அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது' என்றார் சில்வர்வூட்.

இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்த மூவருடன் தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, மஹீஷ் தீக்ஷன, மாற்றுவீரர் லஹிரு குமார ஆகியோரே தங்களாலான அதிகப்பட்ச பங்கிளிப்பை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பிரகாசிக்காதது இலங்கை அணிக்|கு பாதககத்;தை ஏற்படுத்தியது.

8 போட்டிகளில் விளையாடிய குசல் மெண்டிஸ் 2 அரைச் சதங்களுடன் 223 ஓட்டங்களையும் 7 போட்டிகளில் விளையாடிய பெத்தும் நிஸ்ஸன்க 2 அரைச் சதங்களுடன் 214 ஓட்டங்களையும் 8 போட்டிகளில் விளையாடிய தனஞ்சய டி சில்வா ஒரு அரைச் சதத்துடன் 177 ஓட்டங்களையும் 7 போட்டிகளில் விளையாடிய சரித் அசலன்க 131 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையாக செயற்பட்டனர்.

ஆனால், 8 போட்டிகளில் விளையாடிய பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, 7 போட்டிகளில்  விளையாடிய   சாமிக்க கருணாரட்ன ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர்.

பந்துவீச்சில் 8 போட்டிகளிலும் விளையாடிய வனிந்த ஹசரங்க டி சில்வா 15 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 9 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 6 விக்கெட்களையும் மாற்று வீரராக அணியில் இணைந்து 6 போட்டிகளில் விளையாடிய லஹிரு குமார 6 விக்கெட்களையும் கைப்பற்றி திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, 'அடுத்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் அந் நாட்டு சூழ்நிலை இலங்கை வீரர்களுக்கு பழக்கப்பட்டது. அது எமது வீரர்களுக்கு அனுகூலமாக அமையும். ஆனால், சில விடயங்களை கட்டியெழுப்பவேண்டியுள்ளது' என  கிறிஸ் சில்வர்வூட் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20