சிறு தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள்

Published By: Digital Desk 2

07 Nov, 2022 | 10:00 AM
image

(அருள்கார்க்கி)

தேயிலைத் தொழில் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியிலேயே சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகிவிட்டன. ஆரம்பகாலத்தில் இவை தனியார் தோட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் காணி சீர்த்திருத்தத்தின் பின்னர் இந்த தனியார் தோட்டங்கள் யாவும் தேயிலை சிற்றுடைமைகள் என்று வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. காணி சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது தேயிலை நிலங்கள் யாவும் இலங்கையர்களுக்கே சொந்தம் என்று அப்போதைய அரசாங்கம் அறிவித்தது. ஆயினும் அது தொழிலாளர்களுக்கு சொந்தமாகவில்லை. மாறாக தேயிலை காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்தமைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் அறவழிப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. இது அன்றே தேயிலை சிற்றுடைமைகளுக்கு அரசாங்கம் பக்கபலமாக இருந்ததற்கான அடிப்படையாகும். 

அன்று தொடக்கம் இன்றுவரை சிற்றுடைமையாளர்களுக்கு பல்வேறு வகையிலும் அரசாங்கம் பக்கபலமாக இருந்து வருகின்றது. 1975 இல் 1,17,000 ஆக இருந்த தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை 1982 இல் 2,36,000 ஆக அதிகரித்து 2006 இல் ஏறக்குறைய 3,19,000 பேராக உயர்ந்துள்ளது. இந்த தொகை 2017 இல் 3,95,414 ஆகவும், 2018 இல் 3,99,313 ஆகவும், 2019 இல் 4,00,987 ஆகவும், 2020 இல் 4,04,291 ஆகவும் உயர்ந்துள்ளது. இது சிற்றுடைமையாளர்களின் வளர்ச்சிப் போக்கை மட்டுமல்லாது பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியையும் தெளிவுப்படுத்துகிறது. 

தேயிலை சிற்றுடைமையாளர்களாக உள்ளோரில் பெரும்பாலோனோருக்கு அரை ஹெக்டயருக்கும் குறைவான தேயிலை நிலமே உரிமையாக உள்ளதுடன், இவர்களில் பெரும்பாலோனோர் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றனர். தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கான அதிகார சபையானது அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பொறுப்பாகவும் சமூக, பொருளாதார ரீதியாக அவர்களை  பாதுகாக்கும் அமைப்பாகவும்   செயற்பட்டு வருகின்றது. 

இவ் அதிகார சபையானது  1980 களின் பின்னர் உயர் விளைச்சல் தரக்கூடிய தேயிலை கன்றுகளை  அவர்களுக்கு வழங்கி வருகின்றது. இலகு வட்டியில் கடன்கள், பச்சைத் தேயிலைக்கு உயர்ந்த விலை , உரமானியம்,   ஆசியஅபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொழில்சாலைகளை நிர்மாணிக்க உதவியமை இவற்றில் முக்கியமானவை. இன்று இலங்கையில் விளையும் தேயிலையின் 75 வீதத்தை சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களே பெற்றுத்தருகின்றனர். 

ஆனால் இவ்வாறான எவ்வித உதவிகளும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கடந்த 150 வருடகாலமாக அறிய முடியவில்லை.   

இலங்கையில் மொத்த விவசாய நிலத்தில் 16 சதவீதம் தேயிலை துறைக்கு சொந்தமானது. இதில் மொத்த தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி (Tea Control Act) நாடு முழுவதும் 20 பேர்ச்சஸ் முதல் 10 ஏக்கர் வரையிலான தேயிலை நிலங்கள் சிறிய தேயிலை தோட்டங்களாக கருதப்படுகின்றன  

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கையின் படி (2020)   சிற்றுடைமைகள் 2018 ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 75.02 சதவீதத்தை கொண்டுள்ளன. 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களிலும் முறையே 75.21 சதவீதம் மற்றும் 73.85 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. மறுபுறம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் மொத்த உற்பத்தி 2018 ஆம் ஆண்டு 24.2 சதவீதம், 2019 ஆம் ஆண்டு 24.05 சதவீதம், 2020 ஆம் ஆண்டு 25.37 சதவீதம் என்றவாறு உள்ளது. இது சிற்றுடைமைகளின் சமகால வளர்ச்சிக்கு சிறந்த உதாரணமாகும். 

 

ஆனாலும் இத்தோட்டங்களில்  பணிபுரியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலையானது பின்னோக்கி செல்கின்றது. அவர்களின் சம்பளம் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. உரிமையாளர்களின்  முதன்மை நோக்கம் இலாபம் மட்டுமே.   மேலும் இத்தோட்டங்களின்    தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இல்லை.

 இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் புதுப்பிக்கப்படுகின்ற கூட்டு ஒப்பந்தம்  இத்தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது இல்லை.   மேலும் இவர்களின் கொடுப்பனவு முறையை கேள்விக்குட்படுத்த எந்தவொரு அதிகாரம் பொருந்திய நிறுவனமும் இல்லை. என்பதும் ஒரு பாரிய குறைபாடாகும்.  

இத்தொழிலாளர்கள் நாளாந்தம் பறிக்கும் கொழுந்தின் அளவை  பொறுத்தே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. பெரும்பாலான சிறு தேயிலை தோட்டங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிப்பதற்கு ரூ.30 வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது. அதுவும் சிறுதோட்டங்களில் ஒவ்வொரு நாளும் 20 கிலோ தேயிலைக் கொழுந்தை பறிப்பதென்பது சவாலானது. 

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பு, உழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு சேவைக்கால கொடுப்பனவு போன்ற எவ்வித நலன்புரி சேவைகளும் முழுமையாக வழங்கப்படுவதில்லை.  

சிறியளவிலான மக்கள் குடியிருப்பாளர்களாக உள்ள தெயிலை சிற்றுடைமைகளில் வீடு பாதை வசதிகள், முன்பள்ளிகள், மருத்துவசாலைகள் குடிநீர், மகப்பேற்று நிலையங்கள், போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.  இங்குள்ள மக்கள்   அந்நியப்படுத்தப்பட்ட சமூகத்தினர்களாக காணப்படுகின்றனர். 

கருத்துகள்

இம்மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சமூக ஆய்வாளரும் சட்டத்தரணியுமான  இ.தம்பையா கூறுகையில் “ சிறு தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். முதலாவதாக அவர்களின் சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் ஓரளவுக்கு தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக அக்கறை காட்டுவதங்கு சட்டங்கள் உள்ளன.  ஆனால் சிறு தேயிலை தோட்டங்களில் அவ்வாறில்லை. அங்குள்ள மக்கள் அடிமைகள் போன்றே நடத்தப்படுகின்றனர்  அவர்கள் பறிக்கும் கொழுந்துக்கு ஏற்ற விதத்திலேயே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படும். இது அவர்கள் எவ்வித நிறுவன அமைப்புக்குள்ளும் உள்வாங்கப்படவில்லை என்பதனை குறிக்கின்றது.  ஆனால்  தனியார் தோட்டங்கள் கூட்டு ஒப்பந்தத்தத்தில்  எட்டப்படும் தீர்மானங்களுக்கு கட்டுப்படுதல் வேண்டும் என்பது தொழில் ஆணையாளரின் கட்டளையாகும்.   மறுபுறம் ஒரு தோட்டத்திலிருந்து பிரிதொரு தோட்டத்துக்கு மேலதிக வருமானம் ஈட்ட அவர்கள் செல்வதற்கும் அனுமதியில்லை இவ்வாறான சம்பவங்களை பின்னணியாகக் கொண்ட பல வழக்குகளில் எனக்கு தனிப்பட்ட ரீதியாக அனுபவம் உண்டு”  என்று   கூறினார். 

இதற்கு தீர்வாக அவர்  சில யோசனைகளை முன்வைக்கின்றார்.

1. தேயிலை சிற்றுடைமையாளர்களுக்கு தொழில்துறை சார்ந்தும், தொழிலாளர்கள் சார்ந்தும் ஒரு சட்ட ஏற்பாட்டை கொண்டு வருதல்.

2. சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் யாப்பில் திருத்தங்களை கொண்டு வருதல். 

3. அரசு, சிற்றுடைமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்ததற்கான ஒரு கூட்டுறவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல். 

நிறுவன அமைப்பு இல்லாதது குறைபாடு

அதே போல் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆழமான அனுபவங்களை கொண்ட சமூக ஆய்வாளரும் சட்டத்தரணியுமான கௌதமன் கூறும் போது,    பெருந்தோட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஒரு நிறுவன அமைப்ப காணப்படுவதால் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால் சிறுதோட்டங்களில் அவ்வாறு இல்லை. பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் கம்பனி  தோட்டங்களுக்கு அருகாமையில் சிறு தோட்டங்கள் காணப்படுவதால் சம்பள விடயத்தில் ஒரு நியாயம் காணப்படுகின்றது.   

ஆனால் எல்லா தோட்டங்களிலும் அவ்வாறு இல்லை. அங்கு உரிமையாளர்கள் வைத்ததுதான் சட்டம். ஊதியம், ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம், ஏனைய நலன்சார் திட்டங்கள், வீட்டு வசதிகள், சுகாதாரம், உள்ளிட்ட விடயங்களில் பாரிய பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவர்களை சட்டரீதியான ஒர கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கிறார்.  

தொழிலாளர்களின் வேதனை வெளிப்பாடுகள்

கொஸ்லாந்தை பிரதேசத்தை அண்மித்த ஒரு சிறு தேயிலை தோட்டத்தில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் ஓய்வ பெற்றவர்களாவர். அவர்களுக்கான நாளாந்த சம்பளம் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியமோ அல்லது வேறெந்த கொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை.     இவர்களுக்கான நலன்புரி வசதிகளும்  முறையாக இல்லை என்பதை அவர்களின் வீடுகளை அவதானித்தபோது தெளிவாகியது. 

அப்புத்தளை பிரதேசத்தின் ஒரு தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு  நீண்டகாலமாக   ஊழியர் சேமலாப  நிதியத்துக்காக பணம் செலுத்தப்படவில்லை. அந்த தனியார் தோட்டத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கும் அதேவேளை அந்த தோட்டத்தை நிர்வாகம் செய்தவர்களால் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய பணம் முறைகேடாக கையாளப்பட்டு இருப்பதாகவும் அம்மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

போதிய தரவுகள் இல்லை  

இத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து பேராதனை பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் கூறும் போது,  . “தேயிலை சிற்றுடைமைகள் என்று சொல்லப்படும் தனியார் தோட்டங்கள் தான் இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கின்றன. அரசாங்கமும் அவர்களுக்கு கணிசமான அளவு மானியங்களையும் கடன் உதவிகளையும் வழங்குகின்றது. அவர்கள் சமீபகாலமாக அதிகமான விளைச்சலையும் பெற்றுக் கொடுக்கின்றனர். கணக்கீட்டின் படி இலங்கையில் 4 இலட்சம் சிறு தேயிலை தொட்ட உரிமையாளர்கள் இன்று உள்ளனர். ஆனால் அவர்களின் தோட்டங்களில் தொழில்புரியும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உரிமைகள் மீறப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் உள்ளனர். சும்பளம், மேலதிக கொடுப்பனவுகள், நலன்புரி தேவைகள் என்பன ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலேயே உள்ளது.

தென் மாவட்டங்களை பொருத்தவரையில் அங்குள்ள சிற்றுடைமைகளில் தொழில் புரியும் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் அவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக கைவிடப்பட்ட ஒரு சமூகமாகவே இருக்கின்றனர். இதில் மலையக மக்களும் அடங்குகின்றனர்.   இவர்கள் தொழிற்சங்கங்களில் இல்லாமையும், நிறுவனமயப்படுத்தப்படாமையும், இவர்களின் தொழில் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளதற்கான பிரதான காரணங்களாகும். 

தனியார் தோட்டங்களில் தொழில்புரியும் மலையக மக்களின் தரவுகள் முழுமையாக இல்லாமையும் எமக்குள்ள ஒரு குறைபாடாகும். இவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இது சவாலாக உள்ளது.”     அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் செய்வதும் கட்டாயமாகும். இது அவர்களை அடிமை மனநிலையிலிருந்து வெளிக்கொண்டு வரும்.   அதற்கு எமது அரசியல் பிரதிநிதித்துவம் வலுவானதாக இருப்பது கட்டாயம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்களை தொகுத்து ஆராய்கையில் சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களை நிவர்த்திச் செய்யும் வகையில் புத்திஜீவிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் மலையக மக்கள் சிறு தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக உருவாவதை தடுக்க முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22