குறுகிய நோக்கங்களே நாட்டை சீரழித்துள்ளன

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 03:11 PM
image

எம்.எஸ்.தீன் 

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென்ற குறுகிய நோக்கத்திற்காக சிறுபான்மையினர் மீதும், சிறுபான்மையினத்தின் தலைவர்களின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதும், அவர்களை சிறையில் அடைப்பதும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்கதையாக உள்ளது.

இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானது என்பதனை மறுதலித்து பௌத்த சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்தான நாடு என்றும், சிங்கள மொழியும், பௌத்த மதமும் அரசியல் அதிகாரங்களைப் பெற்றதாகவும் மாற்றிக் கொண்டு நாட்டு மக்களை பிழையாக வழி நடத்தியமையால்தான் இன்று மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியையும், சர்வதேச நாடுகளினால் புறக்கணிக்;கப்படும் அரசியல் நாகரிகத்தையும் கொண்ட நாடாக பெயர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இதுவரையும் ஆட்சி செய்த ஆட்சியாளர்களும், அதற்கு துணையாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும். 

நாடு சீரழிந்துள்ளமைக்கான காரணங்களை தற்போதைய நிலையில் மக்கள் உணர்ந்துள்ளார்கள். இந்தநாடு எல்லோருக்கும் சொந்தமான நாடு என்று பேசுவதற்கு மக்களில்; பெரும்பான்மையினர் புறப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு மாத்திரம் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது, முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் சிறைப்படுத்தியுள்ளது.

இதனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்று சிங்கள மக்கள் உட்பட்ட மூவின மக்களும் வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் தேவைக்காகவும், மக்களை முட்டாளாக்குவதற்காகவும் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலரும் இன்றும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தமிழர்களுக்கு எதிராக பாய்ந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாய்ந்து கொண்டது. புலிகளையும், தமிழர்களையும் துரோகிகளாகக் காட்டி அரசியல் செய்தமையை இறுதி யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க முடியாத அரசியல் சூழல் ஏற்பட்டது மட்டுமல்ல பேரினவாதக் கட்சிகளின் இனவாத, பௌத்த கடும்போக்குவாத அரசியலையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்தான் பயங்கரவாதிகள், துரோகிகள், கருத்தடை கொத்து வியாபாரிகள், கருத்தடை உள்ளாடை வியாபாரிகள், ஹலால் உணவு முத்திரைக்கு தடை என பல குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்களின் மீது வைத்து அடக்கு முறைகளை மேற்கொண்டனர். முஸ்லிம்களின் மீது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் தாக்குதல்களை மேற்கொண்டனர். 

சட்டமும், ஒழுங்கும் மௌனமாக இருந்தன. இத்தகைய குற்றச்சாட்டுக்களை செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடியது மட்டுமல்லாது ஆட்சியாளர்களின் பாதுகாப்பும், உபசரிப்பும் அவர்களுக்கு இருந்தன. முஸ்லிம்களின் வர்த்தகம், இருப்பு, பாதுகாப்பு, மதவிழுமியங்கள், பள்ளிவாசல்களென எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர். 

இவ்வாறு முஸ்லிம்களின் மீது நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையிலும் முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சியாளர்களுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அமைச்சர் பதவிகளும், சலுகைளும் அவர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாகக் காட்டவில்லை. 

மாறாக ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாகவே தம்மை இனங்காட்டிக் கொண்டனர். முஸ்லிம் கட்சிகள் ஆட்சியாளர்களுடன் அளவு கடந்த இணக்கப்பாட்டுடனும், பதவிக்காகவும் தலையாட்டிக் கொண்டிருந்தமையால் தான் ஒருகட்சி பல கட்சிகளாக உடைந்து போவதற்கு பிரதான காரணமாகும். சமூக நோக்கங்களை புறக்கணித்து தலைவர், அமைச்சர் என்ற பதவிகளை நோக்கியே தமது அரசியலை முன்னெடுத்தனர். 

ஆட்சியாளர்களின் அங்க அசைவுகளுக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் கட்சிகளையும், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களையும் பேரினவாதமும், பௌத்த கடும்போக்கு வாதமும் அரசியல் தேவைக்காக சிறைப்பிடிக்கத் தொடங்கின.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்கள் சஹ்ரான் என்பவரின் தலைமையில் முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்து என்றே தெரிவிக்கப்பட்டன. ஆயினும் இத்தாக்குதல்களின் நோக்கத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். தற்போதும், சிறையில் உள்ளனர். 

முஸ்லிம் அரசியல் தலைவர்களான றிசாட் பதியூதின், முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களுக்கு இத்தாக்குதல்களுடன் தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன் வைக்கப்பட்டன. பௌத்தகடும்போக்குவாத தேரர்களும், இனவாத அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை கைது செய்ய வேண்டுமென்று போராட்டங்களை நடத்தினார்கள். 

இந்தப் பின்னணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீனை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். சுமார் 07மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்களில்லை என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 2022 நவம்பர் 02ஆம் திகதி ரிஷாத் பதியூதீனை விடுதலை செய்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுடன் றிசாட் பதியூதீனுக்கு தொடர்புகள் உள்ளன. முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயற்பாடு என்று முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தாலும் குறித்த தாக்குதல்கள் தேர்தல் வெற்றிக்காகவே மேற்கொள்ளப்பட்டதென்று பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சிங்கள மக்கள் பிரதிநிதிகளும், புத்திஜீவிகளும் வெளிப்படையாகக் சொல்லத் தொடங்கினர். 

சில அரசியல்வாதிகளின் மீது நேரடியாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். தேர்தல் ஒன்றுக்காக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்றே பெரும்பான்மையினர் தற்போது பேசிக் கொள்கின்றனர்.  ஆகவே, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் என்று ரிஷாத் பதியூதீனை கைது செய்து சிறையில் அடைத்தமை அரசியல் தேவைக்காக என்பது இப்போது நிருபணமாகியுள்ளது. 

தற்போது ரிஷாத் பதியூதீன் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டாலும் சிறையில் அடைக்கப்பட்ட வேளை அவர் அடைந்த துன்பங்களையும், வேதனைகளையும் அவரது மனதிலிருந்து விடுவிக்க முடியாது. அது பெருமூச்சு விட்டுக் கொண்டே இருக்கும். 

அது போலவே ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றவுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது சட்ட ரீதியாகவும், அதற்கு புறம்பாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட வேதனைமிகு நடவடிக்கைகளை முஸ்லிம்கள் மறந்துவிட முடியாது. 

முஸ்லிம்களின் வீடுகளில் சிறியதொரு கத்தியைக் கூட வைத்திருக்க முடியாது. பஸ்ஸில் பயணம் செய்ய முடியாது. முஸ்லிம் பெண்கள் தங்களின் கலாசார உடைகளை அணி முடியாது. முஸ்லிம்களை பேரினவாத வைத்தியர்கள், வர்த்தகர்கள், இனவாத அரசியல்வாதிகளும் மற்றும் தேரர்களும் ஒதுக்குதல்களை மேற்கொண்டனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முடியாதென்று பகிரங்கமாக தெரிவித்தனர். 

அரசியல் தேவைக்காக ஒரு சமூகத்தையே சீரழிக்க நினைத்தனர். அவர்களின் எண்ணங்கள் வெற்றி பெற்ற போதிலும், அதற்கு நீடித்துக் கொள்வதற்கு தர்மம் துணை நிற்கவில்லை. இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த இனவாத தேரர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று எண்ணும் அளவுக்கு தலைமறைவாக இருக்கின்றார்கள். 

நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் உண்மையை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் உண்மையை வாழ வைக்க வேண்டுமென்று உறுதி கொண்டுள்ளார்கள். இந்த உறுதி நிலைபேறடையும் போது மாத்திரமே இலங்கையினால் பொருளாதார, அரசியல், சமூக ஒற்றுமை ரீதியாக தலைநிமிர்ந்து நிற்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13