பதற்றத்தை தூண்டும் உறவு

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 03:11 PM
image

சுபத்ரா

சீனா விவகாரத்தில் தங்களை மீண்டும் மீண்டும் இலங்கை ஏமாற்றுகிறது என்ற இந்தியாவின் சந்தேகம் இப்போது இன்னும் வலுவடைந்திருக்கிறது.

சீனப் போர்க்கப்பல்களுக்கு, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து, கொள்கலன் கப்பல்கள் மூலம், இலங்கை எரிபொருள் நிரப்பும் நடவடிக்கையை மேற்கொள்வதாக இந்தியா கண்டறிந்திருக்கிறது.

இந்த விவகாரம் புதுடில்லிக்கு மீண்டும் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுடில்லி ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

இதனால், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு, சீனப் போர்க்கப்பல்கள் தரிப்பதையும், எரிபொருள் நிரப்புவதையும் தடுத்து நிறுத்துமாறும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கும், கப்பல்களை நிறுத்துவதற்கும் வெளிப்படையான - நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கொண்டு வருமாறும், இலங்கை அரசாங்கத்திடம், புதுடில்லி வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இலங்கை கப்பல்கள், எரிபொருளை எடுத்துச் சென்று ஆழ்கடலில் சீன கப்பல்களுக்கு வழங்கும் நடவடிக்கை, இந்தியா மற்றும் சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

‘யுவான் வாங்-5’ என்ற செய்மதி மற்றும் ஏவுகணைகள் போன்ற வான்கலங்களின் நகர்வுப் பாதையைக் கண்டறியும், சீன ஆய்வுக் கப்பல் கடந்த ஓகஸ்ட் மாதம், அம்பாந்தோட்டையில் தரித்து நின்ற விவகாரம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பெரிதும், பாதிக்கச் செய்தது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், பதவி விலகுகின்ற தருணத்தில், அளிக்கப்பட்ட அந்த அனுமதியைப் பயன்படுத்தி- சீனக் கப்பல் இலங்கைக்கு வந்திருந்தது.

அதனை தடுக்க முயன்று, சீனாவின் கோபத்தை எதிர்கொண்ட ரணில் அரசாங்கம் பின்னர், முன்னைய அரசாங்கம் அளித்த அனுமதியை இரத்துச் செய்ய முடியாது என்ற காரணத்தை இந்தியாவிடம் கூறி, ஒருவாறு தப்பிக் கொண்டது.

அந்தக் கப்பல் விவகாரத்துக்குப் பின்னர், இவ்வாறான விவகாரங்களைக் கையாளுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கூறியிருந்தார்.

ஆனாலும், இந்த விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படாத நிலையிலேயே, அடுத்த பிரச்சினை முளைத்திருக்கிறது.

சீன போர்க் கப்பல்களுக்கு, ஆழ்கடலில் வைத்து இலங்கை கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதாக இந்தியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்குத் தெரியாமல், ஆழ்கடலில் வைத்து சீனக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது.  அதனைக் கண்காணிக்கும் வசதி இந்தியாவிடம் மாத்திரமன்றி, அமெரிக்காவிடமும் உள்ளது.

இது சீனாவுக்கும் தெரியும். இலங்கைக்கும் தெரியும். அது தெரிந்திருந்தும், இலங்கை கப்பல்கள், ஆழ்கடலில் வைத்து எரிபொருள் நிரப்பியிருந்தால், இந்தியாவையோ அமெரிக்காவையோ பொருட்டாக கருதவில்லை என்றே அர்த்தம்.

அதனால் தான், இலங்கை தன்னை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது என்பது, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே தெரிந்து விட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்ப சீனா முற்பட்ட போதே அது வெளிப்படையாகி விட்டது. அதனை 99 வருட குத்தகைக்கு சீனா பெற்றுக் கொண்ட போது அந்த திட்டம் இன்னும் உறுதியாகியிருந்தது.

இந்தியப் பெருங்கடலில் திறந்த- வெளிப்படையான சுதந்திரமான கப்பல் போக்குவரத்து இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. அதனை இந்தியாவும் ஆதரித்தது.

ஆனால், சீனா இங்கு இரகசியமான முறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகவே, ஏடன் வளைகுடாவில், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், சீனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

ஆரம்பத்தில், நாசகாரிகள் மற்றும் விநியோகக் கப்பல்களுடன் சீனாவில் இருந்து ஏடன் வளைகுடாவுக்குச் செல்வதும், பின்னர் மற்றொரு அணி அங்கு சென்றதும், அது மீளத் திரும்புவதுமான நிலை காணப்பட்டது.

அப்போதெல்லாம் கொழும்பு துறைமுகத்துக்குத் தான், சீன கப்பல்களின் அணி எரிபொருள் நிரப்புவதற்காக வருவதுண்டு.

ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பில் ஈடுபடுவதைக் காரணம் காட்டி சீனா ஜிபோட்டியில் விநியோகத் தளம் ஒன்றை அமைத்தது.

10 ஆயிரம் கடற்படையினருடன் அந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து சீனா அங்கு தமது கப்பல்படை அணி ஒன்றை நிறுத்தி வைத்திருக்கிறது.

ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் இப்போது வெகுவாக குறைந்து விட்ட போதும், சீனா அங்கு தனது நிலையைப் பலப்படுத்தி வருகிறது.

அந்த தளத்துக்கான தொடர்புகளை அதிகரித்து, இந்தியப் பெருங்கடலில் தனது கப்பல்படையின் போக்குவரத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.

இந்தக் கப்பல்களுக்கு இலங்கை எரிபொருள் நிரப்புவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக உருவாகி வருவதாக இந்தியாவும், அமெரிக்காவும் கருதுகின்றன.

சீனாவின் இந்தியப் பெருங்கடல் ஆதிக்கம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

சீனா இரகசியமாக செய்யும் வேலைகளுக்கு இலங்கை துணை போகிறது வெளிப்படைத்தன்மையற்ற வகையில் செயற்படுகிறது என்பதே இந்த நாடுகளின் முக்கியமான கவலையாக உள்ளது.

அமெரிக்கா கொடையாக வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலான பி-627 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் தான், சீன கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் விவகாரம் வெடித்திருக்கிறது.

அதேவேளை, இந்திய- இலங்கை இடையிலான உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தக் காரணமான ‘யுவான் வாங்-5’ என்ற சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பல், இந்த ஆண்டில் மூன்றாவது சமுத்திரப் பயணத்தை கடந்த 31ஆம் திகதி தொடங்கியிருப்பதாக சீனா அறிவித்திருக்கிறது.

கடந்த ஜூலையில் அதன் இரண்டாவது பயணம் தான் இந்தியப் பெருங்கடலில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்தது.

அதனை ஒரு ஆய்வுப் பயணமாக சீனா குறிப்பிட்டாலும், இந்தியப் பெருங்கடலில், இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் மற்றும் செய்மதிகளை கண்காணிப்பதே அதன் நோக்கம் என்று கெருதப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ‘யுவான் வாங்-5’ கப்பல் 110 நாட்களுக்கு மூன்றாவது பயணத்தை ஆரம்பித்துள்ள போதும், அது எங்கு செல்கிறது என்ற விபரத்தை வெளியிடவில்லை. அந்தப் பயணம் இந்தியப் பெருங்கடலுக்கான மீள் பயணமாகவும் கூட இருக்கலாம்.

மீண்டும் அந்தக் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வர முடியாது. ஆனால் ஆழ்கடலில் எரிபொருளை நிரப்பக் கூடும். அதற்கு இலங்கை உதவினாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அந்த கப்பல் மீள வருவதை இந்தியா அனுமதிக்காது.  அவ்வாறு வருமானால் அது இருதரப்பு உறவுகளுக்கு பெரும் குந்தகமாக அமையும்.

அதேவேளை, சீனக் கப்பல் கடந்த முறை வந்த போது, 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு நாடுகளின் 230 போர்க்கப்பல்கள் எண்ணெய் நிரப்புவதற்காக இலங்கைக்கு வந்து சென்றது போலத் தான் இதுவும் என்று கூறி அரசாங்கம் சமாளிக்க முயன்றது.

இந்தியா இந்த முறை அத்தகைய பதில்களை அனுமதிக்கத் தயாராக இல்லை.  அதனால் தான், கப்பல்களை நிறுத்துவதற்கும் வெளிப்படையான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கொண்டு வருமாறு இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நடந்த பாதுகாப்புக் கண்காட்சிக்குச் சென்றிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், “இந்தியப் பெருங்கடலை உலக இராணுவ சக்திகளின் விளையாட்டு மைதானமாக்க அனுமதிக்க முடியாது” என்று கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு கூறியிருந்த நிலையில் தான், சீனாவுக்கான கதவுகளை ஆழ்கடலில் திறந்து விட்டிருக்கிறது இலங்கை.

இதற்கு மேல், சீன விவகாரத்தில் இந்தியாவினால் எவ்வாறு இலங்கை மீது நம்பிக்கை கொள்ள முடியும்? என்று புதுடில்லி கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04