நித்திய கண்டம்

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 02:06 PM
image

சத்ரியன்

நித்திய கண்டம், பூரண ஆயுள் என்பது பழமொழி. 

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு 2023ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டம் ஒரு முக்கியமான கண்டமாக இருந்தாலும், அது அவரது ஆட்சிக்கு பூரண ஆயுளைக் கொடுக்குமா என்பது, அடுத்த மாதம் தான் தெரியவரும்.

வரும் 14ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளார். நிதியமைச்சர் என்ற வகையிலேயே, அவர் வரவு,செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளார்.

எனினும், 22 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 21 ஆவது திருத்தச் சட்டமாக, சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவினால், நிதியமைச்சராகப் பதவி வகிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.

ஏனென்றால், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 21 ஆவது திருத்தச் சட்டத்தின்படி, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மட்டும், தான் தன் வசம் வைத்திருக்க முடியும்.

வேறு ஏதேனும் ஒரு அமைச்சை அவர் பொறுப்பேற்றுக் கொண்டாலும், 14 நாட்களுக்குத் தான் அதனை அவர் நிர்வகிக்க முடியும்.

அதற்குள் அந்த அமைச்சுக்கு வேறொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அரசியலமைப்பின் 44 (3)ஆவது பிரிவு

கடந்த 31ஆம் திகதி சபாநாயகரால் கையெழுத்திடப்பட்டு, 21 ஆவது திருத்தச் சட்டம், அமுலுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும், 13 திகதி வரையுமே, நிதியமைச்சருக்கான கடமைகளை ஜனாதிபதியினால் ஆற்ற முடியும்.

அவ்வாறாயின் ஜனாதிபதியினால், சட்டரீதியாக வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.

அதேவேளை, வரவு,செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி, கடன் சேவைச் செலவுகளை உள்ளடக்கியதாக, நிதி அமைச்சுக்கு 613 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ள அதேவேளை, பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இதில், இராணுவத்திற்கு 209 பில்லியன் ரூபாவும், கடற்படைக்கு 75 பில்லியன் ரூபாவும், விமானப்படைக்கு 66 பில்லியன் ரூபாவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட பலநோக்கு செயலணிக்கு 9.8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.

அதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு 129 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. இதில் 116 பில்லியன் ரூபா பொலிசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிசார் மற்றும் முப்படையினருக்கு மாத்திரம், 539 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

ஆனால், சுகாதார அமைச்சுக்கு 322 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபாவுமே ஒதுக்கப்படவுள்ளது. அரசாங்க செலவினங்களைக் குறைப்பது, வருமானங்களை அதிகரிப்பது இந்த இரண்டும் தான், இப்போதுள்ள முக்கியமான தேவை.

அரசாங்க வருமானத்தில், 11சதவீதத்தை வரிகள் மூலம் திரட்டும் வகையில், வரவு,செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள போதும், அது சாத்தியமற்ற கனவு என்று, முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான எரான் விக்கிரமரத்ன கூறியுள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்கு திட்டமிடுகின்ற போதும், படைக்குறைப்பு என்ற முக்கியமான யோசனையை இதுவரை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவேயில்லை.

பாதுகாப்பு அமைச்சுக்கு 360 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவாகவும், 50 பில்லியன் ரூபா மூலதனச் செலவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வறுமை, கடனைத் தீர்க்க வக்கில்லாத, வங்குரோத்து நிலையில் உள்ள ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரம், போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகளை விஞ்சி, பாதுகாப்புச் செலவினம் உயர்வாக இருப்பது, ஆபத்தான நிலை.

இலங்கையில் எப்போதும் பாதுகாப்புச் செலவினம் மிகையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பாதுகாப்புச் செலவினங்களை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அரச நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைப்பது போன்று, பாதுகாப்புத் துறையை மறுசீரமைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் செயற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறான நிலையில், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகளால், பணவீக்கம் பல மடங்கு அதிகரித்து விட்டது. மக்களால் வாழ முடியாதளவுக்கு சுமை அதிகரித்திருக்கிறது.

வரிகளை மேலும் மேலும் அதிகரித்து மக்களைச் சுரண்டுகின்ற முயற்சிகளைத் தான் அரசாங்கம் எடுத்து வருகிறதே தவிர, பாதுகாப்பு போன்ற அவசியமற்ற துறைகளுக்கான செலவினங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில், மக்கள் பொருட்களை வாங்குவதை தவிர்த்தால், அரசாங்கம் நினைப்பது போன்று வரி வருமானத்தை 11 சதவீதமாக அதிகரிக்க முடியாது என்று ஏரான் விக்ரமரத்ன குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே மக்கள் பொருளாதார நெருக்கடியால் பொருட்களை வாங்குவதை குறைக்கத் தொடங்கி விட்டனர். இது மக்களின் போசனை மட்டத்தைக் குறைத்து விட்டது.

அத்தியாவசியமற்ற பொருட்களை தவிர்க்க மக்கள் முற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வரி வருமானம் கிடைக்காது என்பது எதிர்க்கட்சிகளின் கணிப்பு.

அரசாங்கம் முன்வைக்கப் போகும் வரவுசெலவுத் திட்டம், வழக்கமான பாணியில் இருந்தால் அதனை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இதுதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ள முக்கியமான பிரச்சினை. அவர் ஜனாதிபதியாக இருக்கிறார் என்பதை தவிர, அவரது அரசாங்கம் என்று கூறக் கூடிய அரசாங்கம் பதவியில் இல்லை என்பதே உண்மை.

ஆட்சியில் இருப்பது தங்களின் அரசாங்கம் தான் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் காப்பாற்ற முடியுமா என்பதை, வரவுசெலவுத் திட்டம் தான் தீர்மானிக்கப் போகிறது.

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கிடைத்த மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு, வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது, அரசாங்கத்துக்குக் கிடைக்காது.

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக, எதிர்க்கட்சியினரும் வாக்களித்தனர்.

வரவு,செலவுத் திட்டத்துக்கு அவர்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் தற்போதைய அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே முனைகிறார்கள். விரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகிறார்கள்.

இதனால் தற்போதைய, ரணில்- ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு, அவர்கள் முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேவேளை, தற்போதைய அரசாங்கத்துக்கு, பாராளுமன்றத்தில், 8 தொடக்கம் 12 வரையான உறுப்பினர்களின் பெரும்பான்மை பலமே உள்ளது. 

இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்த்துக் கூட வாக்களிக்கத் தேவையில்லை. அவர்கள் வாக்களிப்பை புறக்கணித்தால் கூட ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்று எச்சரித்திருக்கிறார் சன்ன ஜயசுமண.

வரவு,செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு எதிர்க்கட்சியிடம் கோர வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியிடம் அவ்வாறான பலம் இல்லை.

அதேவேளை மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அது சாத்தியப்படுமா என்ற கேள்வி உள்ளது.

இவ்வாறான நிலையில் வரவு,செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால், பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்படலாம்.

21ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிக்கு, பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இரண்டரை ஆண்டுகளில் கிடைக்கும்.

மார்ச் மாதம் அந்த அதிகாரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைக்கு வந்தாலும், அதற்கு அவர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க அடுத்து வரும் மாதங்களில் திரிசங்கு நிலைக்கு உள்ளாகலாம். 

அத்துடன், அரசியலமைப்பு நெருக்கடிகளை தோற்றுவித்தாலும் ஆச்சரியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04