கசப்பான பாடம்

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 02:08 PM
image

கார்வண்ணன்

யாழ்ப்பாணத்தில் இப்போது நினைவேந்தல் நிகழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

விடுதலைப் புலிகளின் காலத்தில், அதிகளவில் நினைவேந்தல்கள் இடம்பெறுவது வழக்கம். 

போரிலும், போராட்டச் செயற்பாடுகளிலும் முக்கிய பங்கு வகித்தவர்களை நினைவு கூரும் மரபு அவர்களுடையதாக இருந்ததால், அதனைச் சார்ந்த நிகழ்வுகள் அதிகம் இடம்பெற்றன.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், மாவீரர் நாளும், திலீபன் நினைவு நாளும் மாத்திரம் விடுதலைப் போராட்டம் சார்ந்த நினைவுகூரல்களாக இடம்பெறுகிறது.

விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலத்தில். நினைவுகூரல்கள் என்பது காலத்துக்குக் காலம் சிக்கல்கள், நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலங்களில் அதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. 

கோட்டா பதவியேற்றவுடன் அதனைத் தடுக்காது போனாலும், பின்னர் கொரோனா மற்றும், நீதிமன்ற கட்டளைகளை வைத்து அதனைக் கட்டுப்படுத்தினார்.

மைத்திரி, ரணில் ஆட்சிக்காலங்களில் விடுதலைப் போராட்டம் சார்ந்த எந்தவொரு நினைவுகூரலுக்கும் பெரியளவில் இடையூறு ஏற்படுத்தப்படவில்லை.

இப்போது, நினைவேந்தல்களுக்கு தடைகள் ஏற்படும் சூழல் இல்லாத நிலையில், மாவீரர்களை நினைவேந்தும் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

துயிலுமில்லங்கள் சிரமதானம் செய்யப்படுகின்றன. ஆங்காங்கே அதனைச் சார்ந்த விவகாரங்களில் இராணுவத்தினருடன் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.

மாவீரர் நினைவேந்தல் என்பது, வெறும் நினைவுகூரல் அல்லது நிகழ்வு என்பதற்கு அப்பால், கடந்தகால வரலாற்றையும், தியாகத்தையும், அடுத்தடுத்த சந்ததியினருக்கு கடத்துகின்ற ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கிறது.

நினைவேந்தல்கள் வெறுமனே ஒருவரை நினைவு கூருகின்ற நிகழ்வு மாத்திரமல்ல. அவர் சார்ந்த அரசியலை அல்லது கொள்கைளைக் கடத்துகின்ற ஒன்றும் கூட.

அண்மையில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ், கட்சி அரசியலைப் பேசிய போது கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

அதற்கு அவர், நினைவேந்தல் என்பது, அடுத்த தலைமுறைக்கு திலீபனின் கொள்கைகளை கொண்டு செல்கின்ற நிகழ்வு என்றும், திலீபனின் கொள்கையை பேசுவது அரசியல் என்றால், அந்த அரசியலை தொடர்ந்து பேசுவேன் என்றும் கூறியிருந்தார்.

திலீபன் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால், அந்த இடத்தில் அவரது கருத்து நியாயமானதாக கருதப்படவில்லை.

ஆனால், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட- சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் ஒன்று நினைவேந்தல்களின் ஊடாக எதிர்கால தலைமுறைகளுக்கு கடத்தப்படுவது முக்கியமானது. இதனை உலக நாடுகள் பலவும் செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியா நீண்ட காலமாகவே மகாத்மா காந்தியின் நினைவேந்தலை உலகம் பூராவும் கொண்டு செல்கிறது. அது அவரது கொள்கையை உலகெங்கும் கொண்டு செல்கின்ற ஒரு அரசியல். 

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த வாரம் கலாசார மண்டபத்தில் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவேந்தலை முன்னிட்டு கண்காட்சி ஒன்றை நடத்தியது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் காந்தி - நேரு போன்றவர்களை விட, போற்றுதற்குரியவராக சர்தார் வல்லபாய் பட்டேலை அடையாளப்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தை சேர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 187 மீற்றர் உயரமான சிலை, 420 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் ஆண்டு தோறும், சுப்ரமணிய பாரதியார், மகாத்மா காந்தி போன்றவர்களின் நினைவேந்தல்களை நடத்தி வருகிறது.

இந்தியத் தூதரகம் இவற்றை நடத்துவதற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன. 

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தேடி, காந்தி யாழ்ப்பாணத்திலும் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் காந்தி சேவா சங்கங்கள் உருவாகியிருந்தன.

இங்குள்ள வீடுகளில் காந்தியின் உருவப்படம் வைத்திருப்பது ஒரு கலாசாரமாகவே இருந்து வந்தது.

அதுபோல பாரதியார் தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பிய கவிஞர். அவர் மக்களின் இதயங்களில் குடியிருப்பவர்.

இதனால் இந்தியாவின் எந்தப் பின்புலமும் இல்லாமலேயே, இவர்களின் நினைவேந்தல்கள் இடம்பெறுவது வழக்கம்.

இம்முறை வல்லபாய் பட்டேலின் நினைவாக ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சிக்குப் பின்னால், ஒரு அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அதுபோலவே, ஐ.நாவில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அதுவே இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்று இந்தியா கூறியுள்ள நிலையில், இந்திய எதிர்ப்பு நிலைப்பாடும் யாழ்ப்பாணத்தில் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது.

அண்மைக்காலத்தில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன.

இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் 1987ஆம் ஆண்டு போர் தொடங்கியது, ஒக்டோபர் மாதத்தில் தான்.

ஒக்டோபர் மாதத்தில், கொக்குவில் பிரம்படி, கொக்குவில் இந்துக் கல்லூரி, கோண்டாவில், யாழ். போதனா மருத்துவனை போன்ற பல இடங்களில் இந்தியப் படையினரால் பெருமளவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த காலத்தில இடம்பெற்ற படுகொலைகள் பல வெளிச்சத்துக்கு வரவில்லை. அப்போது இறந்தவர்களின் சரியான பதிவுகள் கூட இருக்கவில்லை.

ஏனென்றால் அந்தப் போருக்குப் பிந்திய 3 ஆண்டுகள் இந்தியப் படைகளின் இறுக்கமான கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தது.

அப்போது இறப்புகளை ஆவணப்படுத்தும் சரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான சூழலும் இருக்கவில்லை.

படுகொலைகளில் பல குடும்பங்கள் அழிக்கப்பட்டன. பல குடும்பங்கள் அந்த கொடிய சம்பவத்துடன் நாட்டை விட்டு வெளியேறின. இதனால் இந்தியப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சரியான விபரங்கள் கூட பதிவாகவில்லை.

எவ்வாறாயினும் கொக்குவில் பிரம்படி, கொக்குவில் இந்துக் கல்லூரி, கோண்டாவில், யாழ். போதனா மருத்துவனை போன்றவற்றில் 1987 ஒக்டோபரில் இடம்பெற்ற படுகொலைகள் மிகவும் கொடியவை.

யாழ். போதனா மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆண்டு தோறும் நினைவு கூரப்படும் வழக்கம் உள்ளது.

பிரம்படி படுகொலைகளை நினைவேந்தும் வழக்கமும் இருந்து வந்தது.

ஆனால் இம்முறை, கோண்டாவில், கொக்குவில் இந்துக்கல்லூரி பகுதிகளில் இடம்பெற்ற நினைவேந்தல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக சில தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டன.

13 ஆவது திருத்தச்சட்டத்தையே தீர்வாக இந்தியா வலியறுத்தியுள்ள நிலையில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை யாழ்ப்பாணத்தில் கொண்டு செல்லும் ஒரு முயற்சியாகவே இந்த நிகழ்வு என கருதுபவர்களும் உள்ளனர்.

அதேவேளை, இந்தியப் படைகளின் படுகொலைகள் ஏதோ இப்போதுதான் முதல்முறையாக நினைவு கூரப்படுவதாக சிலர் தவறான அரசியல் கற்பிதம் செய்வதையும் காண முடிகிறது.

இவற்றுக்குப் பின்னால் அரசியல் இல்லை என்று கூறுவதும், இப்போது தான் இது அரசியலாக்கப்படுகிறது என்பதும், பொய்யான கருத்து.

ஏற்கனவே இந்தியப்படைகளின் படுகொலை நினைவேந்தல்கள் பல இடங்களில் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெற்று வந்திருக்கிறது.

இப்போது அதனை அரசியலாக்கும் முயற்சிகள் கூடுதலாக இடம்பெறத் தொடங்கியிருக்கிறது.

இந்தியா தனது துணைத் தூதரகத்தின் ஊடாக தனது கலாசாரம், பண்பாடு, தலைவர்களின் வாழ்க்கையை எவ்வாறு யாழ்ப்பாணத்துக்குள் ஊடு கடத்த முற்படுகிறேதோ- அதேபோன்றுதான், 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான அரசியலாக, இந்தியப் படைகளின் படுகொலைகளை அரசியலாக ஊடு கடத்தும் முயற்சிகளும் நடக்கின்றன.

இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான கலாசார, வாழ்வியல் தொடர்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமானது.அதனை எவராலும் நிராகரிக்க முடியாது. 

அதனை அரசியல் நோக்கங்கள் ஆக்கிரமிக்கும் போது தான் முரண்பாடுகள் எழுகின்றன.

நினைவேந்தல்களின் ஊடாக இந்திய எதிர்ப்புணர்வை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது, ஒரு அரசியலாக முன்னெடுக்கப்படுவதாக இந்தியா கருதக் கூடும்.

இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவுகளில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது இந்தியப் படைகளின் வருகையும், அதன் செயற்பாடுகளும் தான் என்பதில் சந்தேகமில்லை.

அந்தக் காலத்தில் இந்தியப் படைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். 

இந்தியா தனது அரசியல், இராணுவ, பூகோள நலனுக்காக ஈழத் தமிழரின் நலன்களை பலியிட்டதும், அவர்களைப் பகைத்துக் கொண்டதும் அந்தக் காலகட்டத்தில் தான்.

அந்தக் கசப்பான சம்பவங்களின் நினைவேந்தல்கள் இந்தியாவுக்கு கசப்பானவையாகவே இருக்கலாம்.

அதனைக் கடந்த ஒரு வரலாற்றுப் படிப்பினை அது. அது ஏற்படுத்திய இடைவெளியை நிரப்புவது இலகுவானதும் அல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21