பிரேசில் ஜனாதிபதி தேர்தல் வெற்றி : ஆனால் தோல்வி

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 01:44 PM
image

சுவிசிலிருந்து சண் தவராஜா

பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இரண்டாவது சுற்றுத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இடதுசாரி வேட்பாளரான லூலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துக் களம் கண்ட நடப்பு ஜனாதிபதியான பொல்சனாரோ இரண்டு நாட்கள் மௌனத்தின் பின்னர் தோல்வியை ஏற்றுக் கொண்டு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

முன்னாள் இராணுவக் கப்டனான பிரேசில் நாட்டு ட்ரம்ப்  என்று விளிக்கப்படும் பொல்சனாரோ தேர்தலுக்கு முன்பிருந்தே பிரேசில் நாட்டின் வாக்களிப்பு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டைத் தெரிவித்து வந்தவர். தேர்தல் ஆணையகத்துக்கும் அப்பால் வாக்களிப்பைக் கண்காணிக்கவென இராணுவத்தினரின் கண்காணிப்பு அமைப்பு ஒன்றையும் நிறுவியிருந்தவர். 

தேர்தல் முடிவுகள் வெளியான கணம் முதல் அவரது ஆதரவாளர்கள் - குறிப்பாக பாரவூர்தி ஓட்டுனர்கள் - நாடு தழுவிய ரீதியில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். 'பொல்சனாரோவின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இராணுவம் தலையீடு செய்ய வேண்டும்" என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. 

ஆனாலும், இராணுவத் தலையீடு எதுவும் நிகழவில்லை. மாறாக, அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற லூலா டா சில்வாவுக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கத் தொடங்கினர். அயல் நாடான ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதி பிரேசிலுக்கு நேரடியாக வருகை தந்து லூலாவைச் சந்தித்து தனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்.

தான் எதிர்பார்த்த அல்லது திட்டமிட்ட எதுவும் தான் விரும்பியவாறு நடக்கவில்லை என்பதையும், தனது விருப்புக்கு மாறாகவே அனைத்தும் நடக்கின்றது, நடக்கப் போகின்றது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட(?) பொல்சனாரோ நவம்பர் முதலாம் திகதியன்று தனது இரண்டுநாள் மௌனத்தைக் கலைத்தார். 

தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற குறுகிய நேர ஊடகர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், 'நான் ஒரு ஜனநாயக விரோதியாகவே சித்தரிக்கப்பட்டே வந்துள்ளேன். எனினும், நான் எப்போதும் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்தே நடந்து கெண்டுள்ளேன். நாட்டின் ஜனாதிபதியாகவும், ஒரு குடிமகனாகவும் அரசியலமைப்பின் கடப்பாடுகளை நான் தொடர்ந்தும் மதித்து நடப்பேன்" என்றார். இருந்த போதிலும், தான் தேர்தலில் தோற்றது பற்றியோ, லூலா வென்றது பற்றியோ அவர் இறுதிவரை வாய் திறக்கவில்லை.

எனினும், அவரைத் தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர் சிரோ நொகுரா தேர்தலில் வெற்றி பெற்ற லூலாவிடம் ஆட்சியைக் கையளிப்பதற்கான பணிகளை ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தல் மிகவும் பரபரப்பான சூழலில் இடம்பெற்றிருந்தது. முதல் சுற்றில் இலகுவான வெற்றியைப் பெறுவார் எனக்கணிக்கப்பட்டிருந்த லூலா 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறத்தவறியிருந்தார். அது மாத்திரமன்றி, பொல்சனாரோ எதிர்பார்க்கப்பட்டதையும் விட அதிகமான வாக்குகளையும் பெற்றிருந்தார். 

இந்நிலையில், இரண்டாவது சுற்றில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் தீவிரமானதாகவும், வெற்றி தோல்வியை முன்கூட்டியே கணிக்க முடியாததாகவும் அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும் ஆரம்பத்தில் பொல்சனாரோவே முன்னிலை வகிக்கும் நிலை காணப்பட்டது. எனினும், பின்னர் தொடர்ந்துவந்த முடிவுகள் காரணமாக லூலா முன்னேறி வெற்றியைப் பெற்றுக் கொண்டார். 

முழுவதுமான தேர்தல் முடிவுகள் வெளியான போது லூலா 50.9சதவீத வாக்குகளையும் பொல்சனாரோ 49.1சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். 0.9சதவீத வாக்குகள் வித்தியாசத்திலான இந்த வெற்றி என்பது லூலா தரப்பினர் எதிர்பார்த்திராததொன்றாகும்.

2.1 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்துடனேயே இந்த வெற்றி சாத்தியமானது. 60.3மில்லியன் மக்கள் லூலாவுக்கு வாக்களித்திருந்தனர். 58.2மில்லியன் மக்கள் பொல்சனாரோவுக்கு வாக்களித்திருந்தனர். அதேநேரம், 20.57 சதவீத மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்திருந்தனர். 4.59சதவீத மக்கள் தங்கள் வாக்குகளை செல்லுபடி அற்றதாக்கி தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

பிரேசில் நாட்டுச் சமூகத்தில் நிலவும் வர்க்க அடிப்படையிலான பிளவை நன்கு புலப்படுத்துவதாகத் தேர்தல் முடிவுகள் உள்ளன. மறுபுறம், உலகளாவிய அடிப்படையில் ஏற்பட்டுவரும் வலதுசாரி எழுச்சியின் காட்டியாகவும் இந்தத் தேர்தல் முடிவுகள் உள்ளன.

இறுதியாக 2018இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு லூலாவுக்கு மறுக்கப்பட்டிருந்தது. போலியான ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லூலா, சிறையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட விரும்பியிருந்தார். 

எனினும், அவ்வாறு போட்டியிட நீதிமன்ற அனுமதி கிட்டாத நிலையிலேயே பொல்சனாரோவின் வெற்றி சாத்தியமானது. அன்றைய நிலையில் லூலாவின் வெற்றி வாய்ப்பு 80சதவீதமாக இருந்ததாக கருத்துக் கணிப்புகள் வெளிக்காட்டி இருந்தன. 4 ஆண்டுகளின் முன்னர் 80 சதவீதமான மக்கள் ஆதரவைக் கொண்டிருந்த ஒருவர் இத்தனை குறுகிய காலத்தில் அதனை இழந்தது எவ்வாறு என்பது ஆய்வுக்குரிய விடயம். 

அதேவேளை, ஆரம்பத்தில் வெகு குறைவான மக்கள் ஆதரவைக் கொண்டிருந்த பொல்சனாரோ, 4 ஆண்டுகளில் - அதுவும் கொரோனோ பெருந்தொற்றைக் கேவலமாகக் கையாண்டு பல இலட்சம் மக்களின் உயிரிழப்புக்குக் காரணம் ஆனவர் எனக்குற்றஞ் சாட்டப்பட்ட நிலையில், தனது அசட்டுப் பேச்சுக்களினால் உலகின் நகைப்புக்கு இடமாகிய நிலையில் - தனது செல்வாக்கை உள்நாட்டில் அதிகரித்துக் கொண்டது எவ்வாறு? 

கடவுள், குடும்பம், தாய்நாடு, சுதந்திரம் என்ற தொனிப்பொருளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய பொல்சனாரோ, 'லூலாவின் ஆட்சி உருவாகுமானால் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்துவிடும். அடுத்து வெனிசுவேலா போன்று அன்றாட பாவனைப் பொருட்களுக்குக் கூடத்தட்டுப்பாடு உருவாகி விடும்" என்ற பீதியைக் கிளப்பியே பெருமளவு மக்களைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டார். 

அது மட்டுமன்றி லூலாவின் ஆட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் பரப்புரை செய்திருந்தார்.

2003 முதல் 2010 வரை இரு தடவைகள் ஜனாதிபதிப் பதவி வகித்திருந்த லூலா, தனது முந்திய ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய வறுமை ஒழிப்புத் திட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப் போவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். அதேபோன்று பொல்சனாரோ ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள அமேசன் காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் வழங்கியிருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகியதும் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லூலா, 'தனது ஆட்சியானது ஒட்டுமொத்த பிரேசில் மக்களுக்குமானது. தனக்கு வாக்களித்த, வாக்களிக்கத் தவறிய அனைத்து மக்களுக்காமான ஆட்சியாக அது அமையும். இரண்டு பிரேசில் இங்கு இல்லை. இது ஒரே தேசம்." எனத் தெரிவித்திருந்தார்.

என்னதான் இருந்தாலும், 2023ஜனவரி முதலாம் திகதி தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ள லூலாவின் ஆட்சியானது அவரது முன்னையகால ஆட்சியைப் போன்று சுமுகமான ஆட்சியாக இருக்கப் போவதில்லை என்பது வெள்ளிடை மலை. 

பாராளுமன்றிலும், மேலவையிலும் பொல்சனாரோ தலைமையிலான வலதுசாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அது மாத்திரமன்றி, தற்போதைய அரச இயந்திரத்தில் - படைத் துறை, நீதித் துறை  உள்ளிட்ட பல துறைகளில் - பொல்சனாரோவின் ஆதரவாளர்களே நிறைந்திருக்கின்றார்கள். இவர்களைச் சமாளிக்க வேண்டிய பாரிய பொறுப்பு லூலாவுக்கு உண்டு. 

மேலும், இராணுவத்தின் தலையீட்டைக் கோரி நாளுக்கு நாள் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் பொல்சனாரோ ஆதரவாளர்களையும் அவர் கையாள வேண்டியுள்ளது. இதற்கிடையில், பதவியேற்புக்கு முன்னதாக உள்ள இரண்டு மாதங்களில் பிரேசிலில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே உள்ளது. இந்நிலையில் லூலா பெற்றது உண்மையான வெற்றிதானா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22