மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்துக்கு எதிராக கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதேவேளை எமது மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் நிவர்த்தி செய்யாவிட்டால் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவ ஓத்துழைப்பு இயக்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  நீர்கொழும்பு மாநகர  சபை மண்டபத்தில்   இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் அனைவரும் சுதந்திரமாக நடமாட கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. யார் வேண்டுமென்றாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.தற்போது தமிழர்கள் தொடர்பாக எடுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் நான் ஒரு பங்காளியாக இருக்கின்றேன். அரசுக்கு உள்ளேயும் பல பதவிகளில் இருக்கின்றேன். எம்மை யாராலும் ஏமாற்ற முடியாது .

மக்களுக்கு பிரச்சனைகள் உண்டு. அவற்றை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மஹிந்த காலத்தில் நாம் பட்ட துன்பங்களை மறந்து விடக்கூடாது. ஆகவே இந்த அரசின் மீது எனக்கு  நம்பிக்கை உண்டு.