கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை நான் வாசிப்பதில்லை - வயலின் இசைக்கலைஞர் ரோகிணிவதனி

Published By: Nanthini

05 Nov, 2022 | 07:51 PM
image

 (மா. உஷாநந்தினி)

"கர்நாடக சங்கீதத்தை பாரம்பரியமாக கற்று வந்ததால், பிற இசைப் பாடல்களை நான் வாசிப்பதில்லை.

எனது மாணவர்களையும் கர்நாடக இசை சார்ந்தவர்களாகவே வழிநடத்துகிறேன். அவர்களுக்கும் சினிமா பாடல்களில் ஈர்ப்புள்ளது. 

அவ்வாறு வேறு இசை வடிவங்களில் ஆர்வம் செலுத்த தொடங்கினால், கர்நாடக இசையையே மறந்துவிடுவார்கள். கீர்த்தனைகள், கிருதிகளை வாசிப்பதில் சகிப்புத்தன்மை காட்டுவார்கள். 

அதனாலேயே கச்சேரி மேடைகளில் கர்நாடக பாடல்கள் தவிர்ந்த வேறு பாடல்களை இசைக்க நான் விரும்புவதில்லை....." என கர்நாடக சங்கீதத்துக்கும் தனது வயலின் இசைக்கருவிக்குமான பிணைப்பை பற்றி விபரிக்கிறார், வயலின் இசைக்கலைஞர் திருமதி. ரோகிணிவதனி யசோதரன். 

கொழும்பு, வெள்ளவத்தையில் 'நாதத்வனி வயலின் கலாலயா' எனும் வயலின் இசைப்பயிற்சி வகுப்பினை நடத்திவரும் இவர், கிட்டத்தட்ட 60க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வயலின் இசைப்பயிற்சி அளித்து வருவதோடு, கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியையாக கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்.

இவரது தாளப் பின்னணியுடன் சேர்ந்த கலாலய மாணவர்களின் வயலினிசை கச்சேரிகளின் வரிசையில், சமீபத்தில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் 'வயலின் வாத்திய பிருந்தம்' இசை நிகழ்ச்சி நடந்தேறியது. 

அதனை தொடர்ந்து வீரகேசரி சங்கமம் பகுதிக்கு வயலின் கலைஞர் திருமதி. ரோகிணிவதனி யசோதரன் வழங்கிய செவ்வி இனி...

அறிமுகம்...

எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம். யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் வயலினை பிரதான பாடமாக கொண்டு நான்கு வருடங்கள் கற்று, முதலாம் தரத்தில் 'இசைக்கலைமணி' எனும் பட்டத்தை பெற்றுக்கொண்டேன். 

10 வயதில் சாந்தநாயகி சுப்பிரமணியம் ஆசிரியை அவர்களிடம் முறைப்படி வயலின் கற்றேன். 

வட இலங்கை சங்கீத சபை பரீட்சையில் தரம் 6இல் சித்தியடைந்து 'கலாவித்தகர்' பட்டத்தையும் பெற்றேன். அதன் பின்னரும் தொடர்ந்து ஆசிரியையிடம் வயலின் கற்றேன்.  அப்போது எனது குரு தனது மாணவர் ஒருவரை என்னிடம் அனுப்பி, வயலின் கற்பிக்குமாறு கூறினார். 

ஆசிரியையின் உந்துதலால், நானும் ஒரு வயலின் ஆசிரியையானேன். 

அவ்வாறே வயலின் கற்பிக்கும் பணியில் இறங்கினேன். படிப்படியாக மாணவர்களின் வருகை அதிகமானது.  

பின்னர் எனது பணி நிமித்தம் திருகோணமலைக்கு இடம்பெயர்ந்தேன்.   

2010ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து, இங்கும் வயலின் வகுப்பை நடத்த தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக வகுப்பு விரிவடைந்து, தற்போது எமது நாதத்வனி வயலின் கலாலயா வகுப்பில் 60க்கு மேற்பட்ட மாணவர்கள் வயலின் கற்கிறார்கள். 

உங்கள் குடும்பத்தில் இசைத்துறை சார்ந்து யாரெனும் இருக்கிறார்களா? 

எனது குடும்பத்தில் இசைத்துறை சார்ந்து யாரும் இல்லை. எனினும், நான் வாழ்ந்த சூழலில் இசையை உணர முடிந்தது. 

எனது தாத்தாவின் வீட்டுக்கு முன்னுள்ள மாடிவீட்டில் எம்.எஸ். பரந்தில்லைராஜா ஐயா வசித்தார். அவர் ஒரு சங்கீத வித்துவான் என்பது அந்த சிறு வயதில் எனக்கு தெரியாது. 

வீட்டில் அவர் தம்புரா, வீணை போன்ற இசைக்கருவிகளை மீட்டி, பாடுவதை பல முறை  கேட்டிருக்கிறேன். அப்படித்தான் எனக்குள்ளும் இசையார்வம் தோன்றியிருக்க வேண்டும்.  

பின்னர் இசை கற்கும்போது வயலின் ஆசிரியையின் வாசிப்பை பார்த்து பார்த்து, அதேபோல் நானும் வாசிக்க விரும்பினேன்.

நீங்கள் வாய்ப்பாட்டு கற்ற பின்னரா வயலின் பயின்றீர்கள்? 

வயலின் பயில தொடங்கியபோதே குருவிடம் வாய்ப்பாட்டையும் கற்றுக்கொண்டேன். எனினும், வாய்ப்பாட்டு தொடர்ந்து கற்பிக்கப்படாமல் வயலினையே பிரதானமாக பயிலவேண்டியிருந்தது. 

பல்கலைக்கழகத்தில் பிரதான பாடமாக வயலினையும், இணைப்பாடமாக வாய்ப்பாட்டையும் கற்றேன். தவிர, நானாக  வாய்ப்பாட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டதுமுண்டு. 

உங்களது குருவை பற்றி சில வார்த்தைகள்...

எனது குரு திருமதி. சாந்தநாயகம் சுப்பிரமணியம் அவர்கள் மிகவும் சாந்தமானவர். அன்பானவர். அதேவேளை கற்பித்தலில் கண்டிப்பானவர். மாணவர்களின் தரத்தை உணர்ந்து கற்பிப்பவர். 

வயலினில் வெறுமனே ஸ்வரங்கள் வாசிப்பதை விடுத்து, பாடல்களை பாடி, கமகங்களுக்கு தகுந்தாற்போல் வாசிக்கவும் தூண்டுபவர். 

அத்தோடு பல்கலைக்கழகத்தில் எனக்கு இசை கற்பித்த திருமதி. பாக்கியலக்ஷ்மி நடராஜா ஆசிரியை, இராதாகிருஷ்ணன் ஆசிரியரையும் இத்தருணத்தில் குறிப்பிட்டாக வேண்டும். 

நீங்கள் பங்குபற்றிய முதல் கச்சேரி? 

ஆரம்பத்தில் குழுவாக வாசித்திருக்கிறேன். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பிறகு எனது ஆசிரியரின் ஊக்கப்படுத்தலால் இளங்கலை மன்றத்தில் தனிக் கச்சேரியாக அரை மணிநேரம் வயலின் வாசித்திருக்கிறேன். 

பிடித்த ராகம்? அடிக்கடி சிந்தனையில் வந்துபோகும் கீர்த்தனை?

சுத்த தன்யாசி, மத்தியமாவதி, ஹரஹரப்ரியா, ராகங்கள் பிடிக்கும். தியாகராஜர் சுவாமிகளின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை அதிகமாக வாசிப்பது வழக்கம்.

கச்சேரிகளில் வயலினை பக்கவாத்தியமாக வாசிப்பதற்கும் தனிவாத்தியமாக வாசிப்பதற்கும் இடையில் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன? 

வாசிக்கப் போகும் கீர்த்தனையை முன்னதாக பயிற்சி எடுத்துக்கொண்டு, எமக்கே உரிய பாணியில் தனிவாத்திய கச்சேரிகளில் வாசிக்க முடியும். 

பக்கவாத்தியம் என்கையில், பாடுபவரை அனுசரித்து வாசிக்க வேண்டும். 

வாய்ப்பாட்டுக் கலைஞரின் பாணி, அவரது கமக அசைவுகளுக்கு ஏற்ப வயலின் இசைக்க வேண்டும். இதில் ஸ்வர ஞானம் என்பது மிக முக்கியம். 

பக்கவாத்தியம் இசைப்போர் நிறைய பாடல்களை கேட்டிருக்க வேண்டும். பாடுவதில் கையாளப்படும் நுட்பத்தை புரிந்துகொள்ளும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும். 

பொதுவாக என்னென்ன அளவு வயலின்கள் இசைக்கப்படுகின்றன? 

சிறிய அளவு (small size) வயலின் சிறுவர்களுக்கு உகுந்தது. அதை விட சற்றே பெரிதாக மீடியம் அளவு (medium size), முழு அளவு (full size) வயலின்கள் இருக்கின்றன. இவை வளர்ந்தவர்கள் வாசிப்பதற்கானவை. கச்சேரிகளிலும் முழு அளவு வயலின்கள் தான் வாசிக்கப்படுகின்றன.

வயலினை அமர்ந்து, நின்று என ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைகளில் வாசிக்கின்றனர்... வயலின் வாசிக்க சரியான நிலை என்ன? 

கர்நாடக சங்கீத முறையில் பழங்காலந்தொட்டு அமர்ந்த நிலையிலேயே வயலின் வாசிக்கப்படுகிறது. 

மேலைத்தேய வயலின்களை நின்ற நிலையில் வாசிப்பதை பார்க்கலாம். 

கர்நாடக கச்சேரிகளில் பக்கவாத்திய வயலின் கலைஞர்கள் குழுவினரோடு அமர்ந்தபடி நிகழ்ச்சியில் பங்குபற்றினாலும், தற்போது யூடியூப் வீடியோக்களில் கர்நாடக சங்கீதக் கலைஞர்களே சில தனிவாத்திய கச்சேரிகளில் நின்றவாறு வயலின் வாசிக்கிறார்கள். இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணமாகிறது. 

அத்துடன் மேலைத்தேய மற்றும் ஹிந்துஸ்தானி இசை என்றால் நின்றபடி இலகுவாக வாசிக்கலாம். கர்நாடக இசையில் நிறைய கமகங்கள் சேர்வதால், அவற்றை நின்றுகொண்டே வாசிப்பது கடினம். 

வயலின், வீணை இரண்டுமே நரம்பு வாத்தியங்கள்... இரண்டிலுமே தந்திகள் இருக்கின்றன... அவ்வாறிருக்க, வீணை போல விரல்களில் க்ளிப் அணிந்து ஏன் வயலின் வாசிக்கப்படுவதில்லை? 

வயலினுக்கு க்ளிப் தேவையில்லை. வயலினில் விரல்பலகைக்கும் தந்திக்கும் இடையிலான தூரம் அதிகமில்லை. அதனால் வாசிக்கும்போது பெரிதாக விரலில் உராய்வு ஏற்படாது. வீணையில் மெட்டுக்கள் இருப்பதால், அதன் மெல்லிய தந்திகளை அழுத்தி இழுத்து வாசிக்கும்போது, மெலிதான விரல்களில் காயங்கள், கீறல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.  

எவ்வளவு நேரம் வயலின் இசைக்க முடியும்?

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வயலின் வாசிக்கலாம். ஒவ்வொருவரின் உடல்வாகு, பயிற்சியை பொறுத்தே வாசிக்கின்ற நேரம் தீர்மானிக்கப்படுகிறது. 

மூச்சுவிடாமல் பாடுவது போல் 'மூச்சுவிடாமல்" வயலின் இசைப்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.... அது எப்படி?

வயலின் இசைக்கருவியை வாசிக்கும் முறையில் 'ஸ்வர போ" (Bow- வயலின் வாசிக்க பயன்படுத்தும் வில்), 'சாகித்திய போ" (Bow) என இரு வகைகள் உள்ளன. 

ஸ்வர போ என்பது வில்லை எடுத்தெடுத்து வாசிப்பது. சாகித்திய போ என்பது வில்லை எடுக்காமல் தொடர்ந்து கோர்வையாக வாசிப்பதாகும். இதைத்தான் மூச்சுவிடாமல் வாசிப்பதென நீங்கள் கூறினீர்கள். 

பாடுபவர் சங்கதி ஆகாரத்துக்குள் பாடுவது போல், வயலினிலும் ஒரே போவில் சங்கதியை, சாகித்தியத்தை வாசித்துவிடலாம்... இரண்டு, மூன்று ஸ்வரங்களை சேர்த்து கோர்வையாக  வாசிப்பதைப் போல...

ஒரே பாடலில் ஸ்வர போ, சாகித்திய போ இரண்டுமே கூட பிரயோகிக்கப்படும். எனினும், ஜதீஸ்வரம் போன்ற தனிஸ்வர பயிற்சிகளை ஸ்வர போ முறையில்தான் வாசிக்க வேண்டும்.  

தமிழிசை கச்சேரி மேடைகளில் வயலின் இசைக்கருவிக்கான வரவேற்பு எவ்வாறுள்ளது?

தமிழிசை என்பது பண்ணிசையை குறிப்பதாகும். தமிழிசையின் வருகைக்குப் பின்னரே கர்நாடக இசை பிறந்தது. பண்ணிசையில் அடங்கும் பண்களே மருவி ராகங்களாக கர்நாடக இசையில் பிரயோகிக்கப்பட்டன. எனினும், அடிப்படை பண்ணிசையே. 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்ஷிதரின் இளைய சகோதரர் பாலசுவாமி தீட்ஷிதர் தமிழிசைக்கு தனிவாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வயலினை அறிமுகப்படுத்தினார். 

இன்றைக்கு வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் வயலினே பிரதான பக்கவாத்தியமாகிறது.

அத்தோடு தமிழிசை மேடையோ அல்லது கர்நாடக இசை மேடையோ, எதிலும் பக்கவாத்தியங்களில் வயலினே முதலிடத்தை பெறுகிறது.  

'நாதத்வனி வயலின் கலாலயம்' பயிற்சி வகுப்பை பற்றி கூறுங்கள்...

2011ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து, இரண்டு மூன்று மாணவர்களோடு வயலின் பயிற்சி வகுப்பினை ஆரம்பித்தேன். பின்னர் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 

இவ்வருடம் கடந்த நவராத்திரி காலத்தில் வயலின் இசைவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது பெற்றோர்களின் உந்துதலால் எமது இசைவகுப்புக்கு 'நாதத்வனி வயலின் கலாலயா' என பெயரிட்டோம். 

2017இலிருந்து ஒவ்வொரு வருடமும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எமது மாணவர்களின் கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். 

கொவிட் 19 காரணமாக இரண்டு வருடங்கள் விழா தடைப்பட்டு, மீண்டும் இவ்வருடம் இராமகிருஷ்ண மிஷனில் எமது மாணவர்கள் பங்குபற்றிய 'வயலின் வாத்திய பிருந்தம்' கச்சேரி நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின. 

எமது பயிற்சி வகுப்பில் மாணவர்களின் கற்கும் திறன், உள்வாங்கும் தன்மையை பொறுத்து, அவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படுவார்கள். 

அடிப்படையில் ஸ்வரஸ்தான, தாள சுத்தத்துக்காக மனனம் செய்வதன் மூலம் ஆரம்ப பயிற்சிகளான ஸ்வர வரிசைகள், மேல்ஸ்தாய் வரிகள், ஜண்டை வரிசைகள், ஜதீஸ்வரம், அலங்காரம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் பின்னரே கீர்த்தனைகளும் பாடல்களும் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

தற்போது கொவிட் 19 காலத்தில் இணையவழியில் பயிற்சியளித்து வருகிறேன். எமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட நிலையிலும், அங்கிருந்தபடியே இணையத்தின் வாயிலாக என்னிடம் வயலின் கற்று வருகின்றனர். 

இணையவழியில் வயலின் கற்பிப்பதில் நிறைய சிரமங்கள் இருக்குமே...!

ஸ்வரஸ்தான சுத்தம், சுருதி சுத்தம், தாள சுத்தமின்றி பயிற்சிகளை தொடர்வது கடினமான விடயம். இதற்கு தொழில்நுட்ப மற்றும் மின்சார இடையூறுகளும் காரணமாகலாம். எவ்வாறாயினும், குருவுடன் சேர்ந்திருந்து, பயபக்தியோடு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை இணையவழிப் பயிற்சி தராது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right