சைவ மங்கையர் வித்தியாலயத்தின் 90ஆம் ஆண்டு நிறைவும் கலைவிழாவும்

05 Nov, 2022 | 03:42 PM
image

(பொன்மலர் சுமன்)

கொழும்பு - 06, சைவ மங்கையர் வித்தியாலயத்தின் 90ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு இந்து மன்றம், தமிழ் இலக்கிய மன்றம், நுண்கலை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘அவினம்-2022’ ஆண்டு கலைவிழா கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக சைவ மங்கையர் வித்தியாலயத்தின் முன்னால் முகாமையாளர் திருமதி. சிவானந்தினி துரைசுவாமியும் சிறப்பு விருந்தினராக பிரதி  மாகாண கல்விப் பணிப்பாளர் (மேல் மாகாணம்) இ. உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தாமரை மொட்டுக்கள் வளைந்து நிற்பது போன்ற மேடை அமைப்புடன் அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்திலேயே கலைவிழா 2022 ஆரம்பமானது.

விழாவின் முதல் நிகழ்வாக பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளை மாணவியர் வாத்தியங்கள் இசைக்க, மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து வந்து ஆரத்தி எடுத்து அமரச் செய்தனர்.

பாரம்பரியம் வலுவாத நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மங்கல விளக்கேற்றலின் பின்னர் மாணவிகளால் கடவுள் வாழ்த்து, பாடசாலை கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

வரவேற்புரையினை தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து கணேஷ குஹ வந்தனம் நடனம் மேடையேற்றப்பட்டது.

அடுத்ததாக நிகழ்வில் சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி ராஜவிஜயன் உரை இடம்பெற்றது.

அதிபரின் உரையில்…

எமது பாடசாலை மாணவர்கள் புலமைப் பரீசில் பரீட்சை, கல்விப் பொது தராதர சாதாரண தரம், உயர்தரம் என கல்வியில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

ஆயினும், மாணவர்களுக்கு புத்தக படிப்பு மட்டுமே போதாது. அவர்களுக்கு கலை ஆர்வத்தினையும் ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர், பிள்ளைகளை படி படி என கல்வி மட்டுமே நோக்கம் என்றிராது இதுபோன்ற கலை சார்ந்த துறைகளிலும்; முன்னேறி வர ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இன்றைய இவ்விழாவில் 750 மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர். ஒரு மாணவர் ஓர் நிகழ்ச்சியிலேனும் பங்குபெற வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

மாணவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள காட்டிய ஆர்வமும் மாணவர்களின் ஆர்வமும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் முயற்சியையும் அடுத்தடுத்து வந்த நிகழ்வுகளின் மூலம் உணர முடிந்தது.

நிகழ்வின் அடுத்தபடியாக மாணவிகளின் புஷ்பாஞ்சலி நடனம் மேடையேறியது.

ஒவ்வொரு நிகழ்வும் மேடையேறும்போதும் மேடையின் பின்னனியில் அலங்கரித்த வெளிச்சத்திரை அதற்கு விளக்கமாக அமைந்தமை சிறப்பம்சமாகும்.

பாடல்களின் வரிகள், காட்சிகள் என தொலைவிலிருந்து பார்ப்போருக்கு ஒரு தெளிவினை பெற்றுத்தருவதாக அமைந்தது.

விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியும் ஒரு அலங்காரமாய் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

வில்லுப்பாட்டு – பாடசாலையின் வரலாற்றினை கதையாகவும் இராகத்தோடும் சொல்லிச் சென்றமை எல்லோரையும் ரசிக்கச் செய்தது.

பாடசாலையின் ஆரம்ப வரலாறு…

சைவ மங்கையர் வித்தியாலயம் 1932ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் விஜயதசமி நாளன்று ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலையினை நிறுவ காரணகர்த்தாக்களாக மாண்புமிகு பெண்மணிகள் மூவரான காலஞ்சென்ற திருமதி. சதாசிவம், திருமதி. நல்லைநாதன், திருமதி. பா. நமசிவாயம் ஆகியோர் ஆவர்.

இவர்கள் இந்து மதம், தமிழ் மொழி, தமிழ் பண்பாடு ஆகிய மூன்று பிரதான நோக்கங்களைக் கொண்டே இப்பாடசாலையை நிறுவினர்.

நிகழ்வுகளுக்கிடையே மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு மூன்று பகுதிகளாக இடம்பெற்றன.

பிரதம விருந்தினரின் உரையைத் தொடர்ந்து, மீனவர்களின் வாழ்வியலையும் அவர்கள் அந்தத் தொழிலில் படும்பாடுகள் குறித்து விளக்கும் முகமாக நாட்டார் பாடல் இடம்பெற்றது.

மீனவர்கள் படகில் மீன் பிடிக்கப் போவது போன்ற மேடையமைப்பும் வெளிச்சத் திரையில் நகர்ந்த காட்சிகளும் அந்த நிகழ்வுக்கு உயிரூட்டின.

அடுத்து மாணவிகளின் நித்தியார்ப்பணம், முருகப் பெருமானின் புகழ் கூறும் புராணக் கதைகள், கவிதை வரிகளுக்கிடையே பாடலும் என மாறி மாறி இடம்பெற்றன.

தொடர்ந்து பாடசாலையின் முகாமையாளர் செல்வி மாலா சபாரத்தினம் உரை நிகழ்த்தினார்.

முகாமையாளரின் உரையில்…

அரசின் தலையீடின்றி இயங்கும் ஒரேயொரு சைவ பாடசாலை இதுவே என்பதில் பெருமையடைகின்றேன்.

பெண்களால் பெண்களுக்கு என இயங்கும் கழகம் இது என்ற முகாமையாளரின் வார்த்தைகளின் உண்மையை பலர் உணர்ந்து கொண்டுள்ளனர். உணராதோர் அன்றைய விழாவின் பின்னர் உணர்ந்திருப்பர்.

அடுத்து மாணவிகளின் இன்னிசை செவிக்கு இனிமை சேர்த்தது.

 ‘ராணி மங்கம்மா’ நாடகம் பெண்களின் வீரத்தினை வெளிப்படுத்தியதுடன் நாடகத்தின் இறுதியில் இனங்களுக்கிடையேயான ஒற்றுமை பற்றிய செய்தியையும் வெளிப்படுத்தியது.

இதில் பௌத்த மதம் உள்ளடக்கப்படாது இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மூன்று மதங்கள் மட்டுமே காட்டப்பட்டமை சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இன ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டிருக்கும் நிலையில் பௌத்த மதத்தையும் காட்சிப்படுத்தியிருக்கலாம்.

அடுத்ததாக குறத்தி நடனம், கவிதா நிகழ்வு, அமிர்தகானம் என்பன விழாவுக்கு சிறப்பு சேர்த்தன.

இதன் தொடர்ச்சியாக சிறப்பு விருந்தினர், பிரதி மாகாண கல்விப் பணிப்பாளர் இ. உதயகுமார் தனது உரையில்…

யுனெஸ்கோ அமைப்பு ஒரு சமூகம், தனது கலாசாரத்தை முறையாக தனது அடுத்த சந்ததியிடம் கையளிக்க வேண்டும் என கூறுகின்றது. அதனை சைவ மங்கையர் வித்தியாலயம் திறம்படச் செய்துள்ளது என தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தாளலயம் நடனத்தில் தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை மிகத் தெளிவாக வெளிகாட்டியிருந்தனர்.

 ‘நம்ம நாடு நல்ல நாடு இப்ப ரொம்ப கெட்டு போச்சு’

‘அவுஸ்ரேலியாவுக்கு கப்பல்ல போனால் கம்பிதான் எண்ண வேண்டும்’ போன்ற வரிகள் அரங்கு நிறைந்த கரகோஷங்களை பெற்றதோடு பல செய்திகளையும் சொல்லிச் சென்றன. 

மேற்கத்தேய இசையுடன் இணைந்த தில்லானா நடனம் சிறப்பு. இதற்கு அடுத்ததாக மேடையேறிய தரம் 12 மாணவியரின் நடனம் கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பம் என பாரம்பரிய கலைகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

இடைவிடாத அரங்கு நிறைந்த கரகோசத்துடன் இடம்பெற்ற இக்கலைவிழா நன்றியுரையினை அடுத்து தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

வெண்புறாக்களைப் போன்ற மாணவர் கூட்டம் ஒரு நந்தவனம் போன்று அன்றைய விழாவில் தமிழ் பாரம்பரியம் தவறாது மிக நேர்த்தியாக தங்கள் பணியைச் செய்திருந்ததை காண முடிந்தது.

புதிதாக கலைவிழாவைக் காண வந்த என்னைப் போன்றோருக்கு யார் மாணவி, யார் ஆசிரியர், யார் பெற்றோர் என இனங்காண முடியாத திண்டாட்டம்.

விழா மேடையிலும் சரி, மண்டபத்துக்கு வெளியேயும் சரி மாணவியர் ஒழுக்க விதிகளை கடைப்பிடித்ததோடு தமது பணிகளை தடுமாற்றமின்றி நேர்த்தியாக செய்திருந்ததை காண முடிந்தது.

அரங்கம் நிரம்பிய சபையோர்களுக்கு மேலும் கதிரைகளை ஒழுங்கு செய்து அமரச் செய்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

நிகழ்வுகளின்போது எவரும் எழுந்து செல்லாத வண்ணம் நிகழ்ச்சிகள் சுவாரஸ்யம் குறையாதிருந்தமை சிறப்பு.

சில பெற்றோரை தவிர, ஏனையவர்கள் கலாசார ஆடையில் வந்திருந்தமை பாடசாலை விதிகளுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பை வெளிப்படுத்தியது.

ஒரு சிலர் தனது பிள்ளையின் நிகழ்வு முடிந்ததும் கிளம்பிவிடலாம் என முயன்றாலும் நிர்வாகம் அதற்கு இடமளிக்கவில்லை.

சிலர் எழுந்து சென்றபோதும் இறுதி நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் காட்டிய ஆர்வம் மீண்டும் அரங்கத்தை முழு நிறைவடையச் செய்தது.

நிகழ்வுகளுக்கிடையே மேடையில் ஒலித்த குரல்களின் தெளிவற்ற நிலை சுவாரஸ்யத்தை குறைத்தது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நாம் பொது இடங்களிலும் பலர் கூடும் சபைகளிலும் முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொண்டிருப்பினும் கூட விழாவில் சிலர் மட்டுமே முகக் கவசத்தோடு காட்சி தந்தனர். இது குறித்து கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்; ஆகியோரின் ஒருமித்த முயற்சியால் மேடையேறிய கலைவிழா 2022 பிரமாண்டம்.

இது பெண்களின் படைப்பு! பெண் சமூகத்துக்கான படைப்பு!!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35