வெற்றியுடன் நிறைவு செய்யும் நம்பிக்கையில் இலங்கை : அவுஸ்திரேலியா, இங்கிலாந்தின் தலைவிதி இலங்கையின் கைகளில்

Published By: Digital Desk 5

05 Nov, 2022 | 10:46 AM
image

(நெவில் அன்தனி)

சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இலங்கையும் இங்கிலாந்தும் மோதவுள்ளன.

இப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இலங்கை வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபுறத்தில் அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இங்கிலாந்து இப் போட்டியை எதிர்கொள்கிறது.

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவா, முன்னாள் சம்பியன் இங்கிலாந்தா குழு 1இலிருந்து அரை இறுதிக்கு செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமைவதால் அந்த இரண்டு அணிகளினதும் தலைவிதி இலங்கையின் கைகளில் தங்கியுள்ளது.

நியூஸிலாந்து ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுவிட்ட நிலையில் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா அரை இறுதியில் நுழைந்துவிடும். இங்கிலாந்து வெற்றிபெற்றால் 7 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறும்.

எனவே இன்றைய போட்டி இங்கிலாந்துக்கு செய் அல்லது செத்துமடி என்ற ஓர் இக்கட்டான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

ஒருவேளை, இப் போட்டி சீரற்ற காலநிலையால் தடைப்பட்டால் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாகிவிடும்.

இதேவேளை, முன்னாள் சம்பியன் இலங்கைக்கு இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சிறப்பாக அமைந்தது என்று கூறமுடியாது.

முதல் சற்றில் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முற்றிலும் எதிர்பாராதவிதமாக நமிபியாவிடம் ஆரம்பப் போட்டியில்  55 ஓட்டங்களால்  தோல்வி அடைந்த இலங்கை அதன் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றில் நுழைந்தது.

சுப்பர் 12 சுற்றில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை 9 விக்கெட்களால் வெற்றிகொண்ட போதிலும் 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. 3ஆவது போட்டியில் நியூஸிலாந்திடம் 65 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்த இலங்கை, அதன் கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்களால் வீழ்த்தியது.

ஒட்டுமொத்தத்தில் பிரபல்யம் குன்றிய அணிகளை வெற்றிகொண்ட இலங்கை, பெயர்பெற்ற அணிகளிடம் தோல்விகளையே தழுவியது.

இந்நிலையில் இன்றைய கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டால் இலங்கைக்கு கௌரவத்துடன் நாடு திரும்பக்கூடியதாக இருக்கும்.

இங்கிலாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டது. ஆனால், அடுத்த போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 5 ஓட்டங்களால் அயர்லாந்திடம் தோல்வி கண்டது. அவுஸ்திரேலியாவுடனான போட்டி மழையினால் கழுவப்பட 4ஆவது போட்டியில் நியூஸிலாந்தை 20 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் தமது கடைசி சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ளன. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் அணிகள் நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்று அந்த திருப்தியுடன் நாடு திரும்பும்.

அதேவேளை இங்கிலாந்து வெற்றிபெற்றால் நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான அவுஸ்திரேலியா அரை இறுதிகளை வெறும் பார்வையாளராக இருந்துகொண்டு காணவேண்டிவரும். எனவே இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே தங்களுக்கு அரை இறுதியில் விளையாட முடியும் என்பதை அவுஸ்திரேலியா அறிந்துள்ளதால் இலங்கைமீது நம்பிக்கை வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதாக இருந்தால் சகலதுறைகளிலும் பிரகாசிக்க வேண்டும்.

நடப்பு உலகக் கிண்ணத்தில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளவர்களில் 3ஆம் இடத்தில் இருக்கும் குசல் மெண்டிஸ் (205), 8ஆம் இடத்தில் இருக்கும் தனஞ்சய டி சில்வா (168), 11ஆம் இடத்தில் இருக்கும் பெத்தும் நிஸ்ஸன்க (147) ஆகிய மூவரும் இன்றைய போட்டியில் மிகத் திறமையாகவும் புத்திசாதுரியமாகவும் துடுப்பெடுத்தாட வேண்டிவரும்.

துரதிர்ஷ்டவசமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவந்துள்ள சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க ஆகியோர் இன்று தமது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க 52 ஓட்டங்களைப் பெற்றால் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர் என்ற பெருமையைப் பெறுவார்.

பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் சுழல்பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்கவும் மஹீஷ் தீக்ஷனவும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 16 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் முதலிடத்தை வகித்த வனிந்து ஹசரங்க  இவ் வருடமும் 13 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இன்றைய போட்டியிலும் சில விக்கெட்களைக் கைப்பற்றி முதலிடத்தை தக்கவைப்பார் என நம்பப்படுகிறது.

அவரை விட மஹீஷ் தீக்ஷன 9 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இது இவ்வாறிருக்க,   ஓர் உயரிய நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணியை வெற்றிகொள்ள முடிந்தால் அது ஆசிய சம்பியன்களின் திறமைக்கு சான்று பகர்வதாக அமையும் என பானுக்க ராஜபக்ஷ  நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

'வெள்ளிக்கிழமை முடிவுகள் எப்படி இருந்தன என்பது முக்கியமல்ல. அவுஸ்திரேலியாவில் திறமையாக விளையாடுவதே அவசியம். நாங்கள் திறமைமிக்க அணி என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிரூபித்துவிட்டோம். மேலும் எமது அணி பலம்வாய்ந்தது.

'எம்மிடம் பொதுவான ஒரு தந்திரோபாயம் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியான வியூகங்களைப் பிரயோகிப்போம். நாங்கள் நிறைய தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவதால், எல்லா வீரர்கள் பற்றியும் நன்கு அறிந்துள்ளோம். இங்கிலாந்து அணியை  எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கிறிஸ் (பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட்) எம்முடன் நிறைய கலந்துரையாடியுள்ளார். எனவே, நாளைய (இன்றைய) போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்' என பானுக்க ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, சாமிக்க கருணாரட்ன அல்லது ப்ரமோத் மதுஷான், லஹிரு குமார, கசுன் ராஜித்த.

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், ஹெரி ப்றூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித், மார்க் வூட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35