கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சியாக்கியவர்கள் பிரதேச மக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில், மாட்டு எச்சங்கள் கிடப்பது தொடர்பில் அவதானித்த பிரதேச மக்கள், இது தொடர்பில் பொலிஸாரிடமும், கரைச்சி பிரதேச செயலாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும், கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வீட்டு உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் நீண்ட காலமாக பசுக்கள் உட்பட பல மாடுகள் காணாமல் போனவை தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அவை இறைச்சிகளாக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் மாடுகளை இறைச்சியாக்கி, எச்சங்களை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். வீட்டை சுற்றி தோண்டிய போது மாடுகளின் தலைகள் உள்ளிட்ட பல எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை மேலும் ஒரு பசு மற்றும் மற்றுமொரு கன்று ஒன்றும் இறைச்சிக்காக கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.