இயற்கை அன்னையின் தயவால் இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றி

Published By: Vishnu

02 Nov, 2022 | 09:41 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (02) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் (DLS) இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றபோதிலும் ஸிம்பாப்வே, நெதர்லார்ந்து தவிர்ந்த மற்றைய 4 அணிகள் சம்பந்தப்பட்ட குழு 2 போட்டிகளின் முடிவுகளின் பின்னரே இந்தியா அரை இறுதிக்கு செல்லுமா இல்லையா என்பது தெரியவரும்.

இன்றைய போட்டியில் இந்தியா சார்பாக கே. எல். ராகுல், விராத் கோஹ்லி ஆகியோர் குவித்த  அரைச்   சதங்கள், லிட்டன் தாஸ் குவித்த அதிரடி அரைச் சதத்தால் மழுங்கடிக்கப்பட்டுவிடுமோ என கருதப்பட்டது. ஆனால், மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டதால் எல்லாம் மாறிப்போனது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 185 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 66 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டம் தடைப்பட்டபோது டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி 17 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருந்தது.

7 ஓவர்களில் 49 ஓட்டங்களே பங்களாதேஷுக்கு தேவைப்பட்டிருந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 29 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 59 ஓட்டங்களுடன் ஆட்ட்மிழக்காதிருந்தார். மற்றைய ஆரம்ப வீரர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார்.

ஆனால், ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 16 ஓவர்களில் 151 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

ஆட்டம் தொடர்ந்த சொற்ப நேரத்தில் அதிரடி ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் மேலதிகமாக ஒரு ஓட்டத்தைப் பெற்று 60 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். (67 - 1 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு 84 ஓட்டங்களாக இருந்தபோது நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அதன் பின்னர் பங்களாதேஷின் ஓட்ட வேகம் குறையத் தொடங்கியதுடன் விக்கெட்களும் வீழந்தன.

ஒரு கட்டத்தில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ்,  9 ஒட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்து நெருக்கடியை எதிர்கொண்டது.

கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்று பங்களாதேஷ் தோல்வி அடைந்தது.

நூருள் ஹசன் 25 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைக் குவித்தது.

கே. எல. ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களின் பலனாகவே இந்தியா 180 ஓட்டங்களைக் கடந்தது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதிலும் கே. எல். ராகுல், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் 3 போட்டிகளில் 22 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ராகுல், மிகப் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி சரியாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விராத் கோஹ்லியும் சூரியகுமார் யாதவ்வும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 38 ஓட்டங்களில் யாதவ் 30 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

சூரியகுமார் ஆட்டமிந்த பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.

எனினும் விராத் கோஹ்லி நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35