அரசியலமைப்பு திருத்தத்தின் பயன் யாருக்கு ?

Published By: Nanthini

31 Oct, 2022 | 02:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர ஏனைய சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்திய அரசியலமைப்பின் இரண்டாம் குடியரசு யாப்பு 45 வயதை அண்மித்துள்ள நிலையில், இதுவரை 21 தடவைகள் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பை திருத்தம் செய்கின்றமை 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை காண முடிகிறது.

பொருளாதார ரீதியில் ஸ்தீரமடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அரசியலமைப்பை உருவாக்கியுள்ளதால், அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளன.

1978 முதல் 2022 வரை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் சமூக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்துள்ளன.

ஆனால், அரசியலமைப்பு திருத்தம் சமூக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது காலம் காலமாக வெறும் பேசுபொருளாக மாத்திரம் காணப்படுகிறது.

ஆட்சியாளர்கள் தமது நிகழ்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொண்டு எதிர்கால அரசியல் இருப்புக்கு வித்திடும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது.

நாட்டு மக்கள் விரும்பும் வரை ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை உருவாக்கினார்.

2010ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அரசியலமைப்பு நான்கு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரசியல்வாதிகள் 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்தபோது, 18ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களித்துள்ளார்கள்.

பின்னர் 19ஆவது திருத்தத்தை நீக்க 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

தற்போது 20ஆவது திருத்தத்தை நீக்க, 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

சரியோ தவறோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் அவரது தனிப்பட்ட கொள்கையிலாவது உறுதியாக உள்ளதை பாராட்ட வேண்டும்.

19ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து, 20ஆவது திருத்தத்தை கொண்டுவர ஆதரவாக வாக்களித்த அவர், 20ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

22ஆவது திருத்தத்துக்கு அவர் மாத்திரம் எதிராக வாக்களித்தமை கவனிக்கத்தக்கது.

காலத்துக்கு காலம் தமது கொள்கையை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து நாட்டு மக்கள் இனிவரும் காலங்களிலாவது தெளிவுடன் செயல்பட வேண்டும்.

2010 செப்டெம்பர் 09 அன்று அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

18ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் மக்கள் விரும்பும் வரை எத்தனை தடவைகளும் போட்டியிடலாம் என குறிப்பிடப்பட்டது. அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வசமாக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றன.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதற்கான 18ஆவது திருத்தம் ஒரு காரணியாக அமைந்தது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய 2015ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து, நல்லாட்சி என்ற நாமத்துடன் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றின.

ஜனநாயகத்தின் இலச்சினையாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டமை 19ஆவது திருத்தத்தின் பிரதான அம்சமாக கருதப்படுகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் ஆணைக்குழுவின் வசமாக்கப்பட்டதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இலங்கையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்றது. 19ஆவது திருத்தத்தை உலக நாடுகள் அங்கீகரித்தன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தியது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற போட்டி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டது. 

ஜனநாயகத்தின் இலட்சினம் 19ஆவது திருத்தம் என 19ஆவது திருத்தத்தை புகழ் பாடிய நல்லாட்சியின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் '19ஆவது திருத்தம் நாட்டின் சாபக்கேடு' என கடுமையாக விமர்சித்தார்.

ஆட்சியாளர்களின் பலவீனத்தின் பலி அரசியலமைப்பு திருத்தம் மீது சுமத்தப்பட்டது.  அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் செய்தது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், 20ஆவது திருத்தம் உருவாக்கம், பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் கால வாக்குறுதியாக காணப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதும், 19ஆவது திருத்தம் இருக்கும் வரை தன்னால் அரச நிர்வாகத்தை சரிவர செய்ய முடியாது. ஆகவே 19ஆவது திருத்தத்தை இரத்து செய்து, தான் நிர்வாகம் செய்யும் வகையில் 20ஆவது திருத்தத்தை உருவாக்க பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் கோரினார். 

அதற்கமைய நாட்டு மக்களும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அரசாங்கத்தை அமைத்தது. 

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தத்தை உருவாக்கியது.

ஒன்றரை மாத காலத்துக்குள் நாட்டின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டமை வியப்புக்குரியது. ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இரண்டு வருடங்கள் மாத்திரமே செல்லுபடியானது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இரட்டை குடியுரிமையாளருக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கியது. தேசிய பட்டியல் ஊடாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று, நிதி அமைச்சராகவும் பதவியேற்றார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை 20ஆவது திருத்தம் பலப்படுத்தியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, அது அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்தது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து, 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதனை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புறக்கணித்தார்.

மே 09 நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. மக்கள் போராட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக தெரிவுசெய்தார்.

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார். 

பின்னர் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாறான பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்த அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து அரசாங்கம் மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல தயாராகவில்லை.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை நாட்டு மக்கள் போராட்டத்தினூடாக அழுத்தமாக வலியுறுத்தினார்கள்.

அதற்கமைய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நீக்கப்பட்டு, 22ஆவது திருத்தம் கடந்த வாரம் 179 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

22ஆவது திருத்தம் 19ஆவது திருத்தத்தின் அம்சங்களை உள்ளடக்கவில்லை. இருப்பினும், 20ஆவது திருத்தத்தை காட்டிலும் சிறந்தது என்பதால் ஆதரவு வழங்குகிறோம் என்று குறிப்பிட்டுக்கொண்டு அரசியல்வாதிகள் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய 156 பேரில் பெரும்பாலானோர் அதனை இரத்து செய்யவும் ஆதரவு வழங்கினார்கள். மஹிந்த ராஜபக்ஷ உட்பட 44 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் திருத்தமானது நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு வழங்கியுள்ளதா என்பது கேள்விக்குரியதாக காணப்படுகிறது.

காலத்துக்கேற்ப கொள்கையை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமது தேவைக்காக அரசியலமைப்பை திருத்தம் செய்துகொள்கிறார்களே தவிர நாட்டு மக்களின் நலன் குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்களா என்பதே நாம் கவனிக்க வேண்டிய விடயமாகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என குறிப்பிடப்படுகிறது. ஆனால், சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியலமைப்பை உருவாக்குவது காலம் காலமாக கானல் நீர் போல் காட்சியளிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14