‘சட்டம் ஒழுங்கு’ அரசியலை கையிலெடுக்கும் பா.ஜ.க.?

Published By: Digital Desk 5

30 Oct, 2022 | 04:06 PM
image

குடந்தையான்

தமிழக அரசியலில் ஏதேனும் ஒரு வகையினதான அரசியலை கையில் எடுத்து, தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தங்களுக்கான பிரத்யேக வாக்கு வங்கியை உருவாக்குவதற்காகவும் பா.ஜ.க., பின் விளைவுகளைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், கடுமையான சட்ட ஒழுங்கு அரசியலில் ஈடுபட்டு வருகிறது. 

ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அவை பாரியத் தாக்கத்தை ஏற்படுத்தாமல், தொடக்க நிலையிலேயே புஸ்வானமாகி விடுகிறது.  உதாரணமாக அண்மையில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம், ‘தீவிரவாத தற்கொலை தாக்குதல்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டுமென பா.ஜ.க. வற்புறுத்துகிறது. 

ஆனால் தமிழக அரசு, கோவையில் நடைபெற்றது எரிவாயு உருளை வெடிப்பு விபத்து என்றே விவரிக்கிறது. மேலும் இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதன் காரணமாக பா.ஜ.க. திட்டமிட்டிருந்த சட்ட ஒழுங்கு அரசியல், திசைமாறி அவர்களையே தாக்கத்தொடங்கி இருக்கிறது. ஏனெனில் பயங்கரவாத தாக்குதல் என்பது தேசிய பிரச்சினையாகும். 

தமிழக ஆளுநரான ஆர்.என் ரவி, அவர் பங்குபற்றும் ஒவ்வொரு அரசு நிகழ்விலும் தனியார் நிகழ்விலும், தமிழக அரசுக்கு எதிரான ஏதேனும் ஒரு கருத்தை பேசி வருகிறார். மற்றொருபுறம் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக வருகை தந்து, மத்திய அரசு மூலமாக பயன் பெற்ற நலத்திட்ட பயனாளிகளை நேரில் சந்தித்து, அவர்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து, பா.ஜ.க. ஆதரவு அரசியலை நடத்தி வருகிறார்கள். 

மறுபுறம் பா.ஜ.க.வின் தலைவர்கள், தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை தங்களுடைய முதன்மையான பிரசார உத்தியாக மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் வலிமையாக இருக்கும் சிறுபான்மையின மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தி, அவர்களை அரசுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை சம்பவத்திற்கும் பிறகு தமிழக பா.ஜ.க., மத துவேஷ அரசியலை பின்பற்றுவதுடன், சட்ட ஒழுங்கு அரசியலையும் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவதில் மும்முரமாக செயல்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக தமிழக அரசு கடைபிடிக்கும் நிதானப்போக்கு மற்றும் விவேகமான அணுகுமுறை சரியானதாக இருப்பதால், அரசுக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி எழவில்லை. 

மேலும் இவ்விடயத்தில் தமிழக முதல்வர் கருத்து தெரிவிக்க வேண்டும் அல்லது விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழக பா.ஜ.க. இயல்பான அளவை விட கூடுதலாக அழுத்தம் அளித்து வருகிறது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த வேறு அரசியல் கட்சிகள், தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருந்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழக பா.ஜ.க.வினருக்கு பதிலடி அளித்து வருகிறார்கள்.

அதேநேரம்,பா.ஜ.க. மற்றும் ஆர். எஸ்.எஸ். சம்பந்தப்பட்டவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தாலும்,  அவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை  ஆதாரத்துடன் குறிப்பிட முடியும். 

உதாரணத்திற்கு பத்ம சேஷாத்திரி எனும் தனியார் பாடசாலையில் பயின்ற மாணவியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை தண்டிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பிறகும் தஞ்சையில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலங்களை மீட்கவில்லை.   இணையதளம் மூலமாக ஆலய நிர்மாணத்திற்காக வசூல் செய்த கார்த்திக் கோபிநாத், கள்ளக்குறிச்சி தனியார் பாடசாலை மாணவியின் மரணத்திற்கு உரிய நீதியை வழங்க முடியவில்லை. இப்படி பல விடயங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.  இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் திட்டமிட்டு சட்ட ஒழுங்கு அரசியலிலும், வெறுப்பு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை அப்பட்டமாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இவ்வாறிருக்கையில், அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களின் காவல்துறை ஆணையர்களுக்கு, வெறுப்பு அரசியல் மற்றும் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. 

கோவை சம்பவத்தை பொறுத்தவரை, அதனை எவரும் விரும்பவில்லை. ஏனெனில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம்  திகதி கோவையில் 11 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 58அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் அதுதான். 

இந்நிலையில் ஜனநாயக அரசியலை விரும்பும் அரசியல் நோக்கர்கள், “பயங்கரவாதத்திற்கு ஜாதி மதம் கிடையாது. பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களின் நல்லவர் கெட்டவர் கிடையாது. கோவையில் நடைபெற்ற சம்பவம் பயங்கரவாத தாக்குதலின் நவீன வடிவமாக இருந்தால், அதனை தமிழக முதல்வர் பரிந்துரைத்திருக்கும் தேசிய புலனாய்வு முகமை தீர விசாரித்து அதற்குரிய தண்டனையை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றார்கள்.

அதேதருணத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேர்மையாக விசாரணை நடத்தி, அன்றைய முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் குற்றவாளிகளென நீதியரசர் அருணா ஜெகதீசன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதியரசர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படியும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை இதுவரை நடைபெறவில்லை. இவர்கள் அனைவரும் மறைமுகமாக பா.ஜ.க.வின் ஆதரவுடன் தமிழக அரசியலில் இருப்பவர்கள். இதனால் தமிழக அரசு, பா.ஜ.க. மீது தொடர்ந்து மென்மையான அணுகுமுறையே பின்பற்றி வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

இவ்விடயத்தில் வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய அ.தி.மு.க., உட்கட்சி பூசலால் நான்காக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசலுக்கு பா.ஜ.க. தான் மூலகாரணம் என்றாலும், அக்கட்சியின் தலைவர்கள் யாரும் பா.ஜ.க.வை தீரமாக எதிர்த்து அரசியல் செய்வதில்லை, இதுதான் புரியாத புதிராக நீடிக்கிறது. இந்த புதிர்புரியாமல் தான் தி.மு.க.வும், எம்மாதிரியான எதிர்வினையை ஆற்றுவது என தெரியாமல் தவிக்கின்றது.

மக்கள் தொகை பெருக்கத்தால் மக்கள் பொது இடங்களில் கூடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கைச் சீராக பாதுகாத்து பேணுவது என்பது சவாலான விடயமாக மாறிவிட்டது. அதிலும் பா.ஜ.க. போன்ற அரசியல் கட்சிகள், தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது.

 எனவே தமிழக அரசு இது தொடர்பாக விரிவான ஆலோசனையை நடத்துவதுடன், உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் ‘திராவிட முறைமை’ அரசு நடைபெறுகிறது என்பது உறுதியானால், கோவை சம்பவம் போன்ற விடயங்களில் வித்தியாசமான மற்றும் விரும்பக்கூடிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54