நீண்டகாலமாக அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமையினால் பொதுமக்களின் நிதியைக்கொண்டு புனரமைக்கப்படும் வீதியொன்றின் கதை இது. காத்தான்குடி நகர சபை பிரிவில் மிக நீண்டகாலமாக பள்ளமும் குழியுமாக இருந்து வரும் மிக முக்கிய வீதியான காத்தான்குடி டெலிகொம் வீதி பிரதேச மக்கள் ஒவ்வொருவரும் தலா 5000 ரூபாய் நிதியை இட்டு 3 இலட்சம் ரூபாய் செலவில் மக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட இந்த வீதியில் பதுறியா மகா வித்தியாலயம், பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயில், பொதுச்சந்தை, ஸ்ரீலங்கா டெலிகொம் பிராந்திய நிலையம், பிரதம தபாலகம், இலங்கை வங்கி, கொமர்சல் வங்கி, பொது மையவாடி மற்றும் அரச நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ள இந்த டெலிகொம் வீதியானது புனரமைக்கப்படாமல் உள்ளது. அத்துடன் இந்த வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பிராந்திய அலுவலகமும் உள்ளது.

இந்த வீதி பள்ளமும் குழியும் உள்ளதால் மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன் பாதசாரிகள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் இந்த வீதியினால் செல்வதுடன் காத்தான்குடி பிரதான வீதியிலிருந்து காத்தான்குடி கடற்கரைக்கு செல்லும் முக்கியமான வீதியாகவும் இந்த வீதியுள்ளது.

இந்த வீதியினை புனரமைப்பதற்கு அரசியல் வாதிகள் அரசாங்க அதிகாரிகள் பலரிடத்திலும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைகளை விடுத்துவரும் நிலையிலும் இந்த வீதி இன்னும் புனரமைக்கப்பட வில்லை. இந்நிலையில் இந்த வீதியில் வசிக்கும் பொதுமக்கள் தாமாக முன் வந்து மக்கள் பங்களிப்புடன் பள்ளமும் படுகுழியுமாக உள்ள இடங்களை கற்களை கொண்டு நிரப்பி காத்தான்குடி நகர சபையின் உபகரணங்களின் உதவியுடன் புனரமைத்து வருகின்றனர்.

சுமார் 3 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு வேலைகளை செய்து வருவதாகவும் அதன் மூலம் போக்குவரத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்த வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் சமூக சேவையாளருமான வை.எல்.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.