இரட்டைக் குடியுரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் -  கம்மன்பில

Published By: Digital Desk 5

26 Oct, 2022 | 09:49 AM
image

(எம்.மனோசித்ரா)

இரட்டைக் குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்களாயின் அவர்களது சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கும், தாம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அல்ல என்று பாராளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இவற்றை நடைமுறைப்படுத்தாவிட்டால் இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தவிர்க்க முடியாது என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்தோடு 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்ட 10 பேரும் , தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒருவரும் காணப்படுவதாகவும் , எனினும் அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இரட்டை குடியுரிமையுடையவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட முடியாத முறைமை இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் மாத்திரமே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். 

இது மக்களை ஏமாற்றும் , அவர்களை தவறாக வழிநடத்தும் பொய்யான கருத்தாகும். இது பொய் என்பதை நிரூபிக்காவிட்டால் , தனியொரு நபரை பழிவாங்குவதற்காக நாம் 21 ஆம் திருத்தத்தினை நிறைவேற்றியுள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு மக்கள் மத்தியில் தோற்றம் பெறும்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இரட்டை குடியுரிமையுடையோருக்கு வாய்ப்பளிக்கின்றமை உண்மையாகும். தமது நாட்டிலுள்ள இரட்டை குடியுரிமையுடையோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் , அவர்கள் நாட்டுக்கு துரோகமிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை அந்த நாடுகளில் காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும்.

ஆனால் உலகில் பலவீனமான நாடாகக் காணப்படும் இலங்கையில் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம். 2020 இல் அமெரிக்காவுடனான நியூ போட்ரஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது நிதி அமைச்சராக இரட்டை குடியுரிமை கொண்ட பஷில் ராஜபக்ஷவே செயற்பட்டார். அமெரிக்காவின் மீது பற்று கொண்ட அவர் , அந்நாட்டுக்கு சாதகமாக நள்ளிரவில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

எனவே தான் இரட்டை குடியுரிமையுடையோரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான உரிமையை 21 ஆவது திருத்தத்தின் மூலம் நாம் இரத்து செய்தோம். நாட்டில் இரட்டை குடியுரிமை கொண்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர். இது ஒரு கற்பனை மாத்திரமே.

கடந்த 2015 ஆம் ஆண்டு இரட்டை குடியுரிமையோரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான உரிமை தடை செய்யப்பட்ட போது , நாட்டிலுள்ள தனவந்தர் ஒருவர் என்னுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் நோர்வே மற்றும் கனடா குடியுரிமையைக் கொண்ட 10 பேர் இருப்பதாகவும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி அமைச்சுப்பதவி வகிக்கும் ஒருவர் சுவிட்ஸர்லாந்து குடியுரிமையைக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

இவர்களது தகவல்களை சேகரிப்பதற்கு தேவையான செலவுகளை தான் பொறுப்பேற்பதாகவும் , அந்த தகவல்களை சேகரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் என்னிடம் தெரிவித்தார். அதற்கமைய குறித்த நபர்களின் தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது , எந்தவொரு நாடும் தமது பிரஜைகள் தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதில்லை என்பதை அறிந்து கொண்டேன்.

எனவே குறித்தவொரு பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை கொண்டவரா என்தை கண்டறிவதற்கான வழிமுறையொன்று அரசாங்கத்திடமோ எம்மிடமோ இல்லை. எனவே இதற்காக வேறு வழிமுறையொன்றை இனங்காண வேண்டும். அத்தோடு இரட்டை குடியுரிமையுடையவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்களாயின் , அவர்களது சொத்துக்களை அரசுடைமையாக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு தாம் இரட்டை குடியுரிமை அற்றவர்கள் என்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் ஊடாக இரட்டை குடியுரிமையுடையோர் எமது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதைத் தவிர்க்க முடியும். அதனை விடுத்து இரட்டை குடியுரிமையோரை பதவி விலகுமாறு கோருவதால் , எவரும் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41