வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டார். 

பாராளுமன்றத்தில்  2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கமத்தொழில், பெருந்தோட்ட கைத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றுமு; நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான செலவுத்தலைப்புக்கள் மீது  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படும் தோட்டத்தொழிலாளர்கள் 200வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் துன்னபங்களுடனேயே உள்ளனர்.

சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாது நீடித்திருந்த நிலையில் தமது சம்பளத்திற்காக தாமே வீதியிலிறங்கி போராடினார்கள். இந்த நாட்டில் மலையக மக்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் நான்கைந்து தொழில் வழங்கும் கம்பனிகளே அவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கன்றன. 

அந்த நிலைமைகள் மாறவேண்டும். தோட்டப்புறங்களில் பாடசலைகளுக்கான கட்டங்களை நிர்மானிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்ற போதும் காணிகள் இல்லாத நிலைமையே உள்ளது. அதுகுறித்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் காணி அமைச்சர் உரிய கவனம் செலுத்தவேண்டும். மலையகப்பகுதிகளில் உள்ள பாடசாலை அபிவிருத்தி பணிகள் மந்தமாக இருக்கின்ற நிலையில் கட்டட நிர்மானப்பணிகளுக்கான ஒதுக்கீடுகள் கிடைக்கின்றபோது அதனை சரியாக பயன்படுத்த வேண்டும். 

தற்போது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையானது தேசிய ரீதியிலும் அதனைத்தாண்டி சர்வதேச ரீதியிலும் உணரப்பட்டு அதனை தீர்ப்பதற்குரிய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுகின்றன. 

அவ்வாறிருக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய அளவில் உணரப்படவில்லை. தேசிய தலைவர்கள் அதனை உணராதிருக்கின்றமையை இட்டு நான் கவலை அடைகின்றேன். 

மலையகப்பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக நுவரெலியா பகுதியில் மரக்கறிகளின் விலையில்  ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் அத்தொழிலை கைவிடுவதற்கான நிலைமைகளே ஏற்பட்டுள்ளன. ஆகவே நுவரெலியா மக்களின் பிரச்சினைகள் உட்பட மலையக மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.