(எம்.எப்.எம்.பஸீர்)

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர்  என சி.ஐ.டி.யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்களின் அறிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது. 

இது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிக்கை முன்வைத்த போதும் அவர் அதனை நிராகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஊடாக அதனை பெற்றுக்கொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்கியதாகவும் அதற்கமைய அவ்வறிக்கைகள் பாதுகாப்பு செயலாளரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது.

 கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா இதனை நீதிவானுக்கு அறிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போது லசந்த கொலை விவகாரத்தின் பிரதான சாட்சியான லசந்தவின் சாரதியை கடத்திச் சென்று அச்சுறுத்தி இருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப்  பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உடலாகமவும் மன்றில் ஆஜரானார். பிணையில் உள்ள அவர் மன்றில் இன்று ஆஜராகியிருந்தார்.

விசாரணையாளர்கள் சார்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனயவுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மேலதிக விசாரணை அறிக்கையுடன் மன்றில் முன்னிலையானார். பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி அதுல எஸ். ரண்கல ஆஜராகியிருந்தார்.

  லசந்தவின் படுகொலை தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை தொடர்பில் மன்றுக்கு விளக்கமளித்த பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா,

 லசந்த விக்ரமதுங்கவை படுகொலைச் செய்தவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களே என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இது தொடர்பிலான தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரை 200 வரையிலான இராணுவ புலனாய்வாளர்களின் கைவிரல் ரேகைகளை நாம் சேகரித்துள்ளோம்.

 லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் பயணித்ததாக நம்பபடும் காரில் இருந்து கொலையாளியினுடையது என சந்தேகிக்கும் கைவிரல் ரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைரேகையுடன் ஒப்பீடு  செய்து பார்க்கவே இவர்களின் கைவிரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இக்கொலைக்கு 5 தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் சிம் அட்டைகள் பிச்சன் ஜேசுதாசன் எனும் தமிழரின் அடையாள அட்டையை அவருக்கு தெரியாமல் பெற்று அதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். 

இக்கொலை விவகாரத்தில் ஏற்கனவே கைதாகி விடுதலையாகிய கந்தவங்ச பியவன்சவினாலேயே இந்த சிம் அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.