‘ஒன்றாக எழுவோம்’ யாருக்காக ?

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 12:28 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

மக்கள் மத்தியில் தமது செல்வாக்கு வீழ்ந்தே கிடக்கின்றது என்பதை மஹிந்த தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அவர்களின் அண்மைய போக்கு நன்கு உணர்த்துகின்றது. இல்லாவிட்டால்  தமது புதிய நகர்வுக்கு அவர்கள் ‘ ஒன்றாக எழுவோம்’ என்ற தலைப்பை வைத்து களுத்துறையிலிருந்து தமது கூட்டத்தொடரை ஆரம்பித்திருக்க மாட்டர். 

களுத்துறை கூட்டத்தில் ரோகித அபேகுணவர்தன எம்.பி மேடையில் கண்களை சக்கி மக்கள் மத்தியிலும் மஹிந்தவின் மனதிலும் இடம்பிடிக்க எடுத்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் உச்சபட்ச நகைச்சுவை பதிவுகளாக சிங்கள மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

களுத்துறையிலிருந்து    ‘ஒன்றாக எழுவோம்’ கூட்டத்தொடர்  ஏன் மலையக நகரான நாவலப்பிட்டி நகருக்கு வந்தது என்ற கேள்வி பலருக்கும் இருக்கக் கூடும். நாவலப்பிட்டி நகரம் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்திலும் உள்ள பகுதியாகும்.  

மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தது மட்டுமல்லாது கடுங்கோபத்துக்குள்ளாகியுள்ள மஹிந்த தரப்பினரை தனது தொகுதிக்கு அழைத்து வந்து கூட்டம் நடத்திய மஹிந்தானந்தவின் தைரியத்தையும் நம்பிக்கையையும் பாராட்டத்தான் வேண்டும். 

எனினும் நாவலப்பிட்டியில் இக்கூட்டம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஒரு குழுவினர்  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இங்கு தான் சஜித் சறுக்கியுள்ளார். 

காலி முகத்திடல் போராட்டத்தில் எந்த கட்சி பேதமில்லாது ராஜபக்ஷக்களை எதிர்த்து நின்ற மக்கள் கூட்டத்தினரை இங்கு காணக்கிடைக்கவில்லை. 

வலுவில்லாத ஒரு எதிர்த்தரப்பினர் மேற்கொண்ட ஒரு சாதாரண போராட்டமாகவே இது நடந்து முடிந்து விட்டது. பொலிஸாரின் தலையீட்டில் பதினைந்து பேர் கைது செய்யப்பட்டதோடு கதை முடிந்து விட்டது.

ஏனென்றால் இந்தக் கூட்டம் மஹிந்தானந்தவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு இப்பிரதேச மக்கள் கூட்டத்தினரை காணக்கிடைக்கவில்லை.   தனது தொகுதி மக்களின் தேவைகளை அவர் எந்தளவுக்கு நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்பது தான் காரணம். நாவலப்பிட்டி தொகுதிக்கு மலையகத்தின் பிரதான கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் உள்நுழைய முடியாத அளவுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார் மகிந்தானந்த.   

நாவலப்பிட்டியவை அண்டிய பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மஹிந்தானந்தவின் தொழிற்சங்கத்திலேயே அங்கத்துவத்தை தொடர்கின்றனர். 

ஒரு காலத்தில் கழிவுகள் நிறைந்த நகராக காட்சி தந்த நாவலப்பிட்டியவை புதிய நகராக உருவாக்கி அங்குள்ள வைத்தியசாலையை சிறந்த சுகாதார சேவை மையமாக மாற்றியமைத்த பெருமை மஹிந்தானந்தவுக்கு உள்ளது. 

அங்குள்ள அனைவரும் இதை ஏற்றுக்கொள்வர். அவரது செல்வாக்கு காரணமாகவே மக்களால் மிகவும் வெறுத்து ஒதுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் மட்டுமல்லாது கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் சுமந்து நிற்கும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ போன்றவர்களும் அன்றைய கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்தனர். 

ஆனால் தான் கலந்து கொண்ட கூட்டத்துக்கு எதிர்ப்பொன்று இருக்குமென மகிந்த எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அதன் காரணமாகவே அன்றைய தனது உரையில் “நாங்களும் தவறுகளை செய்திருக்கிறோம்” என பேசியிருந்தார். 

அந்தத் தலைப்பில் பேசுவதற்கு அவர்  நிச்சயமாக ஆயத்தமாக வந்திருக்க மாட்டார். ஆனால் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. 

ராஜபக்ஷ அணியில் இன்று  ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக அவர்கள் நினைக்கும் நாமல் ராஜபக்ஷவை மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக கட்டியெழுப்பும் பெரும் பொறுப்பை இன்று வயதான மஹிந்த ஏற்றிருக்கின்றார். 

தனது சகோதரர் கோட்டாபயவின் தவறான நிர்வாகத்தால் செல்வாக்கை இழந்து நிற்கும் அவர் இன்று மகனுக்காக பல மேடைகள் ஏறி இறங்கும் அப்பாவாக மாறியிருக்கின்றார். 

நாமல் ராஜபக்ஷவுக்கு வேறு மார்க்கங்கள் இல்லை. குடும்ப அரசியல் என்ற சித்தாந்தத்தில்   தாத்தா, அப்பா, சித்தப்பா,பெரியப்பா ஆகியோரின் வழித்தடங்களை பின்பற்றாவிட்டாலும், தன்னை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொள்ள மேற்கூறியோரின் சாதனைகளை எடுத்துக் கூறியே அரசியலை தொடர வழியுள்ளது.

மஹிந்தவுக்கு வயதாகி விட்டது. அவரது உடல்மொழியே அவரது தளர்வை வெளிக்காட்டுகின்றது. ஆனால் எந்த நிலையிலும் அதிகார மோகத்தையும்  சொகுசு வலய வாழ்க்கையையும்  தவிர்த்து அவரால் இருக்க முடியாது.

 அதை விட இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட ஜனாதிபதி என்ற நாமத்தை அவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. அதேவேளை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்திலும் அதற்குப்பின்னரும் அவரால் உதவி பெற்று வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்த மகிந்தானந்த போன்றவர்கள் தமது செஞ்சோற்றுக் கடனை செய்ய வேண்டிய தேவையுள்ளது.

இனி அவர்களின் பயணம் நாமல் ராஜபக்ஷவுடன் தான் என்பது முடிவாகி விட்டதால் அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் ஒன்றாய் எழுவோம் என்ற தலைப்பில் நாடெங்கினும் இடம்பெறவுள்ள கூட்டத்தொடர்கள் மக்கள் மத்தியில் எவ்வாறான பிரதிபலிப்புகளை உருவாக்கப்போகின்றன என்பது அவர்கள் மத்தியில் உள்ள கேள்வியாகும். 

நாவலப்பிட்டி எதிர்ப்பானது வேறு இடங்களில் மக்கள் எதிர்ப்பாக மாறக் கூடிய ஒரு விதையை தூவியுள்ளது என்பதை மறுக்க முடியாது.  எனினும் இந்த எழுச்சி கூட்டங்கள் யாருக்காக என்ற கேள்விக்கு மஹிந்த தரப்பினரும் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களும் தமது தொகுதி மக்களுக்கு கூற வேண்டிய தேவை உள்ளது. 

பாராளுமன்றில் தற்போதைய மஹிந்த அணியினரின் ஆதரவால் தான் ரணில் ஜனாதிபதியாக வீற்றிருக்கின்றார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே மஹிந்த அணியினரின் இந்த எழுச்சி கூட்டங்களை அவர் கண்டு கொள்ளாமலிருந்தாலும் பாராளுமன்றில் தனது பக்கத்தை வலுவூட்டும் காய் நகர்த்தல்களை அவர் மேற்கொண்டே வருகின்றார். 

அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பிறகு எப்போதும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையிலேயே  மகிந்த அணியினர் தமது வாக்கு சேகரிப்பு தேர்தல் கூட்டங்களுக்கு முன்பதாக, மக்கள் மத்தியில் தமக்கிருக்கும் செல்வாக்கை பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனதில் என்ன உள்ளது என்பதை எவரும் அறிய முடியாதுள்ளது.  பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் தனக்கில்லை என்று ரணில் தெரிவித்திருக்கிறார்.

 மஹிந்த தலைமையிலான மொட்டுக் கட்சியினரை அமைதியாக வைத்திருக்கும் எண்ணத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தாரா அல்லது அவர் மனதில் வேறு திட்டங்கள் இருக்கின்றனவா என்பதை இப்போதைக்கு அவரிடமிருந்து அறிய முடியாது. 

ஆனால் நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்கும் அவரது செயற்பாடுகளுக்கு மத்தியில் மொட்டு கட்சியினரின் இந்த ஒன்றாய் எழுவோம் கோஷங்கள் அவரை நிச்சயமாக எரிச்சலடையச் செய்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.  அவர் அடுத்து என்னென்ன தீர்மானங்களை எடுக்கப்போகின்றார் என்பது மக்களினதும் அவருடன் இருக்கும் மொட்டு கட்சியினரினதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கப்போகின்றது. 

 இதனிடையே  கடந்த 19 ஆம் திகதிநாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் நாம் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம். இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கின்றார். 

ஸ்திரமானதொரு அரசாங்கம் இல்லையென்பது உண்மை. ஆனால் பாராளுமன்ற தேர்தலொன்றுக்குச் சென்று ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பதைக் காட்டிலும் அதற்கு முன்பதாக வேறு வழிகளில் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகள் எதுவும் அவரிடம் இருக்கின்றதா என்பதுவும்  தெரியவில்லை. 

ஆனால் மஹிந்த அணியினரின் ஒன்றாய் எழுவோம் எழுச்சி கூட்டத்தொடரை எந்த வழியிலாவது கட்டுப்படுத்தி  கடிவாளம் போடுவதை விட, அவர்கள் மக்கள் மத்தியில் சென்று இன்னும் வெறுப்பை சாம்பாதித்துக் கொள்ளட்டும் என்று    ஜனாதிபதி அலட்டிக்கொள்ளாமலிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04