தாண்டவமாடும் வறுமை

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 11:58 AM
image

ரொபட் அன்டனி 

  • இலங்கையில் அடுத்த சில ஆண்டுகளில் வறுமை நிலை 
  • 25 சதவீதத்துக்கு மேல் இருக்கும் உலக வங்கியின் புதிய அறிக்கை  
  • உணவு பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பு தான்.  உணவு பாதுகாப்பு கவனிக்கப்படாவிடின் வீண் குழப்பங்கள்,  ஸ்திரமற்ற தன்மை  சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம்
  • ஐ.நா.வின் உணவு, விவசாய  முகவர் அமைப்புக்களுக்கான அமெரிக்காவின் நிரந்த பிரதிநிதி சின்டி மெக்கேய்ன்
  • மந்தபோஷணை நிலை  காரணமாக மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவுள்ளது
  • கல்வி அமைச்சர் சுசில் 

நாட்டின்  பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் இவ்வருடத்தில் வறுமை வீதம் அதிகரிக்கும் என்று  உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.  

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு, வேலை இழப்புகள், மட்டுப்படுத்தப்பட்ட உரம் வழங்கல் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இயலங்கையர்கள் பணம் அனுப்புவது குறைவடைந்தமை போன்றவற்றால் வறிய குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

அரசாங்கத்தின் மானியம் மற்றும் சமூக உதவி ஓரளவு நிவாரணம் அளிப்பதாக இருந்தாலும்   உண்மையான வருமானத்தில் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  உலக வங்கியின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.  

மிக முக்கியமாக இலங்கையில் அடுத்த சில ஆண்டுகளில் வறுமை நிலை 25 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கியின் இலங்கை குறித்த அண்மைய அறிக்கையில்  எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

நிலைமைகளை அவதானிக்கும்போது உலக வங்கியின் அறிக்கை மிகவும் அபாயகரமான எச்சரிக்கையை விடுத்து இருப்பதாகவே உணரமுடிகிறது.  உலக வங்கி  தொடர்ச்சியாக இலங்கையின் பொருளாதாரத்தை மதிப்பிட்டு அவ்வப்போது  அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.  

அந்த அடிப்படையிலேயே தற்போது இலங்கையில் வறிய மக்கள் அதிகரித்துச் செல்வது தொடர்பான விடயங்களை உலக வங்கி வெளியிட்டிருக்கின்றது.  கடந்த 30 20 வருடங்களுக்கு முன்னர்  மிக அதிகமாக காணப்பட்ட வறுமை விகிதம் படிப்படியாக குறைவடைந்து வந்தது.   

 2019 ஆம் ஆண்டின்   மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையின் வறுமை வீதமானது 14 விதமாக காணப்பட்டது.    ஆனால் தற்போது அது இவ்வருட இறுதியில் இருந்து 25 வேகமாக அதிகரிக்கும் அபாயத்தை கொண்டிருப்பதாகவே எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

அதிகரிக்கும் நெருக்கடி 

இலங்கையில் தற்போது நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி  கடுமையாக மக்களை பாதித்திருக்கின்றது. நடுத்தர மக்கள்   வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் என பல்வேறு தரப்பினரையும் இந்த பொருளாதார நெருக்கடி கடுமையாக பாதித்திருக்கிறது.  குறிப்பாக இது தொடர்பாக பல்வேறு புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  முக்கியமாக உலக  உணவு அமைப்பு,    ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்பு என்பன இலங்கையில் 6 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. 

இலங்கையின் உணவு பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த   ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய  முகவர் அமைப்புக்களுக்கான   அமெரிக்காவின் நிரந்த பிரதிநிதி சின்டி மெக்கேய்ன் உணவு பாதுகாப்பு குறித்து முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருந்தார். 

அதாவது இலங்கையின் உணவு பாதுகாப்பு மிக நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றது. இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கு பாரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.  உணவு பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பு தான்.  

உணவு பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டால் அது தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும்.  உணவு பாதுகாப்பு கவனிக்கப்படாவிடின் வீண் குழப்பங்கள்,  ஸ்திரமற்ற தன்மை  சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம் என்று சின்டி மெக்கேய்ன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்தவகையில் இலங்கையில் வறுமை நிலை அதிகரித்துச் செல்வதையும் மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய சவால்கள் நீடித்துக் கொண்டிருக்கும் தன்மையையும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களிலிருந்து காணமுடிகிறது.  இலங்கை எந்தளவுதூரம் இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது? அது எந்தளவு தூரம்  உணவுப் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது ? என்பதற்கான பல்வேறு சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன.   

முக்கியமாக இலங்கையில் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர்  பொதுவான பணவீக்கம் 60 வீதமாகவும் உணவு பணவீக்கம் 90 வீதத்தையும்   கடந்தும் காணப்படுகிறது.  இதனூடாக பொருட்களின் விலைகளும் கட்டணங்களும் எந்தளவு தூரம் அதிகரித்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளலாம். இதனால்  வரையறுக்கப்பட்ட வருமானத்தை கொண்டுள்ள  மக்கள் எவ்வாறு தமது உணவுத் தேவையை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்பது குறித்து சிந்திக்க முடிகிறது. 

வட்டி வீதங்கள்… 

மேலும் மத்திய வங்கியினால்  வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்  அந்த வீதங்கள் மாற்றமின்றி தொடர்கின்றன.  அதிகரித்து செல்லும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வட்டி வீதங்களை அதிகரித்திருந்தாலும் தற்போதைய பணவீக்கமானது ஏன்  ஏற்பட்டு இருக்கின்றது என்பதும் ஆராயப்படவேண்டியுள்ளது.  காரணம் இந்த பணவீக்கமானது டொலர் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வினால்  ஏற்பட்டது. 

எனவே மக்களின் கொள்வனவு சக்தியை குறைப்பதற்கு  வட்டி வீதங்களை அதிகரித்த மட்டத்தில் பேணுவது எந்தளவுதூரம் சரி என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால்  வட்டிவீதங்களை அதிகரிப்பதன் மூலம் பணப்புழக்கத்தை குறைத்து அதனூடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்பதும்  மறுக்கப்பட முடியாது கோட்பாடாகவே உள்ளது.  

மிக முக்கியமாக இந்தப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  குறிப்பாக 1,600 ரூபாய்க்கு இருந்த சமையல் எரிவாயு இன்று நான்காயிரத்து 600 ரூபாயை தாண்டி நிற்கிறது. ஆனால் மாதாந்தம் சம்பளம் பெற்ற மக்களின் சம்பளத்தில் அதிகளவு  மாற்றங்கள் ஏற்படவில்லை.  

அதேபோன்று பல்வேறு பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள், குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்ற தனியார் ஊழியர்கள் போன்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதேபோன்று அன்றாடம் தொழில் செய்து தமது வருமானத்தை பெற்றுக்கொள்கின்றவர்கள், சம்பளம் குறைக்கப்பட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.   

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதனால்  தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வருமானம் குறைவடைந்துள்ளது. மேலும்  இறக்குமதி வரையறைகளும்  சில தொழிற்துறைகளை பாதித்துள்ளதுடன் 

சுற்றுலாத்துறையின் மந்தகதியும்  பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கின்றது.   இந்தநிலையில்  மக்கள் எவ்வாறு தமது குடும்பங்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுவது  என்பதில் ஒரு சவாலான  நிலை நீடிக்கிறது. 

மந்தபோஷணை பிரச்சினை 

மேலும் சிறுவர்களின் மந்தபோஷனை நிலையும் பாரியளவில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கின்றது.  இதனால்  பாடசாலைகளுக்கான  பிள்ளைகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.   உணவை பெற முடியாத நிலை  தலைவிரித்தாடும் நிலையில் மக்களினால் உரிய முறையில் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாமல் இருக்கின்றது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மந்தபோஷணை நிலை  காரணமாக மலையக தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவுள்ளது. அதனால் தோட்டப்புற பாடசாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சருக்கு பொறுப்பு வழங்கி இருகின்றோம்  என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் நாட்டில் 41 இலட்சம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 11இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம். அது போதுமானதாக இல்லை. அதனால் இதனை 21 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்காக உலக உணவு திட்டம், யுனிசெப் அமைப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. 

எனவே மாணவர்களின் போஷணையை  இந்த வருட இறுதிக்குள் 50வீதம் வரை  அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது  என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதனூடாக நாட்டில் வறுமை மற்றும் மந்தபோஷணை  நிலைமை,  உணவு பாதுகாப்பற்ற பிரச்சனை எந்தளவு தூரம் பூதாகரமாக வெடித்து இருக்கின்றது என்பதை காணமுடிகிறது.  குறிப்பாக சிறுவர்கள் தொடர்பான  சம்பந்தப்பட்ட கல்வி அமைச்சரே  பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருப்பதாகவும் உணவு பிரச்சினையால் இந்த நிலை  ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்.   

அந்தவகையில்  மக்களின் உணவுப் பிரச்சினை பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.  அதனால்தான் உணவு பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு என்று  ஐக்கிய நாடுகள் உணவு அமைப்பின்  அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்திருக்கிறார்.  தற்போதைய சூழலில் மக்கள் தமக்கான மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்வதே கடும் சவாலாக மாறி இருக்கின்றது.  

வாழ்க்கை செலவு உயர்வே இதற்கு  முக்கிய காரணமாக இருக்கின்றது. அதாவது பணவீக்கத்தின் உயர்வு வாழ்க்கைச் செலவு உயர்வை கோடிட்டு காட்டுகிறது.  அதனை தடுப்பதற்காகவே அரசாங்கம் வங்கிகளின் வட்டி வீதங்களை அதிகரித்திருக்கின்றது.  அதனுடன் மக்கள் மக்களின் கேள்வி  குறைவடைந்து பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இது இவ்வாறு இருக்க வறுமை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தனது மதிப்பீடு தொடர்பாக கருத்து வெளியிட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி 12 வீதமாக இருந்த வறுமை நிலை தற்போது 25 வீதமாக அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு பணவீக்கம், தொழிலின்மை,  வருமானம் இழப்பு போன்றவை முக்கியக் காரணங்களாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வட்டி வீதங்களை அதிகரிப்பதன் மூலம்  பணவீக்கத்தை  குறைக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.  ஆனால் அந்த கருவியின் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியுமா என்பது நடைமுறை ரீதியில் சிக்கலாகவே இருக்கிறது. வட்டி வீதங்களை அதிகரித்து  பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி பணவீக்கத்தை குறைக்கலாம் என்று  மத்திய வங்கி கருதுகிறது.  

எப்படியிருப்பினும் தற்போது நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இந்த நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்.  கிராமப்புறங்களில் மக்கள் ஏதோ விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது.  ஆனால் நகர்ப்புறங்களில் இருக்கின்ற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  

நகர்ப்புறங்களில் 5 வீதமாக காணப்பட்ட வறுமை  தற்போது 15 வீதமாக அதிகரித்து இருக்கின்றது  என்றும் கலாநிதி கணேசமூர்த்தி தனது மதிப்பீட்டை வெளிப்படுத்தினார். 

மக்கள் தமது உணவுத் தேவைக்கான கொள்வனவுகள் தவிர்க்க முடியாது.  குறைக்கலாம். ஆனால் தவிர்க்க முடியாது. உணவுத் தேவைக்கான கொள்வனவை  கட்டாயம் செய்தேயாக வேண்டும்.     அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள், மானிய உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முக்கியமாக தற்போது இந்த நெருக்கடி காரணமாகவே பல சவால்கள் எழுந்திருக்கின்றன.  பொருளாதார நெருக்கடியே  மக்களை இந்த நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கின்றது.  

பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்குத் தீர்வு வழங்க வேண்டும்.  பாடசாலை மாணவர்கள் மந்தபோஷணை மற்றும் உணவுப் பிரச்சினையால்  பாதிக்கப்படுவது என்பதானது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும்.  பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைவதானது  எதிர்காத்தை    பாதிக்கும்.  எனவே இவை தொடர்பாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.    

இந்த பிரச்சினைக்கு சிறுவர்கள் பொறுப்புக்கூற வேண்டியதில்லை, இதனால் சிறுவர்கள் பாதிக்க இடமளிக்க முடியாது.     எனவே அவர்களுக்கான உணவுத் தேவையை சரியான முறையில் உறுதிபடுத்தவும் விரைவான மீட்சி திட்டங்களைக்கொண்டு வறுமையை நிலையை கட்டுப்படுத்தவும்       அனைவரும் கைகோர்த்து   பொறுப்புடன் செயற்படவேண்டும்.   முன்வருவார்களா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04