புதிய வரி எவ்வாறு அறவிடப்படும் ? - விளக்குகிறார் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஷமூர்த்தி

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 11:58 AM
image

புதிய வரி அறவிடல் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துகிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி

ஒரு இலட்சம் ரூபா மாதாந்த வருமானம் அல்லது சம்பளமாக பெற்றால் வரி அறவிடப்படமாட்டாது. ஆனால் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் ரூபா பெற்றால் 2500 ரூபாஅறவிடப்படும்.  அது படிப்படியாக அதிகரிக்கும்.  மாதம் 5 இலட்சம் ரூபாவை சம்பளமாக அல்லது வருமான பெற்றால் அவர்  ஒரு இலட்சத்து 4 ரூபாவை வரியாக செலுத்தவேண்டும்  

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி 

நாட்டில் புதிதாக அறவிடப்படுவதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்ற  நேரடி வரி வீதங்கள் எவ்வாறு மக்களை பாதிக்கும்? அது எவ்வாறு மக்களின் மாதாந்த சம்பளம் மற்றும் மாதாந்த வருமானங்களிலிருந்து அறவிடப்படும் என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோத்தில்   நாம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தியை தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்தோம். 

முக்கியமாக மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபா  சம்பளமாக பெறுகின்றவர்  ஒரு இலட்சத்து 4 ஆயிரம் ரூபாவை வருமான வரியாக புதிய முறைப்படி செலுத்த வேண்டி ஏற்படும் என்று கணேசமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார்.  அதேபோன்று மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா  சம்பளமாக பெறுகின்றவர் வரி செலுத்த வேண்டி ஏற்படாது என்றும் ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாவை ஒருவர் மாத சம்பளமாக பெற்றால் 2500 ரூபா மாதாந்த வரியாக செலுத்த வேண்டும்  என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக பெறுகின்ற சம்பளம் அல்லது வருமானத்துக்கு 36 வீதமான வரியை செலுத்தவேண்டும். 

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளில் அந்த நிதியம் முன்வைக்கின்ற யோசனைகளுக்கு அமையவே இந்த வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அரசாங்கத்தின் வரி வருமானத்தை 18 வீதம் என்ற இலக்கை அடைய  இவ்வாறு வரி விதிக்கப்படவுள்ளன.  

இந்த வரிகளை விதிக்காவிடின் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லவேண்டியேற்படும் என்று ஜனாதிபதி ரணிலும் கடந்த புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வலியுறுத்தியிருந்தார்.  

இந்நிலையில் வரி அறவீடுகள் குறித்த கலாநிதி கணேஷமூர்த்தியுடனான நேர்காணலின் முக்கிய விடயங்களை இங்கே பார்க்கலாம்.  

கேள்வி எவ்வாறான நேரடி வரிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன? அது எவ்வாறு மக்களின் வருமானத்தில் தாக்கம் செலுத்தும்? 

பதில் இதில் இரண்டு விடயங்கள் உள்ளன.   முதலாவதாக முன்னர் மாதாந்தம் வருமான வரிக்கு உட்படாத வகையில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  காணப்பட்டது.  அதாவது நீங்கள் முன்னர் மாதம் ஒன்றுக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  மாத சம்பளமாக பெற்றால் அல்லது வருமானமாக உழைத்தால் அதற்கு வரி அறவிடப்படமாட்டாது.  தற்போது அந்த வருமான எல்லை  ஒரு இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.   அதாவது நீங்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக வருமானமடைந்தால் அல்லது மாத சம்பளம் பெற்றால் நீங்கள் வரி செலுத்த வேண்டும்.    இரண்டாவது  விடயமானது முன்னர் அதியுச்ச வருமான வரி எல்லையாக 24 வீதம் காணப்பட்டது.  ஆனால் தற்போது அதியுள்ள வருமான எல்லை வீதமாக 36 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டு விடயங்களும் ஒன்றிணையும்போதுதான் மக்களின் வருமானங்கள் மீது பாரியதொரு தாக்கம் ஏற்படுகின்றது.   மாதாந்தம் ஒரு லட்சம் ரூபா  வருமானம் பெறுகின்றவர் அல்லது ஒரு லட்சம் ரூபா  சம்பளம் பெறுகின்றவர் வருமானம் வரி செலுத்த   செலுத்த வேண்டிய அவசியமில்லை.   

கேள்வி சரி. ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக வருமானம் அல்லது சம்பளம் மாதாந்தம் பெற்றால்  எவ்வாறு புதிய வருமான வரி அறவிடப்படும்? 

பதில் ஒருவர் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உழைக்கின்றார் என்றால் மாதம் 2500 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதனை மேலும் விபரமாக பின்வருமாறு கூறலாம். அதாவது நீங்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 41667   ரூபா  மாத வருமானமாக பெற்றால் நீங்கள் அதில் 6  வீதத்தை அதாவது 2500 ரூபா  வரியாக செலுத்த வேண்டும்.  இதுவே ஒருவர்  மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 83333 ரூபா   வருமானமாக பெற்றால் அந்த மேலதிக கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாவுக்கு  நீங்கள் 12 வீத வரியை செலுத்த வேண்டும்.   

நீங்கள் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அண்ணளவாக முதலாவது ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரையில் வருமானம் பெற்றால் அந்த 40 ஆயிரம் ரூபாவுக்கு 6 வீத வரியாக 2500 ரூபா செலுத்த வேண்டும்.   

அண்ணளவாக   ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா  பெறுவாராக இருந்தால் இரண்டாவது 40 ஆயிரம் ரூபாவுக்கு 12 வீதம் வரியாக 5000 ரூபா செலுத்தவேண்டும். அப்படி பார்க்கும்போது ஒரு இலட்சத்துக்கு மேலதிகமாக பெற்ற 8000 ரூபாவுக்கு 7500 ரூபா வரி செலுத்தவேண்டும்.    இதே நீங்கள் மாதமொன்றுக்கு இரண்டு இலட்சத்து 25000   ரூபா  வருமானமாக பெற்றால்  அந்த மூன்றாவது 40 ஆயிரம் ரூபாவுக்கு 18 வீதம் அதாவது 7200 ரூபா வரி  செலுத்த வேண்டும்.  

அப்போது  நீங்கள் பெறுகின்ற இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வருமானத்துக்கு மொத்தமாக   வரியானது 12,300 அளவில் வரி செலுத்தவேண்டும். நீங்கள் பெறுகின்ற வருமான அளவுக்கு ஏற்ப அது மாறும். நான் அண்ணளவாக கூறுகின்றேன். 

நீங்கள் இதில் சரியான விளக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். முதலாவது 40  ஆயிரம் ரூபாவுக்கு ஆறு வித வரியும் இரண்டாவது 40 ஆயிரம் ரூபாவுக்கு 12 வீத வரியும்    மூன்றாவது 40000 ரூபாவுக்கு 18 வீத வரியும் அறவிடப்படும்.  இது அனைத்தும் சேர்ந்து உங்களுக்கு இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தால்    15000 ரூபா  வரியாக செலுத்த வேண்டும்.  

நான் இங்கு உங்களிடம் அண்ணளவான சம்பளத்துக்கே   வரிவீதத்தை கூறுகின்றேன்.  இதனை உள்ளே சென்று பார்க்கும்போது இன்னும் சிக்கலாக இருக்கும்.    அதேபோன்று ஒருவர் இரண்டு இலட்சத்து 66 ஆயிரத்து 667 ரூபா  சம்பளம்  பெற்றால் அவர் அந்த நான்காவது 40 ஆயிரம் ரூபாவுக்கு 24 வீத வரியை  அதாவது 9600 ரூபாவை செலுத்த வேண்டும்.  

அப்படியானால் இந்த சம்பளத் தொகையை பெறுகின்ற ஒருவர் மாதத்திற்கு 24600 ரூபாவை  வரியாக செலுத்தவேண்டும்.  உங்கள் வருமானம் கூட கூட நீங்கள் செலுத்த வேண்டிய வரியின்  வீதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.    அந்தவகையில் அடுத்த 40000 ரூபாவுக்கு 30 வீத வரியும்   அதற்கு அடுத்த 40000 ரூபாவுக்கு 36 வீத வரியும் செலுத்தவேண்டும்.  

இதன் எல்லை  350000 ரூபாவாகும்.    அதாவது   மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா  வரை உங்களது வருமானம் அல்லது சம்பளம் காணப்பட்டால் நீங்கள்   52,500 ரூபாவை வரியாக செலுத்தவேண்டும். இதனை கழித்துக்கொண்டே நிறுவனம் உங்களுக்கு இறுதி சம்பளத்தை வழங்கும்.   எனவே இங்கு மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  உச்ச எல்லையாக கருதப்படுகிறது.   அதனை தாண்டி வருகின்ற எல்லா வருமானத்துக்கும் நீங்கள் 36 வீதமான வரியை செலுத்த வேண்டும்.   

கேள்வி அதாவது ஒரு லட்சம் ரூபாவிலிருந்து 3,50 000 ரூபா வரையான வருமானத்தை அல்லது சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் பிரித்துப் பார்த்து அதற்கு முதலாவது 40 ஆயிரத்துக்கு ஆறுவிதம், இரண்டாவது நாற்பதாயிரத்திற்கு 12 வீதம்,  மூன்றாவது 40 ஆயிரத்துக்கு 18 வீதம்,  நான்காவது 40 ஆயிரத்துக்கு 24 வீதம்,  ஐந்தாவது 40 ஆயிரத்துக்கு 30வீதம்  வரை அறவிடப்படும்.  அதன் பின்னர்  அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு பின்னர் வருகின்ற சகல வருமானத்துக்கும் சகல சம்பளத்திற்கும் 36 வீதமான வரி அறவிடப்படும். இது சரியா ?

பதில் ஆம். அது சரி.  அதாவது 3 லட்சம் 50 ஆயிரவை உச்ச எல்லையாக கருதி அதற்கு அப்பால் பெறுகின்ற சகல வருமானத்துக்கும் சகல சம்பளத்துக்கும் 36 வீதமான வரியை செலுத்த வேண்டும்.  அப்படியானால் ஒருவர்   ஐந்து லட்சம் ரூபா  சம்பளம் பெறுபவராக இருந்தால்  அண்ணளவாக ஒரு இலட்சத்து நான்காயிரம் ரூபாவை    வருமான வரியாக செலுத்த வேண்டும். 

அதாவது ஐந்து லட்சம் ரூபாய் வருமானமாக மாதாந்தம் பெறுகின்ற ஒருவர் தனது சம்பளத்தில் ஐந்தில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டியது புதிய நிலைமையாக இருக்கிறது.

கேள்வி அதாவது ஒருவர் மாதாந்தம் 50 லட்சம் ரூபா  வருமானம் பெற்றாலும் 3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு பின்னரான தொகைக்கு 36 வீதமான வரியை செலுத்த வேண்டுமா? 

பதில்  ஒரு இலட்சத்திலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா  வரையான அந்த தொகைக்கு 40 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் அதிகரித்த மட்டங்களில் 6 இலிருந்து 36 வீதம் வரை வரியை செலுத்த வேண்டும். இங்கு  ஒரு முக்கியமான விடயத்தை நீங்கள் பார்க்க வேண்டும்.    நீங்கள் ஒரு இலட்சம் ரூபா    சம்பளம் அல்லது வருமானத்தை மாதம்  பெற்றால் உங்களுக்கு வரி கிடையாது.  ஆனால் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  வருமானம் பெற்றால் நீங்கள் செலுத்த வேண்டிய வரி   ஆறு வீதமாக இருக்கும்.   

கேள்வி இந்த வரி முறை   யார் மீது தாக்கம் செலுத்தும்?

பதில் இதில்   மாதாந்தம் சம்பளம் பெறுகின்ற அதாவது சம்பள பட்டியல் ஊடாக சம்பளம் பெறுகின்றவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்.   குறிப்பாக 10 லட்சம் ரூபாய் மாதாந்த வருமானம் பெறுகின்றவர் அல்லது மாதம் சம்பளமாக  பெறுகின்ற ஒருவரை நாம் எடுத்துக் கொண்டால் 2 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா   வரியாக செலுத்து   வேண்டும். நீங்கள் 10 இலட்சம் மாத சம்பளம் பெறுபவரா இருந்தால் உங்கள் நிறுவனம் அந்த 2 இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாவை கழித்துக்கொண்டே உங்களுக்கு  மீதி சம்பளத்தை கொடுக்கும்.

கேள்வி ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி கலந்த வரி மறு மறுசீரமைப்பாகவே இது காணப்படுகிறதா? 

பதில் இதில் மற்றுமொரு முக்கியமான விடயத்தையும் கூற வேண்டும்.  அதாவது இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில்  இந்த வரி விடயத்தை மாதாந்ம்  வரி செலுத்துவதாக பார்க்காமல் வருடத்திற்கு நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள் என்பதை  பார்க்குமாறு கோரிக்கை விடப்பட்டது.  ஆனால் மாதந்தம்தான் வரி அறவிடப்படப்போகிறது.  

இதில்  சம்பளப்பட்டியலில் சம்பளம் பெறுகின்றவர்கள் பாதிக்கப்படுவர்.  மேலும்  5 லட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகின்றவர்களை   பார்க்கும்போது அவர்கள் மத்திய தர வகுப்பினராகவே இருப்பார்கள். அவர்கள் அந்த சம்பளத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்லும் தொகை மிக குறைவாக இருக்கும்.  காரணம் அவர்கள்  வீட்டுக் கடனை பெற்றிருப்பார்கள்.   

வாகன கடன் ஒன்றை பெற்றிருப்பார்கள்.  அவற்றின் தவணைப் பணத்தை  செலுத்த வேண்டும்.  மேலும் மாதாந்த செலவுகள் என எல்லாம் போக அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை மிகக் குறைவாகவே இருக்கும். 

சிலர்  பிள்ளைகளை சர்வதேச நாடுகளில் படிக்க வைத்திருப்பார்கள்.   அப்படிபார்க்கும்போது     5 இலட்சம் ரூபா சம்பளம் பெறுகின்ற ஒருவர் வீட்டுக்கு எடுத்து செல்கின்ற தொகை ஒரு லட்சத்தை விட குறைவாக இருக்கலாம்.  ஆனால் தற்போது 5 இலட்சம் சம்பளம் பெறுகின்ற ஒருவர் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையை வரியாக செலுத்த வேண்டும்.

கேள்வி தற்போது இந்த வருமான வரி வீதம் வங்கியில் வைப்பு செய்திருக்கின்ற மக்கள் பெறுகின்ற வட்டிகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

பதில்      நீங்கள் வங்கியில் வைத்திருக்கின்ற  நிலையான வைப்பாக இருக்கலாம். சாதாரண சேமிப்பு வைப்பாக இருக்கலாம். வெளிநாடுகளில் இருந்து நீங்கள் பெறுகின்ற பணமாக இருக்கலாம்.  அந்த வட்டி வருமானம் ஒரு இலட்சம் ரூபாவைவிட மாதம் அதிகமாக கிடைத்தால்அந்த ஒரு இலட்சம் ரூபாவை தாண்டும்  தொகைக்கு 5 வீத நிறுத்தல் வரி அறவிடப்படும்.      வருட இறுதியில்   உங்களுடைய மொத்த வருமானம் 12 இலட்சம் ரூபாவை விஞ்சுகின்ற போது குறித்த வட்டி வருமானத்தையும் சேர்த்து அவரது மொத்த வருமானம் எந்த வருமான வரி வீதத்துக்குள் வருகிறேதோ அந்த வரித்தொகையை அவர் செலுத்தவேண்டும். இதன்போது அவர் ஏற்கனவே செலுத்திய 5 வீத நிறுத்தல் வரி அதிலிருந்து கழிக்கப்படும்.   

கேள்வி அப்படியானால் ஒருவருக்கு வருடாந்தம் வட்டி வருமானமாக ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அவர் எப்படி இந்த வரியை செலுத்த வேண்டும் ?

பதில் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  அதாவது ஒருவருடைய  மாத வட்டி வருமானம் ஐந்து லட்சம் ரூபாவாக இருந்தால் அதில்  ஒரு இலட்சத்தை கடந்து மீதி 4 இலட்சத்துக்கு ஐந்து வீத வரி அவரிடம் இருந்து பெறப்பட்டு அது நிறுத்தல் வரியாக வைக்கப்படும்.   

பின்னர் வருட இறுதியில்   அவருடைய மொத்த வருமானம் 12 இலட்சம் ரூபாவை விஞ்சுகின்ற போது குறித்த வட்டி வருமானத்தையும் சேர்த்து அவரது மொத்த வருமானம் எந்த வருமான வரி வீதத்துக்குள் வருகிறேதோ அந்த வரித்தொகையை அவர் செலுத்தவேண்டும். 

இதன்போது அவர் ஏற்கனவே செலுத்திய 5 வீத நிறுத்தல் வரி அதிலிருந்து கழிக்கப்படும். ஒரு வேளை அவருடைய மொத்த வருமானம் வரி செலுத்துவதற்கு உட்படாத எல்லைக்கு உட்பட்ட வருமானமாக இருந்தால் அந்த நிறுத்தல் செய்யப்பட்ட ஐந்து வீத வரி மட்டுமே   அவரிடம் இருந்து பெறப்படும். 

இங்கு பிரச்சனை என்னவென்றால் ஓய்வூதியம் பெறுகின்றவர்கள் தமது  பணத்தை நிலையான வைப்பிலிட்டு  அதிலிருந்து பணத்தை பெற்று தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  முன்னர் ஓய்வூதியக்காரர்களின் வைப்புகளுக்கு வரி அறவிடப்படவில்லை.  ஆனால் இப்போது   அதனை சேர்த்திருக்கிறார்கள்.

கேள்வி அப்படியானால்  ஒருவர் வருடம் ஒன்றுக்கு 12 இலட்சம் ரூபா  வட்டி வருமானமாக தனது வைப்பின் ஊடாக பெற்றுக் கொண்டால் அவருக்கு வரி அறவிடப்படாது? சரியா?

அதில்   வருடம் அதற்கு 12 இலட்சம் ரூபாவை வட்டி வருமானமாக பெற்றால்  அவரது ஒரு மாதத்தின் வட்டிவருமானம் ஒரு இலட்சமாகும்.  எனவே ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சம் வரை வருமானம் பெற்றால் வரி அறவிடப்படாது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54