மகிந்தவின் மலையக விஐயம் : எதிர்ப்பது எதிர்க்கட்சி மாத்திரமா ?

Published By: Nanthini

20 Oct, 2022 | 05:10 PM
image

(குமார் சுகுணா) 

சில மாதங்களுக்கு முன் நாட்டு மக்களின் பாரிய எதிர்ப்புகளை சம்பாதித்த மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர், மீண்டும் மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வருவது உறுதி என தெரிவித்திருப்பது வியப்பாகத்தான் உள்ளது. அதுவும் மக்கள் கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளர்.

இலங்கை வரலாற்றில் யாருமே எதிர்பார்க்காத ஒரு அரசியல் நிகழ்வு கடந்த மே மாதம் இடம்பெற்றது. எப்போதும் மே மாதம் என்பது பல அரசியல் மாற்றங்களை உருவாக்கிய மாதம்தான். 

ஆம், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதும் இந்த மே மாதத்தில் தான். 

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, இலங்கையின் ஒரு தரப்பு குடிமக்கள் - தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர். அதனை இதே நாட்டின் இன்னொரு தரப்பு மக்கள் வெற்றியாக கொண்டாடினர். 

இந்த வெற்றிக்கு காரணம், ராஜபக்ஷ குடும்பமே என கூறப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவும், நாட்டின் ஏனைய முக்கிய  அரச பதவிகள் அனைத்தையும் அவரது அண்ணன், தம்பிகள், பிள்ளைகள் என அவரது உறவினர்களுமே அங்கம் வகித்தனர். 

அத்துடன் ராஜபக்ஷவினர் யுத்த வீரர்கள், விடுதலைப்புலிகளை தோற்கடித்த இலங்கையின் ஜெய வீரர்கள் என்றெல்லாம் புகழப்பட்டனர். 

தமிழர்களை தவிர்த்து, ஏனைய இன மக்களால் நாட்டின் பாதுகாவலர்கள் என கொண்டாடப்பட்டனர்.

இந்நிலையில் அதேபோன்ற ஒரு மே மாதம் இந்த வருடமும் வந்தது. இதன்போது மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஓட ஓட விரட்டினர். 

எந்த மக்களால் வெற்றிவீரர்கள் என கொண்டாடப்பட்டனரோ, அதே மக்கள் மஹிந்த குடும்பத்தினருக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினர். அக்காலப்பகுதியில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்தார். 

நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி உருவானமைக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரே காரணம் என கூறப்பட்டு  மக்கள் போராட்டம் வெடித்தது. 

இறுதியாக, மே மாதம் மஹிந்த தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். ஆனாலும், மக்களின் போராட்டம் தொடர்ந்தது. இறுதியாக, கோட்டாபய ராஜபக்ஷவை  ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கச் செய்ததோடு, அவரை பல நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அலைய வைத்தது.

நாடற்றவராக பல நாடுகளை அவர் சுற்றித் திரிந்து, முடிவில் தற்போதைய ஜனாதிபதியான ரணிலின் சாணக்கியத்தால் மீண்டும் இலங்கைக்கு வந்தடைந்தார். 

இந்த போராட்டங்களின்போது ராஜபக்ஷக்களின் தந்தையின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டதோடு பல வன்முறைகள் வெடித்தன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. 

இதன் பின்னர் ராஜபக்ஷவினர் மக்களால் முழுதாக நிராகரிக்கப்பட்டுவிட்டதாக பொதுவான கருத்து நிலவியது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். அவருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டபோதிலும், அவரது அரசியல் சாணக்கியத்தினால் போராட்டங்கள் பெரியளவில் முடக்கப்பட்டன. 

ஆனாலும், மக்கள் இன்னும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது தவிக்கின்றனர். விலைவாசி உயர்வு மக்களின் குரல்வளையை இறுக்கப் பிடித்து மூச்சு விட முடியாத நிலையை உருவாக்கிவிட்டது. 

எனினும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சத்தினால் அமைதியாக பலர் இருந்துவிட்டனர். ஆனாலும், பல இடங்களில் அரச அடக்குமுறைகளை தாண்டியும் போராட்டங்கள் தொடர்கின்றன. 

இன்னும் அரசின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர். அரசு இரும்புக்கரங்களினால் போராட்டங்களை அடக்கினாலும், மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் பல நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் பொதுவெளிக்கு வந்துவிட்டனர். இவர்களின்  அரசியல் கூட்டம் மலையகத்தின் முக்கிய நகர்களில் ஒன்றான நாவலப்பிட்டியில் நடைபெற்றது.

நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுதலை ! – சுபீட்சம்  – Supeedsam

ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அதிருப்தியில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக, அவர்களது அரசியல் கட்சிக்கு எதிராக, அவர்களது ஆதரவு அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய போது, மக்கள் கண்ணில் படாமல் தப்பி ஓடியவர்கள், இப்போது மிக தைரியமாக மீண்டும் அரசியல் களத்தில் மக்களின் முன்னாலேயே களம் இறங்கியுள்ளனர்.

ஆம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி தொகுதிக் கூட்டம் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மகிந்த ராஜபக்ஷ  தலைமை தாங்கினார்.

மஹிந்தவுக்கு எதிராக நாவலப்பிட்டியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், அங்கு மஹிந்தவின் வருகையை எதிர்த்து, எதிர்க்கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அல்ல,  ஐக்கிய மக்கள் சக்தியினர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரான சசங்க சம்பத் சஞ்சீவ தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் மகிந்தவின் வருகையை விட விலைவாசி அதிகரிப்பை கண்டித்தே அவர்கள் அதிகளவில் கோஷமிட்டனர். 

உண்மையில் மஹிந்த உள்ளிட்டவர்களின் மீது மக்களுக்கு இருந்த கோபத்துக்கு மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. 

நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாறாக, மஹிந்தவின் கூட்டத்துக்கு மக்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர். இந்த மக்கள் கூட்டம் அவர்களுக்கு தைரியத்தை கொடுத்திருக்க வேண்டும். அதனால்தான் எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. 

"நாவலப்பிட்டி தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும்" என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

"போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே 'சிஸ்டம் சேன்ஞ்'க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர். இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

அன்று எம்மை 'கள்ளன்' என்றனர். எம் மீது போலிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனால், இன்றும் அரசியல் இருப்புக்காக சேறு பூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. 

'கள்ளன்' 'கள்ளன்' என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதை விட, சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது. சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்" என்று நாமலும் கூறிவிட்டார்.

உண்மையில் மக்கள் தங்களுக்கு முழுமையான ஆதரவை மீண்டும் வழங்கிவிட்டனர் என்பது  போலவே இவர்களின் கருத்து இருக்கின்றது. 

மக்கள் எப்போதும் மறதிக்கு பழக்கப்பட்டவர்கள். இதனால் எதனையும் எளிதில் மறந்துவிடலாம் என நினைக்கக்கூடும். உண்மையில், அந்த பிரதேச மக்கள் ஏன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவில்லை? அனைத்தையும் மறந்துவிட்டனரா? 

எங்கள் ஊருக்கு வந்தால் நாம் விடமாட்டோம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், நாவலப்பிட்டி மக்கள் கூறுகையில், மகிந்தானந்தவுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். அவரது  ஆதரவாளர்களும் கண்டி உள்ளிட்ட வேறு இடங்களில் அழைத்து வரப்பட்டவர்களுமே  கூட்டத்தில் இருந்தனர். நாவலப்பிட்டி மக்கள் அதிகளவில் இருக்கவில்லை. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒழுங்கமைக்கப்படவில்லை. எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

மக்கள் வீதிக்கு இறங்கவில்லை, எதிர்க்கட்சி மட்டுமே போராடியது என்று கூறப்பட்டாலும், உண்மை வேறு. 

நாவலப்பிட்டியில் மஹிந்த வருகை தருவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே கடும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வீதிகளில் கடும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பிரதான பாதைகளும் முடக்கப்பட்டதன் காரணமாக மக்கள் வீதிக்கு இறங்குவதில் முனைப்பு காட்டவில்லை. 

அன்றாட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்ல முடியாது என்ற அச்சம். அப்படியே போராடினாலும், நடக்கப்போவது ஒன்றுமில்லை. அரிசி விலையா குறையப் போகிறது? சிறைக்கம்பியை தான் எண்ண வேண்டும் என்ற பயத்துடன் கூடிய விரக்தியே மக்களுக்கு உள்ளது. அதுதான் உண்மை! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13