(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா – பிரவுண்லோ தோட்டப் பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது குறித்த தோட்ட பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் அப்பகுதியில் பணிப்புரிந்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதோடு, குறித்த பெண்களின் உடல் நிலை குறித்து கவலையடைய தேவையில்லை எனவும், அவர்கள் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையகத்தில் தற்போது பிற்பகல் வேளையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.