வட மாகாணத்தில் பரவலாக சினிமாப்பானியில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மேலும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனா.

அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் இருந்து கைக்குண்டு 02, கத்திகள் 04, தங்க நகைகள் 28 பவுண், முகத்தை மூடி மறைத்து கட்டும் கறுப்பு துணிகள், முச்சக்கர வண்டி ஒன்று, மோட்டர் சைக்கிள் ஒன்று என்பனவும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந் நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு அமைவாக மூன்று மாத கால விளக்கமறியல் அனுமதியை நீதிமன்றத்தினூடாக பெற்றுக்கொண்ட பொலிசார் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் கொள்ளையடிக்க பயன்படுத்திய மேலும் இரண்டு வாள்கள் இரண்டு டோர்ச், ஒரு சோடி கையுறை,ஒரு குறடு போன்ற ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில் இன்று  வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், 

வடக்கில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொன்ட விசாரணைகளை அடுத்து ஒரு தொகுதி கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

குறித்த கொள்ளைக்காரர்கள் வவுனியா, நெடுங்கேணி, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு போன்ற காட்டுப்பகுதிகளில் வாள் கத்தி,மற்றும் கையுறை போன்றவற்றை மறைத்து வைத்திருந்து கொள்ளையிட்டபின் அக்காட்டு பிரதேசத்திலேயே மறைத்து வைத்துவிடுவார்கள் என தெரிவித்த பொலிசார் மேற்படி கொள்ளைகள் இந்திய சினிமாப்பாணியில் மக்களை பயமுறுத்துவதற்காக பெரிதாக செய்யப்பட்ட வாள்களை காட்டி நடத்தப்பட்டுள்ளாதாகவும் மேலும் தெரிவித்தனர்.